Published:Updated:

`வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்த்துவிட்டது இந்தக் கணக்கு’- ஷாருக் கான் பகிர்ந்த கணித ஆசிரியரின் வீடியோ

ஷாருக்கான்
ஷாருக்கான்

கணித ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களுக்கு ஒன்பதாம் வாய்ப்பாடு கற்றுத்தரும் வீடியோ ஷாருக்கான் உட்பட பலரையும் ஈர்த்துள்ளது.

கணிதம் என்றாலே எல்லோருக்கும் கசக்கும். ஆனால், மிகச்சிறப்பான ஆசிரியர்களால் மாணவர்கள் வெறுக்கக்கூடிய பாடங்களையும்கூட சுவாரஸ்யமானதாகக் கற்றுத்தர முடியும். அப்படியான ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்குக் கணிதம் கற்றுத்தரும் வீடியோதான் இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா மற்றும் நடிகர் ஷாருக்கான் உட்பட பலரையும் சமூக வலைதளத்தில் ஈர்த்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களுக்கு ஒன்பதாம் வாய்ப்பாட்டை எளிமையாகக் கற்றுக்கொள்வது குறித்து விளக்குகிறார். இந்த வீடியோவை ஆனந்த் மகேந்திர தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சில மணிநேரங்களிலேயே நெட்டிசன்களிடம் அதிக கவனத்தைப் பெற்றது. 12,000-த்தையும் தாண்டி தொடர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

``என்ன? இவ்வளவு எளிமையான வழிமுறை பற்றி எனக்குத் தெரியாது. நான் படிக்கும்போது என்னுடைய கணித ஆசிரியராக இவர் இருந்திருந்தால், ஒருவேளை அந்தப் பாடத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்திருப்பேன்” என்ற கேப்ஷனையும் அவர் பதிவிட்டிருந்தார்.

ஸ்கைபில் ஆங்கிலப் பயிற்சி, கணினியில் கணிதம்... அசத்தும் கோனேரி குப்பம் அரசுப்பள்ளி மாணவர்கள்!

பாலிவுட்டின் முன்னனி நடிகர்களில் ஒருவரான ஷாருக் கானும் இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ``என்னுடைய வாழ்க்கையின் எத்தனை கடுமையான பிரச்னைகளை இந்த எளிய கணக்கு தீர்த்துள்ளது என்று உங்களிடம் சொல்ல முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.

``மாணவர்கள் பாடங்களை எளிமையாகக் கற்றுக்கொள்ளவும் மன அழுத்தம் இல்லாமல் படிக்கவும் ஆசிரியர்கள் இதுமாதிரியான வழிமுறைகளைப் பள்ளியில் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் பள்ளிகளுக்கு வருவதை மாணவர்களும் விரும்புவார்கள். இது உண்மையிலேயே கணிதத்தை எளிமையாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது” போன்ற கமெண்டுகளை நெட்டிசன்களும் பதிவிட்டு வருகின்றனர். ``எனக்கு இப்படி ஒரு கணித ஆசிரியர் இல்லையே” என்று தங்களது பால்யகால கணித ஆசிரியர்களையும் நினைபடுத்தி கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

#whatsappwonderbox என்ற ஹேஷ்டேக்கில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளனர். யார் இந்த ஆசிரியர் என நெட்டிசன்களும் வீடியோவைப் பகிர்ந்து தேடி வருகின்றனர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு