Published:Updated:

கோவை குடிநீர் ஒப்பந்த முறைகேடு... பின்னணியில் அமைச்சரின் சர்வாதிகாரமா?

கோவை குடிநீர் ஒப்பந்த முறைகேடு... பின்னணியில் அமைச்சரின் சர்வாதிகாரமா?
கோவை குடிநீர் ஒப்பந்த முறைகேடு... பின்னணியில் அமைச்சரின் சர்வாதிகாரமா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, மக்களுக்காகக் கொண்டுவரும் ஒரு திட்டம் குறித்த தகவலை, அந்த மக்களுக்கு வெளிப்படையாகக் கூறாமல் இருப்பது துரோகம் இல்லையா அமைச்சர் அவர்களே?

கோவை மாநகராட்சியில், 24 மணி நேரமும் குடிநீர் விநியோகத்துக்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள், பொதுக் குழாய்களின் நிலை, கட்டணம் அதிகரிக்கும் அபாயம், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட அணைகள், இனி பன்னாட்டு நிறுவனத்தின் கையிலா போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன. 

இதனிடையே, ``கோவை குடிநீர்க் குழாய்களில் வீணாகும் நீர் அதிகமாக இருக்கிறது. அதனால், அவற்றை மாற்றியமைத்துப் பராமரிக்கும் பணியை மட்டுமே சூயஸ் கவனிக்கும். கட்டணம் நிர்ணயிப்பது, குடிநீர் விநியோகம் போன்ற மற்ற அனைத்தும் மாநகராட்சியின் வசம்தான் இருக்கும்" என்று அதன் ஆணையர் விஜயகார்த்திகேயன் விளக்கமளித்தார். மேலும், `இந்தத் திட்டம் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தவறான தகவல் பரப்புவோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மாநகராட்சி சார்பில், போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல, நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டது.

இந்நிலையில், `சூயஸ் நிறுவனத்துடன், மாநகராட்சி போட்டுள்ள ஒப்பந்த நகலை வெளியிட வேண்டும்; அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று எதிர்க் கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. அப்படி, மாநகராட்சியிடம், இதுகுறித்த ஒப்பந்த நகலைக் கேட்டு அது கிடைக்காததால், தர்ணாவில் ஈடுபட்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பத்மநாபன் கைது செய்யப்பட்டார். பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க உட்பட அனைத்துக் கட்சியினரும் இந்தத் திட்டத்தை எதிர்க்கும் நேரத்தில், `பத்மநாபனை ரிமாண்டு செய்தால், பிரச்னை பெரிதாகிவிடும்' என்று மூத்த அமைச்சர் ஒருவர் சொன்னதால், பத்மநாபன் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக், ``26 ஆண்டு கால ஒப்பந்தம் என்பது மிகவும் அதிகம். கோவை போன்ற மாநகரில், மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும். அப்படியிருக்கும்போது, எதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. அதை, இவர்கள் தெளிவுப்படுத்தவும் இல்லை. எனவே, கட்டண உயர்வு மக்களின் தலையில்தான் விழும். மத்திய அரசு 33 சதவிகிதம், மாநில அரசு 20 சதவிகிதம், மாநகராட்சியின் பங்கு 40 சதவிகிதம் என்ற அடிப்படையில்தான் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும். மாநகராட்சியிடம் அவ்வளவு பெரிய தொகை இருக்காது. எனவே, குடிநீர்க் கட்டணம் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது. இவர்கள் சொல்வதுபோலவே, பராமரிப்புக்கு என எடுத்துக்கொண்டாலும், மாநகராட்சியில் இதுவரை பராமரிப்புக்கு 5 ஆண்டுகளுக்கு மேல், எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் போட்டதில்லை. 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் என்பது மிகப்பெரிய முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். 

மேலும், உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை, திட்ட மதிப்புகளுக்கு ஏற்ப மன்றக் கூட்டங்களில் அனுமதி வேண்டும்; 5 லட்ச ரூபாய்க்குட்பட்ட திட்டங்களுக்கு, அந்தந்த மண்டல உறுப்பினர்கள், அதிகாரிகள் அடங்கிய மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வாங்க வேண்டும்; 5 லட்ச ரூபாய்க்கு மேலான திட்டங்களுக்கு நிலைக்குழுவில், ஒப்புதல் வாங்க வேண்டும்; கோடிகளுக்கு மேலான திட்டங்களுக்கு, மாமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விவாதம் செய்து முடிவு எடுக்க வேண்டும்; ஓர் அதிகாரியோ, மேயரோ மட்டும் அத்தகைய திட்டத்தைக் கொண்டு வந்துவிட முடியாது. கோவை மாநகராட்சியில், கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லூர் தொகுதிகள் இருக்கின்றன. அதேபோல, மாநகராட்சியின் பகுதியாக, கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு தொகுதிகள் உள்ளன. ஆனால், இந்த மக்களிடம் எந்தக் கருத்தும் கேட்கவில்லை. யாராக இருந்தாலும் கோப்பைப் பார்வையிட, கடிதம் கொடுத்தால், சட்டப்படி அதைக் காட்டவேண்டும். `இது ஜனநாயக நாடு. ஆனால், இங்கு ஒரு பிரச்னையை விவாதிப்பதற்கோ, போராடுவதற்கோ, கருத்துச் சொல்வதற்கோ இடமில்லை' எனக் கூறி, சைபர் க்ரைமில் புகார் கொடுக்கின்றனர் என்றால், இதில் மிகப்பெரிய மர்மம் இருக்கிறது. இந்த ஒப்பந்தம் குறித்து வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

உள்ளாட்சித் துறை செயல்படாத துறையாக இருக்கிறது. கோவை மாநகராட்சியின், வருவாயைப் பெருக்க இவர்கள் எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை. இதனால்தான், பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மாநகராட்சி விஷயங்களில் அத்துமீறி தலையிடுகிறார். அவரின் சர்வாதிகாரப் போக்குதான், கோவை மாநகராட்சியில் அதிக அளவு இருக்கிறது. டெண்டர்களை உறுதிப்படுத்துவதில் இவரின் ஆதிக்கம் அதிகம். சூயஸ் ஒப்பந்தம் தொடர்பான, கோப்புகளைப் பார்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கப்போகிறோம். இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயனையும் நேரில் சந்திக்க உள்ளோம்" என்றார்.

ம.தி.மு.க மாநில இளைஞர் அணிச் செயலாளர் ஈஸ்வரன், ``எதன் அடிப்படையில் சூயஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரிய வேண்டும். மேலும், எதன் அடிப்படையில் ஒப்பந்தத் தொகையை நிர்ணயித்தார்கள்? எதற்காக, 26 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டுள்ளனர்? எந்தெந்த அதிகாரிகள் இதில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிய வேண்டும். இதுதொடர்பாக நான், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுள்ளேன். ஆனால், பதில் அளிப்பார்களா என்று தெரியவில்லை.

மாதம் ஒரு சேட்டிலைட்டை விண்ணுக்கு அனுப்புகின்றனர். ராணுவத்துக்கான, தளவாடங்களைத் தயாரிப்பதாக, `மேக் இன் இந்தியா' என்று சொல்கிறார்கள். அப்படியிருக்கும்போது, இந்தத் தொழில்நுட்பத்தை இவர்களால் ஏன் செய்ய முடியவில்லை? தண்ணீர் விடுவதற்கான, தொழில்நுட்பம்கூடவா `மேக் இன் இந்தியா'வில் இல்லை?

60 வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் விநியோகம் செய்வதால், மற்றப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் பிரச்னை ஏற்படாது என்பதை இவர்களால் உறுதியளிக்க முடியுமா? மக்களுக்காகக் கொண்டுவரும் திட்டத்தை, அந்த மக்களிடம் வெளிப்படையாகச் சொல்வதில் இவர்களுக்கு என்ன பிரச்னை இருக்கிறது? ஏற்கெனவே, உக்கடம் பாலம் அமைவதற்கு, எல் அண்டு டி நிறுவனம் எதிர்ப்பு தெரிவிப்பதால், மக்கள் வளர்ச்சித் திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. `சுங்கம் வசூலிக்கும் உரிமம் முடியும்வரை, இடையூறு செய்தால், நீதிமன்றத்துக்குச் செல்வோம்' என எல் அண்டு டி சொல்கிறது. நாளை சூயஸ் நிறுவனமும், இதுபோலச் சொல்வதற்கு வாய்ப்புள்ளது" என்றார், மிகத் தெளிவாக.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பத்மநாபன், ``தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு, கோவையில் நீர் ஆதாரங்கள் இருக்கின்றன. சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி, பழைய மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் விநியோகம் என்று சொல்லியிருக்கிறார்கள். கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. அப்படிப் பார்த்தால், ஒரு மாநகராட்சிக்குள், இரண்டு வகையான குடிநீர் விநியோகத்தை அமல்படுத்த முடியுமா? நீர் இருப்பதால், 24 மணிநேரம் குடிநீர் விநியோகம் எனச் சொல்கிறார்கள். நீரே இல்லாவிடின் இவர்களால், 24 மணிநேரமும் தண்ணீர் தரமுடியுமா? மாநகராட்சியின் பல பகுதிகளில் லாரிகள் மூலம்தான் குடிநீர் விநியோகம் செய்து வருகிறார்கள். தற்போது, அதையெல்லாம் என்ன செய்யப் போகிறார்கள்? உள்ளாட்சி அமைப்பில், மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நேரத்தில் ஏன் இதைச் செய்கிறார்கள்?

6 மாதங்களாக, இதற்கான எந்த ஆவணத்தையும், மக்களுக்குத் தருவதில்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? இதுதொடர்பாக, ஆவணங்களை நான் கேட்டதற்கு, `அது அரசிடம் இருக்கிறது. நான் என்ன திருடியா கொடுக்க முடியும்' என்று ஆணையர் கேட்கிறார். 6 மாதங்களாக, மாநகராட்சி இணையதளத்தில் எந்த ஆவணங்களும் பதிவேற்றப்படுவதில்லை. கேட்டால், பணிகள் நடந்து வருவதாகச் சொல்கிறார். திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் என அனைத்தையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு, பணத்தை வசூலிப்பதற்கு மட்டும்தான் மாநகராட்சி நிர்வாகம் இருக்கிறதா? தர்ணாவில் ஈடுபட்டதற்காக, என்மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில், எனக்கு அந்த ஆவணங்களைத் தருவதாகக் கூறியுள்ளனர்"  என்றார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், ``பத்மநாபன் என்னிடம், ஒப்பந்த நகலைக் கேட்டார். இதன் ஒப்பந்த நகல் 100-க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்டது. அதைச் சட்டப்படி, உடனடியாக ஒரு குறிப்பிட்ட தனிநபருக்கோ அல்லது, கட்சிக்கோ மட்டும் வழங்க முடியாது. மேலும், இதன் டெண்டர் விவரங்கள், tntenders.gov.in என்ற இணையதளத்தில் முழுமையாக உள்ளன. அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். உங்களுக்கு மேற்படி தகவல்கள் தேவைப்பட்டால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேளுங்கள் என்றுதான் நான் சொன்னேன். வேறு எதுவும் நான் கூறவில்லை" என்றார்.

மாநகராட்சி போட்ட ஒப்பந்தம், மாநகராட்சி நிர்வாகத்திடமே இல்லை என்றால், ஒப்பந்தம் என்ன அமைச்சரின் கையில் இருக்கிறதா? என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, ``சூயஸ் திட்டத்தை யார் எதிர்த்தாலும், அது கோவை மக்களுக்குச் செய்யும் துரோகம்" என்று அமைச்சர் வேலுமணி கூறியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, மக்களுக்காகக் கொண்டுவரும் ஒரு திட்டம் குறித்தத் தகவலை, அந்த மக்களுக்கு வெளிப்படையாகக் கூறாமல் இருப்பது துரோகம் இல்லையா அமைச்சர் அவர்களே?

தண்ணீர்ப் பிரச்னை எங்குமே ஓயப்போவதில்லையோ?

அடுத்த கட்டுரைக்கு