Published:Updated:

மொழிகளைக் கடந்து நிற்கும் ஹாசிப்கானின் `மானுடத்தின் மறு உருவாக்கம்’ ஓவியம்!

மானுடத்தின் மறு உருவாக்கம்
மானுடத்தின் மறு உருவாக்கம்

பிரெஞ்ச் மொழியில் இயங்கும் ஒரு க்ரியேட்டிவ் நிறுவனம் ஹாசிப்கானின் ஓவியத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

கலைக்கு மொழி கிடையாது.. மொழிகளைக் கடந்து, மொத்த உலகுக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்பினால் அவர்கள் கையிலெடுக்கும் விஷயம் கலை. விகடனின் பிரபல கார்ட்டூனிஸ்ட் ஹாசிப்கானின் படங்களும், மொழிகளைக் கடந்தது. உலக அரங்கில் பலமுறை அவரது கார்ட்டூன்கள் கவனம் பெற்றிருக்கின்றன.

தற்போது பிரெஞ்ச் மொழியில் இயங்கும் ஒரு க்ரியேட்டிவ் நிறுவனம் ஹாசிப்கானின் ஓவியத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செராபில்ஸ் (Cerapills) என்ற அந்த நிறுவனம் க்ரியேட்டிவான படைப்புகளுக்கு ஒரு பூஸ்ட்டராக செயல்படுகிறது. உலகின் பல கிரியேட்டிவான படைப்புகளை தங்கள் பக்கத்தில் வெளியிடும் இந்த இணையதளம், அதற்குப் பெயர் பெற்றதாகவும் இருக்கிறது.

இந்த நிறுவனம் நேற்று தனது ட்விட்டர் பதிவில், ஹாசிப்கானின் படத்தைப் பகிர்ந்து, `ஆதாமின் உருவாக்கம்’ ஓவியத்திலிருந்து விகடன் ஊடகத்துக்காக இந்தியன் ஆர்ட்டிஸ்ட் ஹாசிப்கான் இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளது. `ஆதாமின் உருவாக்கம்’ ஓவியம் உலகப் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் மைக்கலாஞ்சலோவால், 1511 இல், சிஸ்டைன் தேவாலயத்தின் மேற்கூரையின் உள்பகுதியில் வரையப்பட்டது. ஆதாமுக்கு கடவுள் உயிர் மூச்சை அளித்ததைச் சித்திரிக்கும் ஓவியமான இது உலகப் புகழ்பெற்றது. உலக முழுவதும் இந்த ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

The Creation of Adam
The Creation of Adam

கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் முன்வரிசையில் நின்று போராடுகிறார்கள். அவர்கள் அனைவரையும் கடவுளைப் போன்று சித்திரிக்கும் விதமாக ஹாசிப்கான் இந்த ஓவியத்தை உருவாக்கி இருந்தார். `ஆதாமின் உருவாக்கம்’ படத்தில் அந்த கைகள் தொடும் நிலையில் இருக்கும். இந்த ஓவியத்தில் கைகள் இணைந்து இருக்கும். மானுடத்தின் மறு உருவாக்கம்’ என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியான இந்த ஓவியம், உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக முன்னின்று போராடும் அனைத்துப் பணியாளர்களுக்கும் `சல்யூட்’ செய்கிறது!

`விகடன் ஹாசிப் கானின் கார்ட்டூனை தனது பெயரில் வெளியிட்ட ஆர்டிஸ்ட்!’ - கண்டித்த வடமாநில ஊடகங்கள்
அடுத்த கட்டுரைக்கு