சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஆராய்ச்சி, கட்டமைப்பு, பழுதுபார்ப்பது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பணி நேரம் தவிரப் பொழுதுபோக்காகவும் சில விஷயங்களை அவர்கள் செய்வதுண்டு. அதில் முக்கியமானது புகைப்படம் எடுப்பது.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் சில இடங்களில் வெளிப்புறத்தைப் பார்க்க முடியும். அதன் வழியாக எடுக்கப்படும் புகைப்படங்களில் பூமியை முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்க முடியும். நாசாவோ அல்லது அதை எடுத்தவர்களோ அவ்வப்போது அவற்றை வெளியிடுவார்கள். அப்படி நாசா தற்போது வெளியிட்டிருப்பது ஒரு எரிமலை வெடிப்பின் புகைப்படம்.
95 வருடத் தூக்கத்திலிருந்து விழித்த எரிமலை
உலகின் பல இடங்களில் எரிமலைகள் அவற்றின் சுயரூபத்தை மறைத்து உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவை எப்போது விழித்துக் கொள்ளும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படித் தூங்கிக் கொண்டிருந்த ஒரு எரிமலைதான் ரெய்கோக் எரிமலை (Raikoke Volcano). ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பப் பகுதியில் உள்ள குரில் தீவில் அமைந்திருக்கிறது இந்த எரிமலை. ரெய்கோக்கின் அருகில் வேறு சில எரிமலைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இது மற்றவை போல இல்லாமல் அரிதாகத்தான் உயிர்ப்படைகிறது. இதற்கு முன்பு 1778-ம் ஆண்டு வெடித்த இது அதன் பின்னர் 1924-ம் ஆண்டில்தான் இறுதியாக வெடித்தது. அதன்பின்னர் உறக்க நிலைக்குச் சென்றுவிட்டது.

இந்த எரிமலை அமைந்திருக்கும் குரில் தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை என்பதால் இதைப் பற்றி யாரும் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. இறுதியாக வெடித்து 95 வருடங்களைக் கடந்து விட்ட பிறகு கடந்த 22-ம் தேதி காலையில் உயிர்ப்படைந்திருக்கிறது ரெய்கோக் எரிமலை. 700 மீட்டர் அகலம் கொண்ட இதன் வாய்ப்பகுதியில் இருந்து தூசியும் வாயுவும் வெளியேறியிருக்கின்றன. வடக்கு பசிபிக் பெருங்கடலின் மேலே 13 முதல் 17 கிலோமீட்டர் உயரத்தை இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக உருவான தூசிப் படலம் எட்டியிருக்கிறது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் அது படம் பிடிக்கப்பட்டதுதான். ரெய்கோக் எரிமலை வெடிப்பால் உருவான தூசிப் படலத்தை விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள்கள் அடையாளம் கண்டு அதைப் படம் பிடித்திருக்கின்றன.
புகை மண்டலத்தின் அடிப்பகுதியில் காணப்படும் வெள்ளை நிறப் பகுதியானது மேகங்கள் சுருங்கியதால் உருவான நீராவியாக இருக்கலாம். அல்லது எரிமலைக்குழம்பு கடல் நீரைத் தொட்டதால் உருவான நீராவியாகவும் இருக்கலாம். காரணம் அந்த எரிமலை அமைந்திருக்கும் தீவுப் பகுதியின் சுற்றளவு மிகவும் சிறிதானதுசைமன் கார்ன்
ஜப்பானின் செயற்கைக்கோளான ஹிமாவரி-8 இந்த எரிமலை வெடிப்பு நிகழ்வை அழகாகப் படமாக்கியிருக்கிறது.
அதேபோல பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் ஒருவரும் இதைப் படம்பிடித்திருக்கிறார். ஆனால் அந்த விண்வெளி வீரரின் பெயர் வெளியிடப்படவில்லை.

எரிமலை வெடித்ததன் காரணமாக அதிலிருந்து வெளியேறும் புகையை முற்றிலும் புதிய கோணத்தில் காட்டுகிறது இந்த புகைப்படம். வெடித்த பின்னர் கலையாமல் இருக்கும் அந்த புகை மண்டலத்தைப் படம் பிடிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். இந்த புகைப்படம் 3 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட Nikon D5 என்ற விலை உயர்ந்த கேமராவில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
"என்ன ஒரு அற்புதமான புகைப்படம் ?" என இதைப் பார்த்து வியந்திருக்கிறார் மிக்சிகன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எரிமலை ஆய்வாளரான சைமன் கார்ன் (Simon Carn). "புகை மண்டலத்தின் அடிப்பகுதியில் காணப்படும் வெள்ளை நிறப் பகுதியானது மேகங்கள் சுருங்கியதால் உருவான நீராவியாக இருக்கலாம். அல்லது எரிமலைக்குழம்பு கடல் நீரைத் தொட்டதால் உருவான நீராவியாகவும் இருக்கலாம். காரணம் அந்த எரிமலை அமைந்திருக்கும் தீவுப் பகுதியின் சுற்றளவு மிகவும் சிறிதானது" என்று சில நுணுக்கமான தகவல்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.மேலும் இந்தப் புகைப்படம் பத்து வருடங்களுக்கு முன்னால் வெடித்த சாரிகீவ் எரிமலையின் (Sarychev Volcano) புகைப்படத்தை நினைவுபடுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சாரிகீவ் எரிமலையும் ரெய்கோக் அமைந்திருக்கும் குரில் தீவுகளின் வரிசையில்தான் அமைந்திருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி வெடித்த அந்த நிகழ்வையும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தவாறு ஒரு விண்வெளி வீரர் புகைப்படம் எடுத்திருந்தார். அதவும் கிட்டத்தட்ட இதே போல ஒரு அற்புதமான புகைப்படமாகவே இருந்தது.
பொதுவாக ஒரு எரிமலையிலிருந்து தூசியுடன் இணைந்து நச்சு வாயுக்களும் அதிகளவில் வெளியேறும். சில எரிமலைகள் வெடிக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் தூசி அந்தப் பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையையே பாதித்து விடும். அதுமட்டுமல்ல ஒரு சில இடங்களில் அந்தப் பகுதியின் வானிலையையே மாற்றியமைக்கும்.

ஆனால் ரெய்கோக் எரிமலை வெடிப்பால் அப்படி எதுவும் நிகழவில்லை. அதேநேரம் வளிமண்டலத்தில் ஸ்டிராட்டோஸ்பியர் அடுக்கில் குறிப்பிடத்தக்க அளவில் சல்பர் டை ஆக்சைடு வாயு கலந்திருப்பதை செயற்கைக்கோள்கள் கண்டறிந்திருக்கின்றன.