Published:Updated:

`சொல்றீங்களே தவிர, செய்ய மாட்றீங்க!’ - பா.ஜ.கவை விமர்சித்த பாலிவுட் நடிகர்

காங்கிரஸ் கட்சியினர் ஊழல்வாதிகள் என்று சொல்கிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், பா.ஜ.க-நீங்கள் என்ன செய்கிறீர்கள் - ஜாவேத் ஜாஃபெரி

பா.ஜ.க-மோடி
பா.ஜ.க-மோடி

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இதனால், சமூக வலைதளங்களிலும் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாளர்களும் எதிரானவர்களும் ஒருவரை ஒருவர் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், ட்ரோலைத் தாங்க முடியவில்லை எனக்கூறி பாலிவுட் நடிகர் ஜாவேத் ஜாஃப்ரி ட்விட்டரிலிருந்து விலகியிருக்கிறார்.

ஜாவேத் ஜாஃப்ரி
ஜாவேத் ஜாஃப்ரி

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தனது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வந்தார், ஜாவேத் ஜாஃஃப்ரி. இந்நிலையில், அரசாங்கம் குறித்தும் அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் குறித்தும் அவர் விமர்சித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், ``காங்கிரஸ் கட்சியினர் ஊழல்வாதிகள் என்று சொல்கிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், பா.ஜ.க-நீங்கள் என்ன செய்கிறீர்கள். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை மேம்படுத்துவேன் என்று சொல்லிக்கொண்டு எதுவுமே செய்யாமலிருக்கிறீர்கள்” எனப் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ``இந்தியக் குடியுரிமைச் சட்டம் மிகவும் ஆபத்தானது. அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அனைத்திற்கும் எதிரானது. காந்தி, அம்பேத்கர், நேரு மற்றும் படேலின் கருத்துகளுக்கு எதிரானது. ஒரு பிரிவினரை மட்டும் விலக்கி, அவர்களிடம் உங்களைத் தவிர மற்றவர்களை உள்ளடக்கியுள்ளோம் என்று கூறுவதைப் போல உள்ளது. இது எப்படி சரியாகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் பேசியும் அதை எதிர்ப்பது போன்ற கருத்துகளைப் பகிர்ந்தும் வந்ததால் ஜாவேத் ஜாஃப்ரி நெட்டிசன்கள் சிலரின் ட்ரோலுக்கு உள்ளானார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் ட்விட்டரிலிருந்து தற்காலிகமாக விடுப்பு எடுத்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

அந்தப்பதிவில், ``ட்ரோலையும் வெறுப்பையும் கையாள முடியவில்லை. தற்போது இருக்கும் சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் வரை ட்விட்டருக்கு வரப்போவதில்லை” என்று பதிவிட்டுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்களிடையே கடுமையான விவாதம் சென்றுகொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.