நடிகை கத்ரீனா கைஃப் - நடிகர் விக்கி கெளஷல் திருமணம் ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதேபூரில் இருக்கும் ஹோட்டல் சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் நடந்து வந்தது. கத்ரீனா மற்றும் விக்கியின் உறவினர்கள் கடந்த 6-ம் தேதியே திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்ட நிலையில் 7-ம் தேதி திருமண சடங்குகள் தொடங்கியது. பஞ்சாப் முறைப்படி ஆடல் பாடலுடன் சடங்குகள் தொடங்கின. 8-ம் தேதி மருதாணி வைத்தல் போன்ற சடங்குகள் நடந்தன. 9 -ம் தேதி திருமணத்திற்கு முக்கிய பாலிவுட் பிரபலங்கள் வந்து சேர்ந்தனர். மாலையில் திருமணம் நடப்பதாக முகூர்த்தம் குறிக்கப்பட்டு இருந்தது. மணமகன் 7 வெள்ளை குதிரைகள் பூட்டிய வண்டியில் திருமணம் நடக்கும் இடத்திற்கு நண்பர்கள், உறவினர்கள் படைசூழ ஊர்வலமாக வந்தார். மணமகள் கத்ரீனா அலங்கரிக்கப்பட்ட காரில் தனது சகோதரனுடன் திருமணம் நடைபெறும் இடத்திற்கு பிற்பகல் 3.30 மணிக்கு வந்தார். திருமணம் மண்டபம் கத்ரீனாவின் மேற்பார்வையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருமண சடங்குகளை பஞ்சாப்பில் இருந்து வந்த விக்கி கெளஷல் குடும்ப புரோகிதர் செய்தார். பிற்பகலில் இருவருக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு நள்ளிரவு வரை பார்ட்டி நடந்தது. திருமணத்திற்கு பத்திரிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் கத்ரீனா தனது திருமணத்திற்கு பிறகு தானே திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

திருமணத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் கியூஆர் கோடு அடங்கிய திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. அதோடு திருமண நிகழ்ச்சிகள் எதிலும் விருந்தினர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததோடு மொபைல் போனை தாங்கள் தங்கி இருக்கும் அறையில் வைத்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தனர். புதுமணதம்பதிக்கு பாலிவுட் பிரபலங்கள் நேரிலும், சமூக வலைத்தளத்திலும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அலியா பட், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, ஹ்ரித்திக்ரோஷன், டைகர் ஷெராஃப் உட்பட முக்கிய பிரமுகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். புதுமணத்தம்பதி சனிக்கிழமை மும்பை திரும்புகின்றனர்.