Published:Updated:

`மத உணர்வுகளைப் புண்படுத்துகிறார்!' - கரீனா கபூரின் `பிரக்னன்சி பைபிள்' புத்தக சர்ச்சை

கரீனா கபூர்
கரீனா கபூர் ( Photo: Instagram// @kareenakapoorkhan )

பாலிவுட் நடிகை கரீனா கபூர், தான் பிரசவ காலத்தில் சந்தித்த இன்னல்கள் குறித்து வெளியிட்டுள்ள புத்தகத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயருக்கு கிறிஸ்துவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

பாலிவுட் நடிகை கரீனா கபூர், நடிகர் சைஃப் அலிகானை திருமணம் முடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டாவது குழந்தைக்குத் தாயானார். கரீனா கபூர் கர்ப்பமாக இருந்தபோது தான் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்தும், சவால்கள் குறித்தும் `பிரக்னன்சி பைபிள்' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அப்புத்தகம் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளிவந்தது. அதை விற்பனை செய்ய கரீனா கபூர் சமூகவலைதளத்தில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்.

புத்தக வெளியீட்டில் கரீனாகபூர்
புத்தக வெளியீட்டில் கரீனாகபூர்
Vikatan

இந்நிலையில், கரீனா கபூர் தான் எழுதிய புத்தகத்துக்கு வைத்திருக்கும் பெயர் தற்போது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகப் புத்தகத்துக்குப் பெயர் வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரைச் சேர்ந்த அல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங்கத் தலைவர் ஆசிஷ் ஷிண்டே, இது தொடர்பாக போலீஸில் புகார் செய்துள்ளார்.

கரீனா கபூர் மற்றும் புத்தகத்தின் இணையாசிரியர் அதிதி ஷா ஆகியோருக்கு எதிராக போலீஸில் புகார் செய்துள்ளார் ஷிண்டே. `புத்தகத்தின் பெயரில் இடம் பெற்றுள்ள வார்த்தையான பைபிள், கிறிஸ்துவர்களின் புனித நூலாக இருக்கிறது. ஆனால் கரீனா கபூர் தனது புத்தகத்துக்கு பைபிள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கிறிஸ்துவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கரீனா கபூர்
கரீனா கபூர்
Photo: Instagram// @kareenakapoorkhan

புத்தகத்தை வெளியிட்ட நிறுவனத்தின் மீதும் புகார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இன்ஸ்பெக்டர் சாய்நாத், ``புகார் வந்திருப்பது உண்மைதான். ஆனால், இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை. மும்பையில் இது தொடர்பாக புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு