Published:Updated:

சம்பளம் வந்துவிட்டதா.. இந்த நான்கு விஷயத்தை மறந்துவிடாதீர்கள்! #MyVikatan

என்னதான் நவீன ஆப்ஸ்கள் (Apps) வந்தாலும் இன்னமும் குறுஞ்செய்தி அதன் கெத்தை குறைத்துக்கொள்ளவில்லை. ஒரு தடவ வந்தாலும் சும்மா நச்சுன்னு வரும்.

நாம் அனைவரும் மாத முதல் தேதியில் குறைந்தது ஒரு பத்து தடவையாவது நமது அலைபேசியை ஆவலோடு பார்த்திருப்போம். என்னதான் நவீன ஆப்ஸ்கள் (Apps) வந்தாலும் இன்னமும் குறுஞ்செய்தி அதன் கெத்தை குறைத்துக்கொள்ளவில்லை. ஒரு தடவ வந்தாலும் சும்மா நச்சுன்னு வரும். Salary Credited னு பார்த்த உடனேயே மனசு துள்ளிகுதிச்சு காத்துல பறந்து பல கனவுகள் காண ஆரம்பிச்சிடும். ஒரு செம டூர் போயிட்டு ஜாலியா இருக்கணும், சின்ன வயசுல இருந்து கனவு கண்ட பைக் வாங்கணும், வித விதமா உடைகள் வாங்கணும் என்று பல்வேறு ஆசைகள். இந்த ஆசைகளோடு பறந்து வந்து ஒரு கிளையில் அமர்ந்து யோசித்து பார்த்தால் அட ஆயிரத்தெட்டு EMI, கிரெடிட் கார்டு பில், வீட்டு வாடகை, புதுசா இப்போ தண்ணி லாரிக்கு வாடகைன்னு எல்லா விஷயங்களையும் யோசிச்சிட்டு சலிச்சுட்டே சோகமா அட போங்கய்யா சம்பாத்தியம் செஞ்சு என்ன செய்யப் போறோம்ன்னு யோசிச்சுட்டே சிறகொடிந்த பறவையாய் மீண்டும் பழைய நிலைமைக்கு கவலையோடு திரும்பி விடுவோம். இதிலிருந்து மீண்டு எவ்வாறு மேலும் பறக்க முயல்வது. சில குறிப்புகள் இதோ

Representational Image
Representational Image
Credits : Pixabay

சம்பளம் வந்துவிட்டது என்ற குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் முதலில் ஒரு சிறிய தொகையை, அது நூறு ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை அதை உங்கள் நலம் விரும்பும் ஒருவருக்கு அனுப்புங்கள். நம் அனைவரது முதல் நலவிரும்பி நமது அம்மாவாகத்தான் இருக்க முடியும். அவர்களுக்கு அனுப்புங்கள். அவர்தான் நமது முதல் மஹாலக்ஷ்மி. எந்தவித பொறாமை, வஞ்சம் இன்றி ஒரு தாயின் மனம் அதன் பிள்ளையின் உழைப்பை உழைப்பாய் மட்டுமே பார்க்கும். பதிலுக்கு அந்தத் தாயின் மனம் கோடிக்கணக்கான வாழ்த்துகளை வழங்கும். அவை அனைத்தும் மீண்டும் நூறு மடங்காய்ப் பெருகி நம்மிடமே வந்து சேரும். நாம் அளிக்கும் இந்தச் சிறிய தொகை அந்தத் தாய்க்கு வெறும் பணத்தை தாண்டி பாசமாய், பகிர்வாய், நாம் அவர்களையே நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வாய், நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையாய், மரியாதையாய் வெளிப்படும்.

இந்த டிஜிட்டல் யுகம் நமது வாசிப்புப் பழக்கத்தை அடியோடு கொன்று விட்டது. தலை போகிற விசயமாயினும் ஒரு மீம் நமக்கு உணர்த்திவிடுகிறது. காலத்தின் போக்கில் இது அவசியம் என்றாலும் ஒரு புதிய நூலை அதற்கே உண்டான மணத்தோடு நுகர்ந்து வரி வரியாய் கண் விரித்து படித்து ருசிப்பது ஒரு சுவாரசியம்தான். நீங்கள் சம்பள குறுஞ்செய்தியைப் பார்த்த அடுத்த கணமே ஏதேனும் ஆன்லைன் ஸ்டோர்க்குச் சென்று ஒரு நல்ல புத்தகத்தை தேர்வு செய்யுங்கள். புத்தகங்கள் உங்களை நாள்போக்கில் ஒரு புதிய மனிதராய் உணர வைக்கும். உங்கள் அறிவையும் ஆற்றலையும் அது மெருகேற்றும். பல மாமனிதர்களின் கதைகளுக்குப் பின்னால் நீங்கள் தேடிப் பார்த்தால் நிச்சயம் ஒரு புத்தகம் இடம் பெற்றிருக்கும். இது இருநூறுக்கு மேல் செலவாகாது..

Representational Image
Representational Image
Credits : Pixabay

நாம் வாழும் வாழ்க்கை ஒரு நிறைவானதாக மாறுவதற்கு நம்மிடம் உள்ள தனித்திறமைதான் துணை நிற்கும். நடனம் பாடல் பேச்சு கவிதை புகைப்படம் ஓவியம் என்று நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். வேலைப்பளுவின் காரணமாக நாளடைவில் நாம் அதைக் கவனித்திருக்க இயலாது. நம் வாழ்க்கையின் உள்ளார்ந்த தேடலை இந்தத் தனித்திறன்தான் கண்டறிய உதவும். ஆகவே மாதா மாதம் ஒரு சிறிய தொகையை உங்கள் திறமையை பட்டைத் தீட்டிக்கொள்ள செலவழியுங்கள். அதாவது உங்கள் இலக்குகளை நோக்கியோ அல்லது passion என்று சொல்லப்படும் ஒரு பேரார்வத்தை நோக்கியோ செலவிடுங்கள். இந்தச் செலவு பின்னாளில் நீங்கள் துவண்டு இருக்கும்போது பலமடங்கு வரவாக மாறி உங்களுக்கு கைகொடுக்கும். உதாரணமாக நீங்கள் புகைப்படக் கலைஞராக விரும்புகிறீர்கள் என்றால் அதன் தொடர்பான கருவிகள் வாங்குவது, நடனபிரியராக இருந்தால் அதன் சில நுணுக்கங்களை ஒரு நாள் பட்டறை சென்று கற்றுக்கொள்வது, மலையேறுவதில் ஆர்வம் இருந்தால் அதற்கான பயிற்சி பெறுவது, இயற்கைப் பிரியராக இருந்தால் மாடித்தோட்டம் அமைப்பது என்று உங்களை இந்தச் சிறிய தொகையில் ஊக்கப்படுத்திக் கொண்டே இருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சின்ன வயதில் உங்கள் மனம் ஒரு சிறிய விஷயத்திற்காக ஏங்கி இருக்கும். உதாரணமாக வீட்டின் நடுவில் ஒரு ஊஞ்சல் போட்டு அமர்ந்து சிரித்து ஆட வேண்டுமென்றோ, குதிரை சவாரி செய்ய வேண்டுமென்றோ, ஜம்முன்னு ஒரு கூலிங் கிளாஸ் போட்டுகிட்டு ஒரு ரவுண்டு வர வேண்டுமென்றோ. இவ்வாறான குறைந்த செலவில் மன மகிழ்ச்சி தரும் சின்னஞ்சிறிய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள சிறிது பணம் ஒதுக்குங்கள். இது உங்களை ஒரு குழந்தை போல உற்சாகப்படுத்திய புத்துணர்ச்சியையும் மன அமைதியையும் அளிக்கும்.

Representational Image
Representational Image
Credits : Pixabay

பணத்தை Mutual fund, Fixed Deposit, Health Insurance போன்றவற்றில் போட்டு வையுங்கள். உங்கள் வயதான காலத்தில் உதவும். ஷேர் மார்க்கெட், தங்கம் என்று இன்வெஸ்ட் செய்யுங்கள். லாபம் இரட்டிப்பாகப் பெருகும். இந்த கூப்பன் கோடை பயன்படுத்தி இந்தச் சலுகை பெறுங்கள். இந்த பாங்கில் முதலீடு செய்யுங்கள். கடன் எளிதாகப் பெறலாம் என்றெல்லாம் பணத்தை வெறும் materialstic விஷயமாகத்தான் இன்று நாம் பார்க்க பழகி உள்ளோம். பணத்தின் சுவை மிக அதிகமாகச் சேர்ப்பதில் மட்டுமே இருக்கிறது என்று தவறாக உணர்ந்துள்ளோம்.

இன்றும் நினைவிருக்கிறது. எனக்கு காசைப் பற்றி விவரம் தெரிந்த வயதில் எனது தந்தையின் சம்பளம் நான்காயிரம் மட்டுமே. இரு பெண் பிள்ளைகளின் படிப்பு கல்யாணம், குடும்பச் செலவு மருத்துவச் செலவு, எதிர்காலச் சேமிப்பு என்று எவ்வளவு கடல் போன்ற விஷயங்கள் இருந்தாலும் எனது அப்பா ஓய்வு பெரும் வரை அவர்களது சம்பள நாள் அன்று இருட்டு கடை அல்வாவும், லாலா கடை ஓமப்பொடியும் வாங்கி வந்து (திருநெல்வேலியை மையம் கொண்டது எங்களது குடும்பம்) எங்களை மகிழ்விக்கும் அந்தச் சுவை இன்றளவும் நாவில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. குறைவாக இருப்பினும் நிறைவாக வாழ கற்றுக்கொடுத்தார்கள் நம் பெற்றோர்கள். ஆனால் நாமோ இன்று லட்சக்கணக்காக பெறினும் நிறைவில்லாமல் நாள்களை கழிக்கின்றோம். பணத்தை உள்ளார்ந்து தேவைக்கேற்ப ருசிக்க கற்றுக்கொண்டால் எந்த நேரத்திலும் சலிக்காமல் வாழ்ந்து விடலாம்.

Representational Image
Representational Image

நீங்கள் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு நாளின் முடிவில் (End of the day என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்) எவ்வளவு பெரிய பணக்காரனாயினும் ஏழை ஆயினும் வாழ தேவையானது மூன்று தான் உணவு, உடை, உறைவிடம். உங்களிடம் இருக்கும் பணத்தின் அளவைப் பொறுத்து இதன் பிராண்ட்கள் வேறுபடும் அவ்வளவுதான். இதைத் தாண்டி மேலே கூறிய நான்கு விஷயங்களுக்கு உங்கள் பணத்தை எவ்வாறு செலவு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் தேடல் வழி தேட தொடங்கும். பணத்தை லாபமாக புத்திசாலித்தனமாக செலவு செய்வதைத் தாண்டி கனவிற்காக, நம்பிக்கைக்காக, அன்பிற்காக காதலித்து செலவு செய்யுங்கள். அது உங்களிடுமே பலமடங்காக திரும்பி வந்து சேரும்.

- நாக சரஸ்வதி

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு