Published:Updated:

போதை வழக்கில் மகன் - தந்தை ஷாருக்கானின் விளம்பரங்களை நிறுத்திய நிறுவனம்!

நடிகர் ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் பிரச்னையில் சிக்கியதால் ஷாருக்கான் தொடர்பான விளம்பரங்களை கல்வி நிறுவனம் திடீரென நிறுத்திவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடந்த போதைப்பார்ட்டியில் கலந்து கொண்டபோது போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இந்த போதைப்பார்ட்டி தொடர்பாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆர்யன் கைது விவகாரம் அவரது தந்தை ஷாருக்கானின் தொழில் வரவுகளை பாதித்துள்ளது. ஷாருக்கான் ஏராளமான விளம்பரங்களில் நடித்து வருகிறார். ஜியோ, ஹூண்டாய், துபாய் சுற்றுலாக் கழகம், ஐசிஐசிஐ, ஆன்லைனில் கல்வி வழங்கும் பைஜுஸ் போன்ற பல நிறுவனங்களில் விளம்பர தூதராக இருக்கிறார்.

ஷாருக்கான் இடம் பெற்ற விளம்பரம்
ஷாருக்கான் இடம் பெற்ற விளம்பரம்

இதன் மூலம் ஷாருக்கானுக்கு ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. ஷாருக்கான் மகன் போதைப்பொருள் பிரச்னையில் சிக்கியதால் பைஜுஸ் நிறுவனம் ஷாருக்கான் இடம்பெற்ற விளம்பரங்கள் அனைத்தையும் திடீரென நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. மீடியாக்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கொடுக்கப்பட்ட விளம்பர ஆர்டர் கூட திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீடியாக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மகன் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியிருப்பதால், தந்தை கல்வி நிறுவனம் தொடர்பான விளம்பரங்களில் வருவது சரியாக இருக்காது என்று கருதி விளம்பரங்கள் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஷாருக்கான் பைஜுஸ் நிறுவனத்தில் 2017ம் ஆண்டு முதல் விளம்பர தூதராக இருந்து வருகிறார். இதற்காக ஆண்டுக்கு ரூ.3-4 கோடி கட்டணமாக ஷாருக்கான் பெற்று வருகிறார். ஷாருக்கான் ஒரேடியாக விளம்பர தூதரில் இருந்து நீக்கப்பட்டாரா அல்லது தற்காலிகமாகத்தான் விளம்பரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்று பைஜுஸ் நிறுவனம் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு