Published:Updated:

`ட்விட்டரில் தவறாக அழுத்திய லைக் பட்டன்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!’- பதறிய அக்‌ஷய் குமார்

`மாணவர்களின் மீதான வன்முறையை அக்‌ஷய் குமார் விரும்புகிறார்’ போன்ற கமென்டுகளால் நெட்டிசன்கள் அக்‌ஷய் குமாரை வறுத்தெடுத்தனர்.

அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்

எப்போதும் சமூக வலைதளத்தில் டிரெண்டிங்கில் இருப்பவர் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதால் குடியுரிமை குறித்த சர்ச்சையில் சிக்கினார். `ஒரு சிறிய காகிதத்தை வைத்துதான் என்னுடைய தேசப்பக்தியை நிரூபிக்க வேண்டுமா என்றும் விரைவில் இந்திய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்’ என்றும் நெட்டிசன்களுக்கு பதில்களைக் கூறினார்.

அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்
Twitter

டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. இதுதொடர்பான ட்வீட் ஒன்றை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் லைக் செய்தார்.

`மாணவர்களின் மீது காவல்துறை நடத்தியிருக்கும் வன்முறையை அக்‌ஷய் குமார் விரும்புகிறார். நன்றி கனடாக்காரரே!’ போன்ற கமென்டுகளால் நெட்டிசன்கள் அக்‌ஷய் குமாரை டேக் செய்தனர். இந்த நிலையில், ``ஜாமியா மிலியா மாணவர்கள் தொடர்பான ட்வீட்டை ஸ்க்ரோல் செய்யும்போது தவறுதலாக லைக் செய்துவிட்டேன். தவற்றை உணர்ந்து பின்னர் அன்லைக் செய்துவிட்டேன். வேண்டுமென்றே செய்யவில்லை. இதுபோன்ற செயல்களை நான் ஆதரிப்பதில்லை” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த நிலையில், அக்‌ஷய் குமாரின் விளக்கத்தால் நெட்டிசன்கள் சிலர் #ISupportAkshay என்று அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் பிரதான இடத்தையும் பிடித்தது.