Published:Updated:

ஆர்டிக் கடலில் பயணித்த மாலுமிகள் ஆராய்ச்சியாளர்களான சுவாரஸ்ய கதை!

ஆர்டிக் பிரதேசம்
ஆர்டிக் பிரதேசம் ( W.E.Parry, Artist )

ராயல் கடற்படையில் பணிபுரிந்து அங்குப் பயணித்த பல கமாண்டர்கள், பயணத்தின்போது அறிவியலுக்குச் செய்த பங்களிப்புகளால் ராயல் சொசைட்டி ஆஃப் லண்டன் என்ற அறிவியல் அமைப்பில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டார்கள்.

மேற்கத்திய மனிதர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடல்வழிப் பயணத்தையும் உலகின் அனைத்து மூலைகளுக்கும் செல்ல தேடியலைந்த பாதைகளையும் வரலாற்றின் பக்கங்களில் புரட்டிப் பார்த்தால் தெரியும். அப்படிப் பாதை தேடியலைந்ததில் ஆர்டிக் பிரதேசத்தின் நிலப்பகுதிகளைத் தேடியவர்களும் அடக்கம். பிரிட்டிஷ் ராயல் கடற்படையைச் சேர்ந்த லூட்டனன்ட் வில்லியம் பெர்ரி 1819-ம் ஆண்டு அதற்கான முதல் தேடலைத் தொடங்கினார். வரலாற்றில் அதிலிருந்து சுமார் 75 ஆண்டுகள் மிகக் கடுமையான பாடங்களை மாலுமிகள் எதிர்கொண்டார்கள். அந்த அனுபவங்களில் பலருடைய உயிர்களைப் பலி வாங்கியது ஆர்டிக்.

19-ம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டில் வரையபட்ட வரைபடம்
19-ம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டில் வரையபட்ட வரைபடம்
Wikimedia

ஆர்டிக் பிரதேசத்தில் தப்பிப் பிழைத்திருப்பதே கடுமையான ஒன்றாக இருந்த காலகட்டம் அது. பனி சூழ்ந்த பகுதியில் பிழைத்திருக்கத் தகுந்த தொழில்நுட்பங்களையோ நுணுக்கங்களையோ கண்டுபிடிக்காத காலகட்டம். இந்தப் பயணங்கள்தான் அந்தக் கண்டுபிடிப்புகளுக்கும் தூண்டுதலாக அமைந்தன என்றால் அது மிகையாகாது. நிலப்பகுதியின் தன்மை, பரப்பளவு, கடல் பரப்பில் படர்ந்திருக்கும் பனித்தகடுகள், அங்கு வாழ்ந்த பூர்வகுடிகளான இனூட் (Inuit) என்று பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யத் தொடங்கியதும் அந்தக் காலகட்டத்தில்தான்.

Vikatan

1819-ம் ஆண்டிலிருந்து 100 வருடங்கள் கழித்துப் பார்த்தபோது, அதுவரை சுமார் 200 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்தப் பயணங்களில் 40 சதவிகிதப் பயணங்கள் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிகோலின. இந்தக் காரணங்களால் காலப்போக்கில் கடற்படை வீரர்களுக்கு அறிவியல் ஆய்வுக்குப் பயன்படும் சாதனங்களை கையளவும் அறிவியல்பூர்வத் தகவல்களையும் மாதிரிகளையும் சேகரிக்கவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ராயல் கடற்படையில் பணிபுரிந்து அங்குப் பயணித்த பல கமாண்டர்கள், பயணத்தின்போது அறிவியலுக்குச் செய்த பங்களிப்புகளால் ராயல் சொசைட்டி ஆஃப் லண்டன் என்ற அறிவியல் அமைப்பில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டார்கள்.

கிரீன்லாந்து
கிரீன்லாந்து

1819-ம் ஆண்டில் கனடிய ஆர்டிக் பகுதிக்குச் செல்வதைப் பற்றிக் கற்பனை செய்துபாருங்கள். அப்போது அங்கு மூன்றே பகுதிகளின் விவரங்கள்தான் சேகரிக்கப்பட்டிருந்தன. மற்றவற்றில் என்ன மாதிரியான காலநிலை நிலவியது, என்னென்ன அபாயங்கள் இருந்தன என்று எதுவுமே தெரியாத காலகட்டம். அப்படியிருக்க எதிர்கொள்ளும் அபாயங்களை எப்படிச் சமாளிப்பது என்றும் தெரியாது. அந்த நிலையில்தான் ஆர்டிக்கைத் தேடிச் செல்லத் தொடங்கினார்கள் மேற்கத்திய மாலுமிகள். 1820-களின் போது, ஆர்டிக் பிரதேசத்தின் வரைபடம் என்று பார்த்தால் ஒருசிலபகுதிகளைத் தவிர அது கிட்டத்தட்ட வெற்றுக் காகிதமாகத்தான் இருந்துள்ளது.

அங்கிருந்த காற்றழுத்தம், பனி, நீர், நிலம், உயிரினங்கள், மனிதக் குடியேற்றங்கள் என்று எதைப் பற்றியுமே தெரிந்திருக்கவில்லை. ஆர்டிக் பெருங்கடலில் பனியால் சூழப்பட்ட தீவுகள் இருக்குமென்று யாரும் அப்போது நினைக்கவில்லை. அவ்வளவு ஏன், பலரும் ஆர்டிக் பிரதேசம் பனியால் சூழப்பட்டிருக்கும் என்றே நினைத்துப் பார்க்கவில்லை. அது அவர்கள் எதிர்பாராத பல பிரச்னைகளையும் சந்திக்க வைத்தது. வட அமெரிக்கக் கண்டத்திற்கு மேலேயிருந்த ஆர்டிக் கடலைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆய்வு செய்தவர்களின் முடிவுகள்தான் எதிர்காலத்தில் பல கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக விளங்கியது.

அப்படி மேற்கொள்ளப்பட்ட கடற்பயணங்களில் முக்கியமானது நரேஸ் கடற்பயணம் (Nares Expedition). 1875-ம் ஆண்டு இரண்டு கப்பல்களில் சர் ஜியார்ஜ் ஸ்டிராங் நரேஸ் என்பவரின் தலைமையில் தொடங்கிய பயணம்.

ஆர்டிக் பிரதேசத்தைப் போதுமான அளவுக்குத் தெரிந்துகொண்டதாக பிரிட்டிஷ் கடற்படை நினைத்தது. அவர்கள் அதைக் கைப்பற்ற முடிவு செய்தார்கள். அதற்கு முன்னதாக இன்னும் கூடுதல் தகவல்களைச் சேகரிக்கத்தான் இந்தப் பயணம். ஆர்டிக் பயணங்களைத் தொடங்கி 56 ஆண்டுகள் கழித்து அந்தப் பயணம் தொடங்கியது. அந்த 56 ஆண்டுகளில் சென்ற பயணங்களில் கிட்டத்தட்ட ஆர்டிக்கின் பெரும்பாலான கரையோரங்களை வரைபடமாக்கியிருந்தனர். இந்தப் பயணத்தில் கூடுதலாக மேலும் பல தகவல்களைச் சேகரித்தார்கள் என்பது தனி கதை. ஏற்கெனவே தொலைந்துபோன மாலுமிகளை மீட்டுக் கொண்டுவந்ததும் இந்தப் பயணத்தின் ஒரு தனிச்சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

நரேஸ் தலைமையிலான குழுவின் பயணம் கிரீன்லாந்து மற்றும் எல்லீஸ்மியர் தீவு வழியாக ஆர்டிக் பெருங்கடலில் பயணித்தனர். நரேஸுடைய குழு சென்ற வழியெல்லாம் அறிவியல் தகவல்களையும் ஆங்காங்கே சேகரித்தபடி சென்றனர். பதினெட்டாம் நூற்றாண்டில் இப்படி அறிவியல்பூர்வ மாதிரிகளைச் சேகரிப்பதும் தகவல்களைப் பதிவு செய்வதும் கடற்பயணங்களில் அவ்வப்போது நடந்தன. அடுத்து வந்த 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் அது ஒரு வழக்கமாகவே மாறியது, இல்லை மாற்றப்பட்டது.

இத்தனை தகவல்களைச் சேகரித்து வந்த அந்தப் பயணத்தின் தொடக்கத்தில் அவர்கள் அக்கறையின்றிச் செய்த ஒரு மறுதலிப்பு, அவர்களைப் பல சேதங்களையும் உயிரிழப்புகளையும் சந்திக்க வைத்தது.
பிரிட்டீஷ் கடற்படைக் கொடி
பிரிட்டீஷ் கடற்படைக் கொடி
Wikimedia

1875-ம் ஆண்டு நரேஸ் பயணம் தொடங்குவதற்கு முன்பு வரை பல பயணங்களில் ஆர்டிக்கின் தகவல்களைச் சேகரித்திருந்தார்கள். ஆனால், அங்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் நுணுக்கங்களைப் பதிவு செய்யவோ கண்டுபிடிக்கவோ இல்லை. அதைச் செய்திருந்தது ஜான் ரே மற்றும் அவரது குழு மட்டும்தான். ஹட்சன் பே கம்பெனியின் ஊழியராக இருந்த அவர், ஆர்டிக் மற்றும் கிரீன்லாந்தில் வாழ்ந்துகொண்டிருந்த இனூட் மக்களிடமிருந்து அதற்கான நுணுக்கங்களைக் கற்றிருந்தார். அவரது குழுக்கள்தான் அதிக நாள்கள் ஆர்டிக்கில் பிழைத்திருந்தது. பனி வீடு என்றழைக்கப்படும் இக்லூவை (Igloo) ஒரே மணிநேரத்தில் கட்டி முடித்துவிட முடியுமென்று ரே அழுத்தமாகக் கூறினார். கெட்டியான துணிகளால் கூடாரம் அமைப்பதால் எந்தவிதப் பாதுகாப்பும் கிடைத்துவிடாது என்பதையும் முதலில் எடுத்துக் கூறியது இவர்தான். அதேபோல் விலங்குகளின் தோலில் செய்யப்பட்ட போர்வைகள்தான் அந்தக் குளிரில் காப்பாற்றும் என்று வலியுறுத்தினார்.

ஆர்டிக்கில் பிழைத்திருக்க அவர் கூறிய அடிப்படைகள் மிகவும் எளிமையாகவே இருந்தன. ஆடைகள் எப்போதும் ஈரமில்லாமல் உலர்ந்திருக்க வேண்டும், பனி வீடுகள் கட்டக் கற்றுக்கொள்ள வேண்டும், கடல் நாய்களை (Seals) வேட்டையாடத் தெரிந்திருக்க வேண்டும், விலங்குத் தோலில் நெய்யப்பட்ட போர்வையைப் பயன்படுத்த வேண்டும். அவ்வளவே தான்.

துரதிர்ஷ்டம் என்னவென்றால், ஜான் ரே கூறிய அத்தனை அறிவுரைகளும் தவிர்க்கப்பட்டன.

அவர்கள் பனி வீடு கட்டவில்லை, தோலில் நெய்த போர்வையைப் பயன்படுத்தவில்லை. பிரிட்டிஷ் கடற்படை, அந்த நுணுக்கங்களை நாகரிகமற்ற பூர்வகுடிகள் செய்வதென்று கூறி வெறுத்தனர். அதற்குகு நேர் எதிராகச் செய்தார்கள். அதற்கான பலன்களையும் அனுபவித்தார்கள்.

ஜான் ரே சொன்னவற்றை மறுத்ததால், உலர்வாகவும் வெப்பத்தோடும் இருக்க முடியாமல் பிரிட்டிஷ் கப்பற்படை அவதிப்படத் தொடங்கியது. இனூட் மக்கள் பனியில் செல்வதற்கு நாய்களால் இழுக்கப்பட்டுச் சறுக்கிச் செல்லும் வாகனங்களைப் பயன்படுத்தினார்கள். அதை மறுத்த ஆங்கிலேயர்கள் சக்கரங்கள் பொறுத்திய வாகனங்களைப் பனியில் பயன்படுத்தினார்கள். இவை முந்தையதை விடவும் கனமாக இருந்தன. ஏற்கெனவே கொண்டு வந்த வேகத்தில் பனியில் விரைத்து எடை மிகுந்துவிட்ட டெண்டுகளையும் சக்கரம் பொருந்திய வாகனங்களையும் யாராலும் சுமக்கவும் இழுத்துச் செல்லவும் முடியவில்லை. மாலுமிகள் இந்த வேலைகளைச் செய்வதற்காகச் செலுத்திய உழைப்பை ஈடுகட்டும் அளவுக்கு அவர்கள் கொண்டுவந்த உணவும் போதவில்லை. எலுமிச்சைச் சாறுகள் உரைந்துவிடாமலிருக்க அதில் ரம் கலந்து கொண்டுபோகச் சொல்லிப் பரிந்துரைத்தார் ரே. அதை மறுத்து அவர்கள் கொண்டுவந்த எலுமிச்சைச் சாறுகள் அப்படியே உறைந்துபோயின.

பதிவு செய்த உயிரினங்கள்
பதிவு செய்த உயிரினங்கள்
Wikimedia

இதைவிடக் கொடுமை என்னவென்றால் குளிர் தாங்காமல் சென்ற மூன்று நாள்களிலேயே பலரையும் அவர்கள் கொண்டு சென்ற வாகனங்களிலேயே சடலங்களாகக் கொண்டு செல்லவேண்டி வந்தது. ஆர்டிக் பிரதேசத்தைச் சுற்றியவர்களிலேயே அதிக நாள்கள் பிழைத்திருந்த ஜான் ரே சொன்னதை மறுதலித்து வந்ததற்கான பலன்களை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இருந்தும் இந்தப் பயணத்தைப் படிக்கையில் நம்மை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் என்னவென்றால், இத்தனை இன்னல்களுக்கு நடுவிலும் அவர்கள் தம் பணிகளைத் தவறவிடவில்லை. வரைபடம் உருவாக்கவும் அறிவியல் தகவல்கள் மற்றும் மாதிரிகளைச் சேகரிக்கவும் அவர்கள் முனைந்துள்ளார்கள். அதில் மதிப்புமிக்கதாகக் கருதப்பட வேண்டிய ஆய்வுகளையும் அவர்கள் செய்துமுடித்தார்கள்.

Vikatan

இறுதியாக, அந்தப் பகுதியின் உயிரியல், நிலவியல், வானியல், காலநிலையியல் (Climatology) போன்ற பல கோணங்களில் தகவல்களைச் சேகரித்தார்கள். அந்தப் பயணத்தில் பங்கு பெற்ற ஆய்வாளர்கள் சுமார் 40 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கள் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் வெளியிட்டார்கள். இருபதாம் நூற்றாண்டில் முப்பதுகளுக்குப் பிறகு வான்வழி ஒளிப்படங்கள் எடுக்கப்படும் வரையிலுமே எல்லீஸ்மியர் தீவு வழியாகச் சென்று இவர்கள் உருவாக்கிய வரைபடம்தான் ஆர்டிக் பயணத்திற்கான அடிப்படை ஆதாரமாக விளங்கிக் கொண்டிருந்தது. ஜான் ரே பரிந்துரைத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளாத காரணத்தால், நரேஸ் மற்றும் அவரது குழு பல உயிரிழப்புகளையும் சேதங்களையும் சந்தித்ததோடு ஆர்டிக் துருவத்தையும் சென்றடைய முடியவில்லை. அதனால், கடும் விமர்சனத்துக்கு அவர் உள்ளானார். இருப்பினும் அவர் சேகரித்துக் கொண்டுவந்த அறிவியல் தகவல்களின் மதிப்பு கருதி ராயல் நிலவியல் சொசைட்டியிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றார்.

சர் ஜியார்ஜ் ஸ்டிராங் நரேஸ் தலைமையில் பயணித்த குழுவின் அனுபவங்கள் ஆர்டிக் பிரதேசத்தை ஆய்வுசெய்யச் சென்ற பின்னாளைய மாலுமிகள் மத்தியில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அதை ஆதாரமாக வைத்துப் பலரும் பல தகவல்களையும் தெரிந்துகொண்டார்கள். பல பாடங்களையும் கற்றுக்கொண்டார்கள்.
ஆய்வுப் பதிவுகள்
ஆய்வுப் பதிவுகள்
Wikimedia

19-ம் நூற்றாண்டில் இப்படி மேற்கொள்ளப்பட்ட ஆர்டிக் பயணங்கள் அதை வரைபடமாக்குவதில் மட்டுமன்றி அங்கு வாழும் உயிரினங்கள், தாவரங்கள், நிலவியல், நீரியல், இன வரைவியல் ஆய்வுளை விரிவாக்குவதிலும் பங்கு வகித்தது.

இன்று பனிப்பாறைகள் உருகிவரும் சூழ்நிலையில் ஆர்டிக் பிரதேசத்தின் மீதான ஆய்வுகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன. இன்றும்கூட, 19-ம் நூற்றாண்டில் இப்படிப் பயணித்த மாலுமிகள் சேகரித்த தகவல்கள் இத்தகைய ஆய்வுகளில் பல செய்திகளைக் கொடுத்து உதவிக் கொண்டிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு