தொடு உணர்வினைப் பிரதிபலிக்கும் வகையில், மின்னணு சருமத்தை (e-skin) வடிவமைத்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இது, மாற்றுத்திறனாளிகள், சரும பாதிப்பு உள்ளவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மின்னணு சரும வடிவமைப்பு தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தனர். இதில், எலியின் மீது காகிதத்துண்டு போன்ற தடிமனான எலக்ட்ரானிக் சருமத்தின்ன் மென்மையான, நெகிழ்வான பகுதியைப் பொருத்திப் பரிசோதித்தனர். இது வெற்றிகரமாக அமைந்துள்ளதாக, ஜெனன் பாவோ தலைமையிலான ஆய்வுக்குழு `சயின்ஸ்' இதழிலில் வெளியாகி இருக்கும் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு சருமம் என்பது அழுத்தம் மற்றும் வெப்பநிலையை அளவிடும் எலக்ட்ரானிக் சர்க்யூட்கள் மற்றும் சென்சார்கள் கொண்ட மெல்லிய மற்றும் நெகிழக்கூடிய ரப்பர் பொருள்களால் ஆனது. இது, உடலில் நரம்புகளின் உணர்ச்சிகளைக் கண்டறிந்து சமிக்ஞைகளாக மூளைக்கு அனுப்பும். ஆராய்ச்சிக் குழுவினர் தங்களது ஆய்வில், எலியின் மீது மின்னணு சருமத்தைப் பொருத்திப் பரிசோதித்தனர். மின்னணு சருமத்தின் மீது மெல்லிய அழுத்தம் கொடுத்தபோது, எலியின் மூளை இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதிக்கு, அது சமிக்ஞைகளை அனுப்பியது. செருகக்கூடிய செயற்கை சினாப்ஸ் சாதனம் மூலம் ஆராய்ச்சியாளர்கள் எலியின் காலுக்கு சமிக்ஞைகளை அனுப்பியபோது, எலியின் கால் நகர்ந்தது.
இது குறித்து ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பாவ் கூறுகையில், ``நாங்கள் சில காலமாக மின்னணு சருமம் வடிவமைப்பது குறித்த ஆராய்ச்சி செய்தோம். மனித தொடுதலின் குறிப்பிடத்தக்க உணர்திறன்களைப் பிரதிபலிக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு தடையாக இல்லை" என்றார். ஆய்வின் முதல் ஆசிரியருமான வெய்சென் வாங், இந்த ஆய்வில் சருமம் போன்ற மின்னணு பொருள்களை மேம்படுத்துவது சவலாக இருந்தது என்றார்.

அறிவியலாளர்களின் இந்தக் கண்டுபிடிப்பு, சரும பாதிப்பு, பக்கவாதம் அல்லது கைகால்களை இழந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதேநேரம், மின்னணு சருமம் குறித்த விஷயத்தில் இன்னும் ஆராய்ச்சி தேவையென்றும், மனித உடலுடன் இணையும்போது இது எவ்வாறு இயங்கும் என்பதைப் பார்க்க வேண்டும் என்று மற்றொரு தரப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.