
பூமியைப் போன்ற உயிர்கள் வாழத் தகுதியான வேறு கிரகங்கள் இருக்கின்றனவா, வேறு வடிவில் உயிர்கள் வாழ்கின்றனவா என்ற நோக்கில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏலியன்ஸ்... மனித இனத்தின் நீண்டகாலத் தேடல்களுள் ஒன்று. ஹாலிவுட் அடித்து உடைத்த சயின்ஸ் பிக்ஷன் பர்னிச்சர்களில் முக்கியமானது இது. பல கட்டுக்கதைகளும் சதிக்கோட்பாடுகளும் மட்டுமே இருக்கிற தென்றாலும் ஏலியன்ஸ் நிச்சயம் இருப்பார்கள் என மனிதன் நம்ப முக்கிய காரணம் ஒரே ஒரு கேள்வி... ‘இத்தனை பெரிய அண்டத்தில் நாம மட்டும்தான் இருக்கோம்ங்கிறது நம்புற மாதிரியா பாஸ் இருக்கு?!’
பூமியைப் போன்ற உயிர்கள் வாழத் தகுதியான வேறு கிரகங்கள் இருக்கின்றனவா, வேறு வடிவில் உயிர்கள் வாழ்கின்றனவா என்ற நோக்கில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. ‘எனது வாழ்நாளுக்குள் செவ்வாயில் காலனி அமைத்துக் குடிபுகுவேன்’ என்கிறார் டெக் ஜீனியஸ் எலான் மஸ்க். ஆனால், செவ்வாயில் குடிபுகலாமா, பல நூறு ஒளியாண்டுகள் தள்ளி இருக்கும் கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா என்றெல்லாம் தேடிய மனிதர்கள் இத்தனை வருடங்களாக அண்டை கிரகமான வெள்ளியை (Venus) கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை. ஆம், கடந்த வாரம் ஒரு முக்கிய ஆராய்ச்சி, இந்த நொடியில்கூட வெள்ளியில் உயிர்கள் வாழ்ந்து கொண்டிருப்ப தற்கான வாய்ப்புகள் அதிகம் என உலகுக்குச் சொல்லியிருக்கிறது.

இத்தனை வருட விண்வெளி ஆராய்ச்சியில் ‘உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?’ என்ற கேள்வியுடன் நாம் வெள்ளியைப் பார்த்ததே இல்லை. இதற்குக் காரணம் உண்டு. நமக்குத் தெரிந்து உயிர்கள் வாழத் தேவை என நினைக்கும் எந்த ஒரு விஷயமுமே வெள்ளியில் கிடையாது. சல்ப்யூரிக் அமில மேகங்கள், உலோகங்களையும் உருக்கிவிடும் வெப்பம் என நரகம் என்று ஒன்று இருந்தால் அது வெள்ளி போன்றதொரு சூழலைத்தான் கொண்டிருக்கும் எனச் சொல்லிவிடலாம். இங்குதான் தற்போது உயிர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம் என்கிறது இந்த ஆய்வு.

விண்வெளி ஆராய்ச்சி உலகையே புரட்டிப்போட்டிருக்கும் இந்த ஆய்வை மேற்கொண்டது இங்கிலாந்து கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு. பேராசிரியர் ஜேன் க்ரீவ்ஸ் தலைமையிலான இந்தக் குழு அப்படியென்ன கண்டுபிடித்துவிட்டது... நேரடியாக உயிர்கள் இருப்பதை இவர்கள் பார்க்கவோ, கண்டறியவோ இல்லை. முக்கிய ரசாயன வாயு ஒன்று வெள்ளியின் வளிமண்டலத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர், அவ்வளவுதான். அந்த வாயு ‘Phosphine’(PH3). மனிதர்களுக்குத் தெரிந்த வரையில் Phosphine வாழும் உயிர்கள் இல்லாமல் இயற்கையாக உருவாக வாய்ப்பே இல்லை. அதனால்தான் வெள்ளியில் நிச்சயம் ஏதோ ஒரு வடிவில் நுண்ணுயிர்களாவது வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என இந்த ஆய்வின் மூலம் தெரிவிக்கின்றனர். இங்கு, Phosphine-ஐ நம்மைப்போன்ற உயிரினங்களின் குடல்களில் பார்க்கலாம், பென்குயின் மற்றும் சில உயிரினங்களின் கழிவுகளில் பார்க்கலாம்.

உயிரியல் விளைவுகள் அல்லாமல் இதைத் தயாரிக்க முடியாது என்றெல்லாம் இல்லை. ஆனால், PH3 என்னும் இதன் வேதியியல் கட்டமைப்பை உருவாக்க ஒழுங்கான நடை முறைகள் பின்பற்றப்பட வேண்டும், அதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்படித்தான் தொழிற்சாலைகளில் Phosphine உருவாக்கப்படுகிறது. ராணுவங்கள் சில இதை வேதியியல் ஆயுதமாகக்கூடப் பயன்படுத்துகின்றன. ஆனால், அப்படியான ஒரு சூழல் வெள்ளியில் இருக்க வாய்ப்பே இல்லை. இதனால்தான் மறைமுகமாக இது உயிர்கள் இருப்பதற்கான சான்று என அடித்துச் சொல்கிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.

ஜேன் க்ரீவ்ஸ் குழு, முதலில் ஹவாயில் இருக்கும் ஜேம்ஸ் கிளெர்க் மேக்ஸ்வெல் தொலைநோக்கி வழியாக வெள்ளியில் Phosphine இருப்பதைக் கண்டுபிடித்தது. ஆனால் ஒன்றுக்கு இரண்டு முறை இதை உறுதி செய்துகொள்வோம் என சிலியில் இருக்கும் ALMA ரேடியோ தொலைநோக்கி மூலம் இதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். வெள்ளியின் புவி மண்டலத்தில் 50-60 கிலோமீட்டர் உயரத்தில் இந்த Phosphine வாயுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆராயப்பட்டதில் 100 கோடியில் 10-20 பகுதிகள் Phosphine இருந்தது தெரியவந்துள்ளது. பார்க்க மிகவும் குறைவாக இருப்பதுபோலத் தெரிந்தாலும் இதுவே அதிகம் என்கிறார்கள்.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தற்போது பூமியில் இருப்பதுபோன்ற அதே தட்பவெப்ப சூழ்நிலைகளைத்தான் வெள்ளி கொண்டிருக்க வேண்டும் என்கின்றன ஆராய்ச்சிகள். பூமியில் தற்போது இருப்பதுபோல நீராலான கடல்கள்கூட அங்கு 70 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கலாமாம். அளவிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியான கிரகங்கள்தான் பூமியும் வெள்ளியும். ஆனால் இத்தனை ஆண்டுகளில் சூரியனின் தாக்கத்தால் மொத்தமாகச் சிதைந்துவிட்டது கிரகம். இன்று வெள்ளியின் நிலப்பரப்பில் வெப்பம் என்பது 426 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. அழுத்தம் பூமியில் இருப்பதைவிட 90 மடங்கு அதிகம் இருக்கிறது. அதாவது 3,000 அடி நீரில் மூழ்கினால் எவ்வளவு அழுத்தம் இருக்குமோ அவ்வளவு அழுத்தம் வெள்ளியின் நிலப்பரப்பிலேயே இருக்கும். இதனால்தான் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள மிகவும் சவாலான கிரகமாக இருக்கிறது வெள்ளி. நிலத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் உயரத்தில் இதே நிலை இல்லை. 30 டிகிரி செல்சியஸ் வெப்பம், கிட்டத்தட்ட பூமியின் பரப்பில் இருக்கும் அதே அழுத்தம் என நமக்குத் தெரிந்த, உயிர்கள் இருக்க ஏற்ற பகுதியாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட இந்த உயரத்தில்தான் தற்போது Phosphine வாயு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி கண்டு இப்போது இந்த உயரத்திற்கு வந்திருக்கலாம் எனக் கணிக்கின்றனர். நாம் இதுவரை அறியாத வேதியியல் விளைவாகவும் இது இருக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் சில ஆராய்ச்சியாளர்கள். எது எப்படியோ இனி செவ்வாய் அளவுக்கு வெள்ளியிலும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் கவனம் செலுத்தும் என்பது மட்டும் உறுதி.
நாசாவின் நிர்வாகத் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டீன் “வெள்ளிக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது” என இந்தக் கண்டுபிடிப்பு குறித்துப் பதிவிட்டுவிட்டார். ஆனால், வெள்ளியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இப்போது Akatsuki என்ற ஜப்பானின் விண்கலம் ஒன்று மட்டும்தான் வெள்ளியைச் சுற்றிவந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் நிலப்பரப்பில் தரையிறங்கி ஆராய்ச்சிகள் மேற்கொள்வது என்பது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அடைய முடியாத இலக்காகவே இருந்துவருகிறது. இப்படியான ஒரு முக்கிய நேரத்தில்தான் இஸ்ரோ 2023-ல் வெள்ளிக்கு ‘சுக்ரயான்’ என்னும் விண்கலனை அனுப்பவிருக்கிறது. இதனால் இப்போது மொத்த விண்வெளி ஆராய்ச்சி உலகின் பார்வையுமே இஸ்ரோ பக்கம்தான்!