Published:Updated:

பேருந்துகளுக்குத் தனிப்பாதை, ஹைடெக் அம்சங்கள்... சென்னையின் நெரிசலைக் குறைக்குமா BRTS?

சென்னையில் இயங்கும் மாநகரப் பேருந்துகளுக்குத் தனிப்பாதை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. இது சென்னைச் சாலைகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்குமா?

Bus Rapid Transit System (BRTS)
Bus Rapid Transit System (BRTS) ( அ.பூஜா )

பஸ் ராபிட் டிரான்ஸிட் சிஸ்டம்... சுருக்கமாக BRTS. சென்னைச் சாலைகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், மாநகரப் பேருந்துகளின் பயண நேரத்தைக் குறைக்கவும் தமிழக அரசு கையில் எடுத்திருக்கும் புதிய முயற்சி இது. சென்னைக்குதான் இந்த BRTS புதிது, இந்தியாவில் ஏற்கெனவே புனே, விஜயவாடா, சூரத், அகமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த BRTS வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல ஆசிய கண்டத்தில் மட்டும் மொத்தம் 43 நகரங்களில், 1593 கி.மீ தூரத்திற்கு BRTS இருப்பதாகக் குறிப்பிடுகிறது உலக BRT அமைப்பு. இந்த BRTS-ஐ சென்னையிலும் அமல்படுத்துவதற்காக 2011-லேயே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு செயலாக்க அறிக்கையும் வெளியிடப்பட்டது. பின்னர் இதை விரிவாக உருவாக்கும் பொறுப்பு ICRA மேனேஜ்மென்ட் கன்சல்ட்டிங் சர்வீசஸ் லிமிடட் என்னும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

BRTS-ல் பயணிகள் தகவல் மையம்
BRTS-ல் பயணிகள் தகவல் மையம்

இந்நிறுவனம் அந்தச் செயலாக்க அறிக்கைகளை ஆராய்ந்து, சென்னையில் BRTS-ஐ செயல்படுத்துவதற்கான ஏழு வழித்தடங்களை தேர்வுசெய்து அதற்கான திட்ட வடிவமைப்பை உருவாக்கியிருக்கிறது. இதற்கடுத்து இந்த ஏழு வழித்தடங்களிழும் உள்ள மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை தற்போது நடத்திவருகிறது பல்லவன் போக்குவரத்து ஆலோசனை சேவை நிறுவனம். இந்த BRTS எப்படிச் செயல்படும், எப்படிப் பாதைகள் வடிவமைக்கப்படும் போன்ற அனைத்துத் தகவல்களும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு பின்னர் கருத்துகள் கேட்கப்பட்டன. முதல்கட்டமாக கோயம்பேடு - பூவிருந்தவல்லி வழித்தடத்துக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த BRTS எப்படிச் செயல்படும்?

தற்போது இருக்கும் பொதுவான போக்குவரத்துச் சாலைகளில் இந்த BRTS-க்காக தனிவழி அமைக்கப்படும். இந்த வழி ஏற்கெனவே இருக்கும் சாலைகளின் மையத்தில் அமையும். இதற்கு இருபுறமும் வழக்கம்போல பிற வாகனங்கள் பயணிக்கும். இந்தப் பிரத்யேக தனிவழியானது தடுப்புகள் மூலம் பிரிக்கப்படும். இந்த வழிகளைக் கண்காணிக்க தனி கேமராக்களும் பொருத்தப்படும்.

பேருந்துகள் பொதுப் போக்குவரத்திலிருந்து விலகிவிடுவதால், வழக்கமான சாலைகளில் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். பேருந்துகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்காது என்பதால் வழக்கத்தைவிடவும் விரைவாகச் செல்லும்.

கோயம்பேடு - பூவிருந்தவல்லி வழித்தடம்
கோயம்பேடு - பூவிருந்தவல்லி வழித்தடம்

தற்போது இருக்கும் வழக்கமான பேருந்துகள் போல் இல்லாமல், இந்த BRTS பேருந்துகளில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். எப்படி மெட்ரோ ரயில்களில் படிகளின்றி நேரடியாக ஏறுகிறோமோ, அதேபோல இதிலும் ஏறமுடியும். இதற்கான, பேருந்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும். பேருந்துகளில் தானியங்கி கதவுகள் இருக்கும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் இருக்கும்.

இந்த BRTS வழித்தடங்களின்றி, பிற வழித்தடங்களில் இந்த BRTS சிறப்புப் பேருந்துகள் செல்ல நேரிடும்போது போக்குவரத்து சிக்னல்களில் அவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். டிக்கெட்களுக்காக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். இதைப் பேருந்தில் ஏறும்போதே கதவுகளில் ஸ்வைப் செய்துகொள்ளலாம். இதுபோக வழக்கமான டிக்கெட்களை அனைத்து BRTS பேருந்து நிறுத்தங்களில் முன்பே பெற்றுக்கொள்ளமுடியும்.

அதிகரிக்கும் எம்.டி.சி பேருந்து விபத்துகள்... காலாவதியான பேருந்துகள்தான் காரணமா..?

இந்த BRTS வடிவமைப்பு முழுவதும் ஏற்கெனவே இருக்கும் சாலைகளை வைத்தே திட்டமிடப்பட்டுள்ளது. எனவே புதிதாக சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தவேண்டிய அவசியம் இருக்காது. ஒருவேளை சில இடங்களில் இந்த BRTS அமைப்பிற்கான விரிவான சாலை அமைப்பு இல்லையெனில் அங்கும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாது. மாறாக, அங்கு வழக்கமான மிக்ஸ்டு டிராஃபிக் முறையே பின்பற்றப்படும்.

மொத்தம் 120 கி.மீ தொலைவிற்கு இந்த BRTS வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவான பலவழிச் சாலைகளில் ஒரு பாதையின் அகலம் 3.5 மீட்டர் இருக்கவேண்டும். இந்த விதியைப் பின்பற்றி BRTS-ல் பேருந்து செல்லும் பாதை 3.5 அகலமும், பேருந்து நிறுத்தம் அமையும் இடங்களில் பாதை 7 மீட்டர் அகலமும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிறுத்தங்களோடு ஆங்காங்கே பிற போக்குவரத்து நிலையங்களும் இணையும்படி வழிசெய்யப்பட்டுள்ளது.

BRTS வழித்தட பேருந்துகளுக்கான டிக்கெட் கவுன்ட்டர்
BRTS வழித்தட பேருந்துகளுக்கான டிக்கெட் கவுன்ட்டர்

முதல்கட்டமாக மட்டுமே இந்த 7 வழித்தடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அரசு முழுமையாகச் செயல்படுத்திய பின்பு, இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு இரண்டாவது கட்டமும் உருவாக்கப்படலாம். அதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.

தற்போது இருக்கும் பேருந்து வழித்தடங்களிலேயே மாற்றங்கள் செய்து இதை நடைமுறைப்படுத்த முடியும் என்பதால் இதற்கு மிக அதிக செலவு இருக்காது. மேலும், மெட்ரோ ரயில்களைவிட டிக்கெட் விலை குறைவு, வேகமான பயணம் போன்ற காரணங்களுக்காக மக்கள் இதை நாடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதுபோக சொந்த வானங்களில் செல்வோரும் பயண நேரம் கருதி இதில் பயணித்தால், சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை இன்னுமே குறையும். இது அவர்களுக்கு எரிபொருள் சிக்கனத்திற்கு மட்டும் வழிவகுக்காமல், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும். இந்தக் காரணங்களால் BRTS-க்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது திட்டமிடப்பட்டுள்ள வழித்தடங்களும் அவற்றின் தொலைவு விவரங்களும் பின்வருமாறு.

1. கோயம்பேடு - பூவிருந்தவல்லி - 14 கி.மீ

2. கோயம்பேடு - அம்பத்தூர் - 7.70 கி.மீ

3. கோயம்பேடு - மாதவரம் - 12.40 கி.மீ

4. சைதாப்பேட்டை - சிறுசேரி - 24.25 கி.மீ

5. சைதாப்பேட்டை - மஹிந்திரா சிட்டி - 42.00 கி.மீ

6. துரைப்பாக்கம் - குரோம்பேட்டை - 10.60 கி.மீ

7. கோயம்பேடு - சைதாப்பேட்டை - 9.00 கி.மீ

பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம்
பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம்

இப்படி நிறைய நன்மைகள் இருந்தாலும் சரியான திட்டமிடல்கள் இல்லையெனில் தோல்வியடையவும் வாய்ப்புண்டு. உதாரணமாக, டெல்லியில் 2008-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டு பேருந்து வழிகளில் ஏற்பட்ட அதிகமான நெரிசலின் காரணமாக 2016-ம் ஆண்டு கைவிடப்பட்டது. இங்கு அத்தகைய சிக்கல்கள் எழாமல், போக்குவரத்து நெரிசலை BRTS கட்டுப்படுத்தும் என நம்புவோம்.