Published:Updated:

`இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது!’ - ட்விட்டருக்குத் திரும்பிய அனுராக்

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

இது கையை மீறிவிட்டது... இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது.

சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வந்தவர் அனுராக் காஷ்யப். நாட்டில் நடக்கும் வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கடிதம் எழுதி பிரதமர் மோடிக்கு அனுப்பினர். அந்தக் கடிதத்தில் அனுராக் காஷ்யப்பும் கையொப்பமிட்டிருந்தார். இதனால், ட்விட்டரில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

மிகுந்த மன உளைச்சலில் இருந்த அனுராக் ``பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் வருவது, மகள் ட்ரோலுக்கு உள்ளாவது பற்றி யாரும் பேச விரும்பமாட்டார்கள். மனதிலிருப்பதைப் பயமின்றி பேச முடியாது என்கிறபோது இனி நான் பேச விரும்பவில்லை. புதிய இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றுகூறி கடந்த ஆகஸ்ட் மாதம் ட்விட்டரிலிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், இன்று ட்விட்டருக்குத் திரும்பியுள்ள அனுராக் காஷ்யப், ``இது கையை மீறிவிட்டது... இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது. இந்த அரசு தெளிவாக பாசிஸத்தைக் கடைப்பிடிக்கிறது. இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டியவர்கள், மாற்றத்தைக் கொண்டுவரும் திறம் படைத்தவர்கள் அமைதியாக இருப்பது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.

``ஒற்றுமை, அமைதி, சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது. வதந்திகள் மற்றும் பொய்களிடமிருந்து ஒவ்வொருவரும் விலகியிருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்” என்ற மோடியின் ட்வீட்டுக்கு `` இதை பா.ஜ.க-வின் ஐடி பிரிவிடம் சொல்லுங்கள். மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்று பொய்ப் பிரசாரம் செய்து அவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்த சட்டத்துக்கு ஒரு போலியான காரணத்தைக் கொடுக்கின்றனர். நன்றி நரேந்திர மோடி” என்றும் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு