Published:Updated:

ONGC கிணறுகள் சட்டவிரோதமாக இயங்குகின்றனவா? - அதிரச்செய்யும் ஆர்.டி ஐ!

ONGC கிணறுகள் சட்டவிரோதமாக இயங்குகின்றனவா? - அதிரச்செய்யும் ஆர்.டி ஐ!
ONGC கிணறுகள் சட்டவிரோதமாக இயங்குகின்றனவா? - அதிரச்செய்யும் ஆர்.டி ஐ!

2017-ம் ஆண்டு, ஜூன் மாதம் 30ம் தேதி. ஓ.என்.ஜி.சியின் அந்தக் கிணற்றுக்குப் பெயர் – KADK (KUT35) . கதிராமங்கலம் பகுதியில் அமைந்திருந்த அந்தக் கிணற்றிலிருந்து கச்சா எண்ணெயை எடுத்து நாகை மாவட்டம், குத்தாலத்திற்கு எடுத்துச் செல்ல நிலத்தடியில் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு குழாயில் ஏற்பட்ட கசிவு...அங்கு இயற்கை விவசாயம் செய்து கொண்டிருந்த ஒரு விவசாயியின் மண்ணை மொத்தமாக பாழ்படுத்தியது. அவரின் 5 ஏக்கர் நிலத்தை நாசப்படுத்தியதோடு அல்லாமல், மிக முக்கியமான நீர்ப்பாசன வாய்க்காலுக்குள் புகுந்து அந்த நீரையும் மாசுபடுத்தியது. ஏற்கனவே, ஓ.என்.ஜி.சியால் தங்கள் நிலங்களும், நீரும், வாழ்வும், வாழ்வாதரமும் பெரும் சிக்கலில் இருந்த சூழலில், கதிராமங்கலம் பகுதி மக்கள் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராடுகிறார்கள். எந்த ஆயுதத்தையும் அவர்கள் ஏந்தவில்லை. அறவழியில் பெண்களும், குழந்தைகளும் பங்கேற்று தங்கள் நிலத்திற்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். 

ஓ.என்.ஜி.சி காவல்துறைக்கு தகவல் சொல்கிறது. தமிழ்நாட்டு காவல்துறை களத்தில் இறங்குகிறது. முதலில் தகாத வார்த்தைகளால் திட்டி, தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி மக்களை விரட்ட நினைக்கிறார்கள். அது முடியாமல் போவதால், கண்மூடித்தனமாக "லத்தி சார்ஜ்" செய்கிறார்கள். பெண்களும், குழந்தைகளும் நிறைந்திருந்த அந்தக் கூட்டம் தெறித்து ஓடுகிறது. கர்ப்பிணி பெண் உட்பட பல பெண்களுக்கும் பல அடிகள் விழுந்தன. மிகப் பெரிய வன்முறையை எந்த தயக்கமும் இன்றி செய்து முடித்தது, தமிழ்நாட்டு காவல்துறை. 

சரி... இப்போது இந்தப் பழங்கதை எதற்கு? என்று நினைக்கலாம். காரணம் இருக்கிறது. எந்தக் கிணற்றைக் காக்க... எந்த ஓ.என்.ஜி.சியின் ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அப்பாவி மக்களை அடித்து, விரட்டினார்களோ, தேவையற்ற பொய் வழக்குகளைப் போட்டு பலரின் வாழ்வை சூறையாடினார்களோ... அந்தக் கிணற்றுக்கு 2008ஆம் வருடமே சுற்றுப்புறச் சூழல் உரிமம் முடிந்துவிட்டது. அதற்குப் பின்னர், அதை செயல்படுத்த அதற்கான அனுமதி கிடையாது. அது சட்டவிரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது 700 கிணறுகளில் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. 

கூடுதல் தகவல்...கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். தமிழகத்தில் ஓ.என்.ஜி.சி கட்டுப்பாட்டிலிருக்கும் எந்த எண்ணெய் கிணற்றுக்குமே முறையான அனுமதி இல்லை. முறையான அனுமதி என்ன?! அந்தக் கிணறுகள் எதற்கும் இங்கு அனுமதியே இல்லை. அனுமதி பெற்ற மிக சில கிணறுகளுக்கும் கூட அனுமதி காலாவதியாகிவிட்டது. இப்படியாக ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள். இவை அனைத்தும் இன்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஓ.என்.ஜி.சி குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

தமிழகத்தில் இயங்கும்  ஓ.என்.ஜி.சியின் கிணறுகளின் எண்ணிக்கைக்கும், தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்திருக்கும் எண்ணிக்கைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதும் நிரூபணமாகியுள்ளது. 

மொத்தக் கிணறுகள் : 700 (ஓ.என்.ஜி.சி) - 219 (தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்).

செயல்பாட்டில் இருப்பவை: 182 (ஓ.என்.ஜி.சி) - 71 (தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்).

பல மாதங்களாகப் போராடி, பல மிரட்டல்களுக்கும், பயமுறுத்தல்களுக்கும் நடுவே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த தகவல்களைப் பெற்றிருக்கிறார் "காவிரி டெல்டா கண்காணிப்புக் குழு"வைச் சேர்ந்த விஜயலட்சுமி. 

எந்தக் காலகட்டத்தில், எந்தக் காரணத்திற்காக இந்த தகவல்களைப் பெற வேண்டும் என்று நினைத்தீர்கள்?"

கதிராமங்கலம், நெடுவாசல், நன்னிலம், நல்லாண்டார்கொல்லை என காவிரி டெல்டா பகுதி முழுக்கவே மக்கள் களத்தில் இறங்கி போராடி கொண்டிருந்த சமயம். சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமோடு இணைந்து நான் வேலை செய்யத் தொடங்கியிருந்தேன். அந்தப் பகுதியிலிருக்கும் மண் மற்றும் நீரை எடுத்து பரிசோதனைக்குக் கொடுத்திருந்தோம். அவை மிகவும் மாசுபட்டிருந்தன. இன்னொரு பக்கம் ஒரு உணர்வு... இத்தனை மக்கள் குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் கூட களம் கொண்டு போராடுகிறார்கள் என்றால் அவர்களின் பக்கம் ஏதோ ஓர் நியாயம் இருக்கும் என்று நினைத்தேன். அதே சமயம், ஓ.என்.ஜி.சியின் செயல்பாடுகள் அது ஏதோ பெரிய தவறை செய்கிறது என்பதை உணர்த்தியது. அதன் பொருட்டு தான், ஓ.என்.ஜி.சிக்கும், தமிழ்நாட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகளை அனுப்பினேன்."

தகவல்கள் கேட்டதும் கிடைத்ததா? ஓ.என்.ஜி.சி கொடுத்த தகவல்களை நீங்கள் வெளியிடவில்லையே?

"ஆமாம்... தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற்ற தகவல்களை மட்டும் தான் வெளியிட்டோம். ஓ.என்.ஜி.சி தகவல்களை வெளியிடவில்லை. காரணம்... அவர்கள் எங்களுக்கு தகவலே தரவில்லை. எங்கள் மனுவை இரண்டு முறை, ஏதேதோ காரணங்களை சொல்லி  நிராகரித்துவிட்டார்கள். இத்தனைக்கு நான் கேட்டது மிகவும் அடிப்படையான சில கேள்விகளைத் தான். இருந்தும் பரவாயில்லை... தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து பெற்ற தகவல்களே ஓ.என்.ஜி.சியின் உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து விட்டது. அவர்கள் தகவல் தராதது கூட பரவாயில்லை... ஆனால், என்னை மிரட்ட போலீஸை அனுப்பியது மிகவும் கண்டிக்கத்தக்கது, சட்டவிரோதமானதும் கூட."

என்ன போலீஸ் உங்களை மிரட்டியதா?

"ஆம்... தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எந்த தனிநபரும், எந்த அரசு நிறுவனத்திடமும் தகவல்களை கேட்டுப் பெறலாம். அது சாமானியனின் ஆயுதம். உரிமை. ஆனால், அந்த மனுதாரரின் ரகசியங்களைக் காப்பது மாண்பு மற்றும் அது தான் சட்டமும் கூட. ஆனால், என்னைப் பற்றிய தகவல்கலை ஐ.பி.யிடம் (Intelligence Bureau) கொடுத்துள்ளது ஓ.என்.ஜி.சி. அவர்கள் பல தடவை என்னைப் பார்க்க என் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார்கள். 'எனக்கு தேச விரோத சக்திகளோடு தொடர்பு இருக்கிறதா?' என்று விசாரிக்க வந்ததாக என் நண்பரிடம் சொல்லியுள்ளார்கள். அதே போல், தமிழ்நாடு போலீஸுமமென்னைத் தேடி வந்துள்ளது. என்றால், தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் என் குறித்த தகவல்களை போலீஸூக்கு கொடுத்துள்ளது. என்னை எப்படியாவது மிரட்டி அடிபணிய வைக்க நினைக்கிறார்கள். "

இறுதி தகவல்கள் கையில் கிடைத்த போது என்ன நினைத்தீர்கள்?

“மிகப் பெரிய அதிர்ச்சிக்குள்ளானேன். நான் ஏதாவது சில கிணறுகள் தான் அனுமதியில்லாமல் இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்று எண்ணினேன். ஆனால், ஒன்றுக்கு கூட இல்லை என்பது மிகப் பெரிய அதிர்ச்சி. இது முற்றிலும் சட்ட விரோதச் செயல். இது குறித்து ஏன் இன்னும் அரசியல்வாதிகள் பேச மறுக்கிறார்கள்? சட்ட விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஓ.என்.ஜி.சிக்கு இத்தனை நாள் அரசும், காவல்துறையும் எப்படி துணை நின்றன? சட்ட விரோத செயலை எதிர்த்து, சட்டத்திற்குட்பட்டு அறவழியில் போராடிய அப்பாவி மக்கள் மீது எத்தனை வன்முறை, எத்தனை வழக்குகள்? இதற்கெல்லாம் யார் பொறுப்பெற்பது? இதற்கெல்லாம் யார் பதில் சொல்வது? இப்படியாக ஏதாவது, யாராவது கேள்வி கேட்டுவிட்டால் உடனே காவல் துறையைவிட்டு மிரட்டுவது தான் அரசின் வேலையா? தமிழகத்தின் மொத்த வளமும், எதிர்காலமும், நம் மக்களின் நலமும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் பேராபத்தானது.” என்று பல கேள்விகளோடு பேசி முடிக்கிறார் விஜயலட்சுமி. 

இந்நிலையில் இந்த எண்ணெய் கிணறுகளுக்கான அனுமதி குறித்து, ஓ.என்.ஜி.சி நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. அந்த விளக்கம் இதோ.

பின் செல்ல