Published:Updated:

`ஷாருக் கான் தொடங்கி அனுராக் காஷ்யப் வரை..!’ -சமீர் ரேடாரில் சிக்கிய பாலிவுட் பிரபலங்கள் யார், யார்?

போதைப்பொருள் தடுப்பு, சுங்கம், வருமான வரி என, தான் பணியாற்றிய துறைகளில் மொத்தம் 13 பாலிவுட் பிரபலங்களை சமீர் வான்கடே பிடித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இம்மாதத் தொடக்கத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். அவரின் ஜாமீன் மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவருகிறது. ஆர்யன் கைது விவகாரத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த போதைப்பொருள் விவகாரத்தில், ஷாருக் கானின் மகனைக் கைதுசெய்திருக்கும் சமீர் வான்கடே பற்றிய பல தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் சமீர் வான்கடே, முன்னதாக, தான் பணியாற்றிய வெவ்வேறு துறைகளில் பாலிவுட் பிரபலங்கள் பலரையும் பிடித்து பாலிவுட்டைக் கதிகலங்கவைத்தவர் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. சமீர் வான்கடே இதற்கு முன், சுங்கவரித்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றிவிட்டு, தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு வந்திருக்கிறார். ஷாருக் கான் மகனைக் கைது செய்திருப்பதன் மூலம் 'சமீர் வான்கடே' என்ற பெயர் விவாத வெளிக்கு வந்திருக்கிறது. ஆனால், சமீர் ஏற்கெனவே பலமுறை, பல பிரபலங்களை இதுபோல் கைதுசெய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன் கானுக்கு முன்னதாக சமீர் வான்கடே அலறவிட்ட பாலிவுட் பிரபலங்கள் பற்றிய சிறு தொகுப்பு:-

  • 2011-ம் ஆண்டு, ஜூலை மாதம், ஷாருக் கான் லண்டன் சென்றுவிட்டு வந்தபோது, மும்பை விமான நிலையத்தில் பல மணி நேரம் அவரை சமீர் வான்கடே தடுத்து நிறுத்தி வைத்திருந்தார். ஷாருக் கான் அதிகப்படியான பொருள்களை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்ததால், சுங்கவரித்துறை அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே அவரை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது, ஷாருக் கானிடமிருந்து ரூ.1.5 லட்சம் அபராதம் வசூலித்த பிறகே, சமீர் அவரை விடுவித்தார்.

ஷாருக் கான்
ஷாருக் கான்
  • 2011-ம் ஆண்டு, மே மாதம், பாலிவுட் நடிகை மினிஷா லம்பா திரைப்பட விழாவுக்குச் சென்றுவிட்டு மும்பை விமான நிலையம் வந்தபோது, சுங்க அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே அவரைத் தடுத்து நிறுத்தினார். பின்னர், சுமார் 16 மணி நேரத்துக்குப் பிறகு அவரை விடுவித்தார். ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை வைத்திருந்ததற்காக சமீர் அவரைப் பிடித்தார்.

அனுஷ்கா சர்மா
அனுஷ்கா சர்மா
  • இதே போன்று, 2011-ம் ஆண்டு, ஜூன் மாதம் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா சர்மா வெளிநாட்டிலிருந்து வந்தபோது ரூ.35 லட்சம் மதிப்புள்ள நெக்லஸ், தங்க செயினை கணக்கில் காட்டாமல் கொண்டு வந்ததாகக் கூறி சமீர் வான்கடே அவரை நிறுத்திவைத்தார். சுமார் 11 மணி நேரத்துக்குப் பிறகு அனுஷ்கா விடுவிக்கப்பட்டார்.

`பாலிவுட் பிரபலங்களை மிரட்டி ரூ.1,000 கோடி பறிப்பு?!’-சமீர் வான்கடே மீது மகாராஷ்டிரா அமைச்சர் புகார்
  • 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், நடிகை கத்ரீனா கைஃப் வெளிநாட்டிலிருந்து மும்பை விமான நிலையம் வந்தபோது தன்னிடம் எந்தப் பொருளும் இல்லை என்று கூறி வெளியில் சென்றுவிட்டார். ஆனால் சிறிது நேரத்துக்குப் பிறகு கத்ரீனாவின் உதவியாளர்கள் மீண்டும் வந்து, லக்கேஜ்களை எடுத்துச் சென்றனர். அப்போது, அவற்றைச் சோதித்தபோது ஐபோன், ரூ.30 ஆயிரம் பணம், இரண்டு விஸ்கி பாட்டில் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக சமீர் வான்கடே கத்ரீனாவிடம் ரூ.12,000 அபராதம் வசூலித்துவிட்டு, விடுவித்தார்.

கத்ரீனா கைஃப்
கத்ரீனா கைஃப்
  • 2013-ம் ஆண்டு, மே மாதம், நடிகர் ரன்பீர் கபூர் லண்டனிலிருந்து மும்பை விமான நிலையம் வந்தபோது, அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் செல்லும் வழியில் சென்றார். அப்போது, அவரது பேக்கை சமீர் வான்கடே சோதனை செய்தபோது, ஆடைகள், காலணிகள், பர்ஃபியூம் உள்ளிட்ட பொருள்கள் இருந்தன. அவற்றைத் தெரிவிக்காமல் வெளியில் எடுத்துச் சென்றதற்காக சமீர் ரூ. 60,000 அபராதம் விதித்தார்.

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர்
  • நடிகை பிபாஷா பாசு 2011-ம் ஆண்டு லண்டனிலிருந்து மும்பை வந்தபோது, சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் பிபாஷாவின் உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்போது, ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருள்களை வெளிநாட்டிலிருந்து எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காகப் பல மணி நேர விசாரணைக்குப் பிறகு 12,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்ட பிறகு பிபாஷா விடுவிக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வருமான வரித்துறையில் சமீர்..!

  • சமீர் வான்கடே சேவை வருமான வரித்துறை அதிகாரியாக இருந்தபோது, இயக்குநர் அனுராக் காஷ்யபுக்கு ரூ.55 லட்சம் அபராதம் விதித்தார்.

  • 2013-ம் ஆண்டு சேவை வரித்துறை அதிகாரியாக இருந்தபோது, நடிகர் விவேக் ஒபராயிடம் ரூ. 40 லட்சம் அபராதம் வசூலித்தார்.

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

சுங்கவரித்துறை மற்றும் சேவை வருமான வரித்துறையில் பணியாற்றிவிட்டு, சமீர் வான்கடே தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு வந்திருக்கிறார். இந்தத் துறைக்கு வந்த கையுடன், கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் நடிகை ரியா சக்ரவர்த்தியைப் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்தார். அது தொடர்பாக, தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோரிடமும் விசாரணை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் அர்மான் கோலியைக் கைதுசெய்தவர், தற்போது இறுதியாக ஷாருக் கான் மகனைக் கைதுசெய்திருக்கிறார்.

ஆர்யன் கான் கைதின் மூலமாக, பொதுவெளியில் அறியப்படும் சமீர் வான்கடே, ஏற்கெனவே, 12 பாலிவுட் பிரபலங்களைப் பதம் பார்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு