Published:Updated:

`நாம் பேச வேண்டிய நேரம் இது; Mr.மோடிக்கு ட்வீட் செய்யுங்கள்!’- பிரபலங்களுக்கு கோரிக்கை வைத்த சயானி

பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் சிங், கரண் ஜோகர், ஆயுஷ்மன் குர்ரானா மற்றும் ராஜ்குமார் ராவ் ஆகியோர் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, நாம் பேச வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளார்.

மோடி
மோடி ( Twitter )

இந்தியக் குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டதை எதிர்த்து டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. காவல் துறையினர் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகளையும் காவல்துறையினர் வீசினர். இதுதொடர்பாக வெளியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

சயானி குப்தா
சயானி குப்தா
twitter

இந்த நிலையில், நாடுமுழுவதும் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. பாலிவுட் நடிகையான சயானி குப்தாவும் ட்விட்டரில் தன்னுடைய எதிர்ப்புகளைப் பதிவிட்டுள்ளார்.

போராட்டம் தொடர்பாக ட்விட்டரில், `` டெல்லி போலீஸ், உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். இந்த நாட்டின் மக்களைப் பாதுகாக்க வேண்டியது உங்களுடைய கடமை. உங்களது செயலை, உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது; நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது; உங்கள் குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் சிங், கரண் ஜோகர், ஆயுஷ்மன் குர்ரானா மற்றும் ராஜ்குமார் ராவ் ஆகியோர் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, ``நாம் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஜாமியா மற்றும் ஏ.எம்.யு மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்தியுள்ள வன்முறையையும், அவர்களின் மிருகத்தன்மையையும் எதிர்த்து உங்களில் ஒருவராவது பிரதமர் மோடிக்கு ட்வீட் செய்யுங்கள்” என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.

சயானி குப்தாவின் ட்வீட்டைத் தொடர்ந்து, ராஜ்குமார் ராவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``மாணவர்களின் மீது காவல்துறையினர் நடத்தியுள்ள வன்முறையைக் கடுமையாக கண்டிக்கிறேன். ஒரு ஜனநாயக நாட்டில் தன்னுடைய எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவிக்க குடிமக்களுக்கு உரிமை உண்டு.”

``பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் கண்டிக்கிறேன். வன்முறை என்பது எதற்கும் தீர்வு அல்ல” என்று பதிவிட்டிருக்கிறார்.