Published:Updated:

நாளொரு மேனி பொழுதொரு பேச்சு...சர்ச்சை நாயகராக மாறிவரும் ராஜேந்திர பாலாஜி!

நாளொரு மேனி பொழுதொரு பேச்சு...சர்ச்சை நாயகராக மாறிவரும் ராஜேந்திர பாலாஜி!
நாளொரு மேனி பொழுதொரு பேச்சு...சர்ச்சை நாயகராக மாறிவரும் ராஜேந்திர பாலாஜி!

ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக அரசியலே ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஏரி தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோல் கொண்டு மூடிய செல்லூர் ராஜூ, "மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார்" என்றெல்லாம் பொய் சொன்னதற்காக மன்னித்து விடுங்கள் என்று ஒப்புக்கொண்ட திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடிக்கும், தனக்கும் உள்ள ஈகோ பிரச்னையை டெல்லி சென்று பிரதமரிடம் முறையிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என தமிழக அமைச்சர்கள் அனைவருமே அவரவர் நியாயங்களுக்காகப்(!?) போராடி வருகிறார்கள்.

அமைச்சர்களிலேயே வித்தியாசமான அமைச்சராக வலம் வருபவர் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிதான். 

கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களின் பாலில் கலப்படம் உள்ளதாகத் தெரிவித்து, அந்த நிறுவனங்களைத் தெறிக்கவிட்டார். பாலின் செறிவுக்காக ரசாயனப் பொருள்களைத் தனியார் நிறுவனங்கள் கலப்பதாகக் கூறி, இந்தப் பிரச்னை நீதிமன்றம் வரை சென்று, அமைச்சருக்கு நீதிபதிகள் குட்டு வைத்தனர்.

பால் கலப்படப் பிரச்னைக்கு முன்பாக சசிகலாவையும், தினகரனையும் ஆதரித்துப் பேசியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜேந்திர பாலாஜி. ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகப் பிரிந்து சென்றபோது, அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தவரும் இதே ராஜஜேந்திர பாலாஜிதான். பின்னர், அணிகள் இணைப்பு என்று வந்ததும், சசிகலாவையும், தினகரனையும் ஓரங்கட்ட முடிவெடுத்தபோது, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். பதவியை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதுதான் இவர் உள்பட அனைத்து அமைச்சர்களின் நிலைப்பாடாக உள்ளது.

இந்நிலையில், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "பிரதமர் மோடி இருக்கும் வரை எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எடப்பாடி அரசுக்கு மோடி முழு ஆதரவு அளித்து வருகிறார்" என்று உளறிக் கொட்டி பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளார். மத்தியிலுள்ள பி.ஜே.பி. அரசுதான், தமிழகத்தில் அ.தி.மு.க அரசை இயக்கிக்கொண்டிருக்கிறது எனத் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து குறைகூறி வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைச்சரின் இந்தப் பேச்சு அமைந்துள்ளது.

இதன் அடுத்தகட்டமாக தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி அரசின் ஸ்லீப்பர் செல்களாக 40 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர் என்றும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமானால், அவர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றும் தெரிவித்து மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்வது குறித்து தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடியை ஆதரிப்பார்கள் என்று தெரிவித்திருப்பது, அக்கட்சியினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.  

"டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களாக எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க-விலிருந்து வெளியேறி, எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தால், தி.மு.க-வில் உள்ள 40 பேரும் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்து ஆட்சியைக் காப்பாற்றுவார்கள்" என்று உளறல் பேச்சை வெளிப்படுத்தியுள்ளார் ராஜேந்திர பாலாஜி. 

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அமைச்சர்கள் யாரும் பத்திரிகைகளுக்கோ, தொலைக்காட்சிகளுக்கோ பேட்டி கொடுக்க அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டிலிருந்து வந்தது. சட்டசபை கூட்டத்தொடர்களின் போதும், எந்தத் துறையானாலும், முதல்வராக இருந்த ஜெயலலிதாவே 110-வது விதியின் கீழ் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்.

வாய்மூடி மவுனியாகவே இருந்த அமைச்சர்கள் எல்லாம், தற்போது ஆளாளுக்குப் பேட்டி கொடுத்து, உளறல் நாயகர்களாக வலம் வருகிறார்கள். இதையெல்லாம் தெரிந்துதான் ஜெயலலிதா, இந்த அமைச்சர்களை வாய்திறக்க விடாமல் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக 'சர்ச்சை நாயகர்' என்ற பெயரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெறும் அளவுக்கு உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார் என்றே கூறலாம். அதிலும் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் ஸ்லீப்பர் செல்கள் என்று சொல்வதன் மூலம், அக்கட்சியில் ஏதேனும் சலசலப்பை ஏற்படுத்தலாம் என்பது அவரின் எண்ணமாகக் கூட இருக்கலாம். என்றாலும், இதுபோன்ற உளறல்களை அவர் இனிமேலாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள். 

சர்ச்சையின் மறுபெயர் ராஜேந்திர பாலாஜி என்றால் மிகையாகாது!