Published:Updated:

பிறந்தநாள் வழக்கத்தை மாற்றிய ஷாருக் கான்; குவிந்த ரசிகர்கள்; காவல்துறை மூலம் சொன்ன 'மெசேஜ்'!

நடிகர் ஷாருக் கான் தனது 56-வது பிறந்தநாளை, தனது குடும்பத்துடன் பண்ணை வீட்டில் கொண்டாடினார்.

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) 56-வது பிறந்தநாள். இந்த ஆண்டு ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதால், தனது பிறந்தநாளை எளிய முறையில் கொண்டாட ஷாருக் கான் திட்டமிட்டிருந்தார். ஆனால், நேற்று இரவு 12 மணிக்கே ஷாருக் கான் ரசிகர்கள் மும்பை பாந்த்ராவில் உள்ள மன்னத் பங்களாவுக்கு வெளியில் ஏராளமாகக் கூடியிருந்தனர். அவர்கள் இரவு 12 மணிக்கு பிறந்தநாள் பாடல் பாடி, ஷாருக் கானுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு ஷாருக் கான் பிஸ்கட், தண்ணீர் பாட்டில்களை அனுப்பிவைத்தார். இன்று காலையிலும் அதிகமான பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் ஷாருக் கான் வீட்டுக்கு வெளியில் கூடியிருந்தனர்.

கோப்புக் காட்சி
கோப்புக் காட்சி
மகன் ஆர்யன் கான் பாதுகாப்புக்காக ஷாருக் கான் - கௌரி கான் எடுத்த முடிவு!

அவர்களைக் கட்டுப்படுத்த அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஷாருக் கான் தன் மேலாளர் பூஜா மூலம் போலீஸாரிடம் ஒரு குறிப்பிட்ட செய்தியைத் தெரிவித்திருந்தார். ஷாருக் கான் தற்போது வீட்டில் இல்லை என்றும், அவர் தன் குடும்பத்துடன் கடற்கரை நகரமான அலிபாக் சென்றிருப்பதாகவும் போலீஸார் ரசிகர்களிடம் தெரிவித்தனர். அதோடு சம்பவ இடத்திலிருந்து கலைந்து செல்லும்படி போலீஸார் கேட்டுக்கொண்டனர். ஷாருக் கான் தன்னுடைய குடும்பத்துடன் அலிபாக்கிலிருக்கும் பண்ணை வீட்டில் தனது பிறந்தநாளை எளிய முறையில் கொண்டாட புறப்பட்டுச் சென்றிருந்தார். வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் தனது பிறந்தநாளன்று தனது வீட்டு பால்கனியில் நின்று ரசிகர்களுக்கு ஷாருக் கான் காட்சி கொடுப்பது வழக்கம். கடந்த ஆண்டு பிறந்தநாளின்போது கொரோனா காரணமாக ரசிகர்கள் தனது இல்லத்துக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இந்த ஆண்டு அவ்வாறு எதுவும் தெரிவிக்காததால் ரசிகர்கள் ஷாருக் கான் இல்லத்துக்கு முன்பு கூடிவிட்டனர். ஷாருக் கானின் பிறந்தநாளையொட்டி பாலிவுட் பிரபலங்கள் ட்விட்டரில் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். நடிகை ஷில்பா ஷெட்டி, சத்ருகன் சின்ஹா, கரீனா கபூர், மலைகா அரோரா, மனீஷ் மல்ஹோத்ரா, மாதுரி தீட்ஷித் உட்பட ஏராளமானோர் சமூக வலைதளத்தில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பிறந்தநாள், தீபாவளியையொட்டி ஷாருக் கான் இல்லம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு