Published:Updated:

போபால் விஷவாயுவில் பிழைத்தவர்கள் கொரோனாவுக்குப் பலியா?

கொரோனா மரணம் (Representative Image)
கொரோனா மரணம் (Representative Image) ( AP )

அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் 5 மடங்கு அதிகம்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்தியப்பிரதேச மாநிலத்தில் 2500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 156 பேர் இறந்துள்ளனர். இவர்களில் தலைநகர் போபாலைச் சேர்ந்தவர்கள் 14 பேர். இந்த 14 பேரில் 12 பேர் 1984-ம் ஆண்டில் நிகழ்ந்த போபால் யூனியன் கார்பைட் விஷவாயுப் பேரிடரிலிருந்து மீண்டவர்கள் என தரவுகளை வெளியிட்டுள்ளது அவர்களுக்காக இயங்கிவரும் குழு.

பிரதமர் தேசிய ஊரடங்கை அறிவித்த சில நாள்களிலேயே இந்தக் குழுவினர் மத்திய அரசுக்கும் மத்தியப் பிரதேச அரசுக்கும் தரவுகளுடன் கூடிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள். அதில் போபால் விஷவாயுச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவிகிதத்துக்கும் மேல் தற்போது 55 வயதைக் கடந்தவர்கள்.

போபால் நகரம்
போபால் நகரம்

அவர்கள் அனைவருக்குமே நுரையீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நாள்பட்ட நோய்கள் இருந்து வருகின்றன. அதற்கான தொடர் சிகிச்சைகளையும் எடுத்துவருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் 5 மடங்கு அதிகம். உடலில் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள் என்பதால் அவர்களுக்கான உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அரசிடமிருந்து எவ்வித பதிலும் அதற்குக் கிடைக்கப்பெறாத நிலையில்தான் தற்போது இந்த மரணங்களும் நேர்ந்துள்ளன. இது கடமை தவறியதால் நிகழ்ந்த கிரிமினல் குற்றம் எனக் குற்றம்சாட்டி வருகிறார்கள் அந்தக் குழுவினர்.

அரசின் மீதான புகார் வலுவடைந்ததை அடுத்து நாள்பட்ட நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களில் COVID-19 க்கான பரிசோதனையை நடத்தத் தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகின் மிகப்பெரும் ஆலை விபத்தின் வரலாற்றுச் சாட்சிகளை அரசின் அலட்சியத்தால் கொரோனாவுக்குப் பலிகொடுப்பது சாதாரணமாகக் கடக்கக் கூடிய நிகழ்வல்ல என்று வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு