Published:Updated:

சிறையிலிருந்து பெற்றோருடன் வீடியோ காலில் பேசிய ஆர்யன்; செலவுக்குப் பணம் அனுப்பிய ஷாருக்!

ஆர்யனுக்கு சிறையில் `N956' என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. கைதிகள் ஒரு மாதத்திற்கு 4500 ரூபாயை தங்களின் உறவினர்களிடமிருந்து மணி ஆர்டராக பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சொகுசுக் கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மும்பையில் உள்ள பலத்த பாதுகாப்பு மிக்க ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீது வரும் 20ம் தேதி கோர்ட் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. நடிகர் சல்மான்கானை சிறையில் இருந்து வெளியில் எடுத்த மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் ஆர்யனுக்காக வாதாடியிருக்கிறார்.

எனவே வரும் 20ம் தேதி எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆர்யன் இருக்கிறார். ஆர்யனும் அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டவர்களும் ஆர்தர் ரோடு சிறையில் கொரோனா தடுப்பு பிரிவில் அடைக்கப்பட்டு இருந்தனர். கொரோனா தனிமைப்படுத்துதல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் வழக்கமான சிறைப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆர்யன் கான்
ஆர்யன் கான்
AP Photo/Rajanish kakade
ஆர்யன் கான் கைது: `அதிகாரிமீது குற்றம்சாட்டிய அமைச்சருக்குக் கொலை மிரட்டல்!’ - பாதுகாப்பு அதிகரிப்பு

ஆர்யன் சிறையில் இருந்து தன் தந்தை ஷாருக்கான் மற்றும் தாயார் கவுரி கான் ஆகியோருடன் வீடியோ காலில் பேசியுள்ளார். இருவரிடமும் மொத்தம் 10 நிமிடங்கள் பேச அனுமதி வழங்கப்பட்டது. வீடியோ காலில் வழக்கமான விசாரிப்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஆர்யனுடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களும் தங்களின் பெற்றோருடன் போனில் பேச அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் உறவினர்கள் கைதிகளை வந்து நேரில் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே கைதிகள் தங்களின் உறவினர்களுடன் போன் மற்றும் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் ஆர்யன் அவரின் பெற்றோருடன் பேச அனுமதிக்கப்பட்டதாகவும், ஆர்யனுக்கு சிறப்புச் சலுகை எதுவும் காட்டப்படவில்லை என்றும் ஆர்தர் ரோடு சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறையில் கைதிகள் தங்களின் உறவினர்களுடன் பேச 11 போன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கைதிகள் தங்களின் உறவினர்களுடன் போன் மூலம் பேசிக்கொள்ளலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். கைதிகள் போனில் பேசும்போது சிறை அதிகாரி ஒருவர் அருகில் நிற்பார். ஆர்யனுக்கு சிறையில் `N956' என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. ஆர்யன் சிறையில் அங்குள்ள கேன்ட்டீனில் கிடைக்கும் பிஸ்கட்டுகளையும், தண்ணீர் பாட்டில்களையும் வாங்கிப் பயன்படுத்துகிறார். கைதிகள் ஒரு மாதத்திற்கு 4500 ரூபாயை தங்களின் உறவினர்களிடமிருந்து மணி ஆர்டராக பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன் கான்
ஆர்யன் கான்
AP Photo/Rajanish kakade
போதை நெட்வொர்க்கில் ஆர்யான் சிக்கியது எப்படி? - பதறவைக்கும் பாலிவுட் பார்ட்டிகள்...

அந்த வகையில் நடிகர் ஷாருக்கான் தன் மகனின் செலவுக்காக கடந்த 11ம் தேதி ரூ.4500 அனுப்பி வைத்தார். அந்தப் பணத்தில் சிறை கேன்ட்டீனில் தேவையான உணவுகளை ஆர்யன் வாங்கி சாப்பிட்டு வருகிறார். சிறையில் 7 மணிக்கு காலை சாப்பாடும், 11 மணிக்கு மதிய சாப்பாடும், மாலை 6 மணிக்கு இரவு சாப்பாடும் வழங்கப்படுகிறது. மதியச் சாப்பாடு முடிந்த பிறகு இரவு சாப்பாடு வரை கைதிகள் சிறைக்குள் சுதந்திரமாகச் சுற்ற அனுமதிக்கப்படும்.

இரவு சாப்பாடு முடிந்த பிறகு கைதிகள் அவர்களின் அறைக்குள் அடைக்கப்பட்டுவிடுவர். ஆர்யனுடன் கைது செய்யப்பட்ட பெண், பைகுலாவில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். வெறும் 1000 கைதிகளை மட்டுமே அடைக்கும் வசதி கொண்ட ஆர்தர் ரோடு சிறையில் தற்போது 3,200 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறையில் பெரும்பாலும் விசாரணை கைதிகள் மட்டுமே அடைக்கப்படுவது வழக்கம் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு