Published:Updated:

கோவை கல்லூரி மாணவி லோகேஸ்வரியைக் கொன்றது யார்? - முழு ரிப்போர்ட்

கோவை கல்லூரி மாணவி லோகேஸ்வரியைக் கொன்றது யார்? - முழு ரிப்போர்ட்
கோவை கல்லூரி மாணவி லோகேஸ்வரியைக் கொன்றது யார்? - முழு ரிப்போர்ட்

கோவை கல்லூரி மாணவி லோகேஸ்வரி பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்தது எப்படி என்பது பற்றிய முழுமையான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

"கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த சம்பவத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. பயிற்சி அளித்தவர், எங்களுடைய அதிகாரபூர்வ பயிற்சியாளர் இல்லை" என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ``நாங்கள் அவரை அழைக்கவில்லை. அவராகத்தான் எங்களை அணுகினார்" என்று கலைமகள் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ``கல்லூரி நிர்வாகத்தின் மீது பெற்றோர் குற்றம் சாட்டவில்லை" என போலீஸ் கூறுகிறது. உயிரிழந்த மாணவிக்கு வழக்கம் போல, நிவாரண நிதியை வழங்கிவிட்டு, ``இது துரதிர்ஷ்டவசமானது" என்று தமிழக அரசு கூறிவிட்டது.

ஆனால், சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள்வரை தன் பெற்றோருக்கு மகளாகவும், அண்ணணுக்குத் தங்கையாகவும், நண்பர்களுக்கு தோழியாகவும் இருந்த, லோகேஸ்வரி, இப்போது இல்லை. பல கனவுகளுடன் சுற்றித்திரிந்த 19 வயது மாணவியின் சிறகுகள்  உடைக்கப்பட்டு, அவரின் உயிர் பறிக்கப்பட்டுள்ள பரிதாபம் நடந்து விட்டது.

கோவை நரசிபுரம் பகுதியில் இயங்கி வருகிறது கலைமகள் கலை அறிவியல் கல்லூரி. இதுதவிர, அதே பகுதியில், இந்த நிர்வாகத்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி ஒன்றும் இயங்கி வருகிறது. ``12.7.2018 காலை 9.30 மணியளவில், எங்கள் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி குறித்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. ஏற்பாடு, நாட்டு நலப்பணித்திட்டம். சிறப்பு விருந்தினர் ஆறுமுகம், பேரிடர் மேலாண்மை கழகம், தமிழ்நாடு" இதுதான், நிகழ்ச்சி நடந்த தினத்தன்று கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட தகவல். 

சம்பவம் நடந்த வியாழக்கிழமை, ஆறுமுகம் தன்னுடைய அணி என்று இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் சில உபகரணங்களுடன் கலைமகள் கலை அறிவியல் கல்லூரிக்குச் சென்றுள்ளார். ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடம், தன் அனுபவம் குறித்து பேசியுள்ளார். மதிய உணவுக்குப் பிறகு, ஆபத்து காலங்களில் பேரிடர் மேலாண்மை செய்ய வேண்டிய பணிகள் குறித்து, மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார். அப்போது, கல்லூரி வளாகத்தில் உள்ள மூன்று அடுக்கு கட்டடத்தில், கயிறு கட்டி கீழே இறங்குவது, கீழே வலை விரித்து, மேலே இருந்து குதிப்பது போன்ற பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆறுமுகத்தின் உடன் வந்தவர்கள், முதலில் இதைச் செய்து காட்டியுள்ளனர். பின்னர், மாணவர்கள் சிலரும் அந்தப் பயற்சியில் இறங்கியுள்ளனர். அப்போதுதான் விபரீதம் நடந்துள்ளது.

பொதுவாக இதுபோன்ற பேரிடர் மேலாண்மை  மற்றும் முதலுதவி நிகழ்ச்சிகள் நடக்கும்போது, லோக்கல் போலீஸ் ஸ்டேஷன், தீயணைப்புத் துறை, மாவட்ட ஆட்சியர் போன்றோருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை. குறிப்பாக, தீயணைப்புத் துறையினரின் முன்னிலையில்தான் இத்தகைய பயிற்சிகள் நடக்க வேண்டும். அப்போது, அங்கு ஆம்புலன்ஸ்  இருக்க வேண்டும் போன்ற ஏராளமான விதிகள் இருக்கின்றன. ஆனால், கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் அவை எதுவுமே பின்பற்றப்படவில்லை. 

கீழே குதிக்க முடியாமல் அச்சத்தில் உறைந்து கிடந்த மாணவி லோகேஸ்வரியை, ஆறுமுகம் வலுக்கட்டாயமாக பிடித்துத் தள்ளுகிறார். இதில் முதல் மாடியின் 'சன்ஷேடு', மாணவியின் கழுத்தில் பலமாகத் தாக்கியதில் அவர் அடிபட்டுக் கீழே விழுகிறார். விழுந்தவரை, அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே லோகேஸ்வரி உயிரிழந்து விடுகிறார். என்ன நடந்தது என்பதை சுதாரிப்பதற்குள் லோகேஸ்வரியின் உயிர் பிரிந்துவிட்டது. ஊடகங்களில் இது தலைப்புச் செய்தியானவுடன், இப்போது அனைத்துத் தரப்பினரும், ``எங்களுக்குத் தெரியாது…" , ``எங்களுக்கும் அந்தப் பயிற்சிக்கும் சம்பந்தம் இல்லை" என்றுகூறி, சம்பிரதாயத்துக்காக இரங்கல் தெரிவித்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர்.

இதுதொடர்பாக மாணவர்களிடம் விசாரித்தபோது, ``லோகேஸ்வரி ரொம்ப நல்ல பொண்ணு. எந்த நிகழ்ச்சியா இருந்தாலும், தைரியமா முன்னாடி வந்து நிப்பாங்க. அப்படித்தான், அந்தப் பயிற்சிக்கும் போனாங்க. ஏற்கெனவே, ஒரு தடவ போய்ட்டு, பயமா இருக்குன்னு கீழ வந்துட்டாங்க. அப்பறம், கயிறு மூலமாக கீழ இறங்கிப் பார்க்கலாம்னுதான் திரும்பியும் போனாங்க. ஆனா, அவங்கள, அந்தப் பயிற்சியாளர் வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டார். அதனாலதான், இப்படி ஆகிடுச்சு" என்றனர்.

லோகேஸ்வரியின் தந்தை நல்லா கவுண்டர் ஒரு விவசாயி. தாயார் விவசாயத்துக்கு உதவி வருகிறார். லோகேஸ்வரியின் சகோதரர் செல்வகுமார் காருண்யாவில் டிராக்டர் ஓட்டி வருகிறார். மிகவும் எளிய குடும்பம். இதைத் தனக்குச் சாதகப்படுத்திக் கொள்ள நினைக்கிறது கல்லூரி நிர்வாகமும், ஆளுங்கட்சியும். கலைமகள் கலை அறிவியல் கல்லூரி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின் பினாமி நபரால் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், நரசிபுரம் பகுதி அமைச்சர் வேலுமணியின் தொகுதிக்குள் வருகிறது. இதனால், அவர்கள் சொல்வதைக் கேட்பதைத் தவிர அதிகாரிகளுக்கு வேறுவழியில்லை. 

கல்லூரி தரப்பில் லோகேஸ்வரியின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, ``5 லட்சம் ரூபாய் தருகிறோம்… இதோட பிரச்னையை விட்ருங்க" என்று கூறியுள்ளனர். ஆனால், லோகேஸ்வரியின் குடும்பத்தினர், ``போனது எங்க பொண்ணோட உயிரு. காசு கொடுத்தா சரி ஆகிடுமா?" என்று ஆதங்கப்பட்டுள்ளனர். இது மேலிடத்து விஷயம் என்று தெரிந்தவுடன், ``25 லட்சம் வேணும்" என்று லோகேஸ்வரியின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். அதற்கு, ``5 லட்சம்தான் கொடுக்க முடியும்… வேணும்னா கேஸ் போட்டுக்கோங்க" என்று கல்லூரி தரப்பில் பதிலளித்துள்ளனர். இருதரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது, தமிழக அரசுத் தரப்பில் 5 லட்சம் ரூபாய் நிதி அளிப்பதாக அறிவித்துவிட்டனர். லோகேஸ்வரியின் வீட்டை ஒரு வழியாக ஆஃப் செய்துவிட்டு, பிரேதப் பரிசோதனையும் நடத்தி, உடலும் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

``இந்த விவகாரம் தொடர்பாக, மீடியாவிடம் பேசக்கூடாது.. பேசினால் யாரும் கல்லூரியில் இருக்க முடியாது" என்று மாணவர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. இதனால், லோகேஸ்வரியின் நெருங்கிய நண்பர்களும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. 

கல்லூரி நிர்வாகமோ, ``ஆறுமுகம் தரப்பில் இருந்துதான் எங்களை அணுகினார்கள். மாணவர்களுக்கு உதவிகரமாக இருப்பதற்காகத்தான் சம்மதம் தெரிவித்தோம். இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை" என்று கூறி தப்பித்துக்கொண்டுள்ளது.

``ஆறுமுகம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மையைச் சேர்ந்தவர் இல்லை. அவர் கொடுத்த முகவரி போலியானது. அவரின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். மாணவியின் பெற்றோர், கல்லூரி நிர்வாகம் மீது குற்றம்சாட்டவில்லை" என்று கூறியுள்ளனர்.

பயிற்சியாளர் என்று தன்னை கூறிக்கொள்ளும் ஆறுமுகம் ஒரு மாற்றுத் திறனாளி. நேற்று நடைபெற்ற பயிற்சிக்காக கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு, சான்றிதழுக்கு 50 ரூபாய் கட்டணம் வேண்டும். இந்தச் சான்றிதழ்களை, எம்ப்ளாய்மென்ட்டிலும் பதிவு செய்யலாம்" என்று ஆறுமுகம் கூறியுள்ளார்.

``பேரிடர் மேலாண்மைக்கும், எம்ப்ளாய்மென்ட்டுக்கும் சம்பந்தமே இல்லை. மேலும், தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் `மாக் ட்ரில்லிங்' எனப்படும், ஆபத்து கால பயிற்சிகளை மேற்கொள்ளவே கூடாது. இதற்குக் கட்டணம் வசூலிப்பது மேலும் சந்தேகத்தை அதிகரிக்க வைக்கிறது. இப்படிப்பட்ட, ஒரு நபரை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி எப்படி அனுமதித்தது? கல்லூரியின் அனுமதி இல்லாமல், அவர் எப்படி மாடியில் ஏறினார்? கல்லூரி தரப்பில் இருந்தும், ஆறுமுகம் அணிக்கு ஒரு அமெளன்ட் சென்றிருக்கும். ஆபத்து காலத்தில் உதவும், பேரிடர் மேலாண்மையை வைத்து பணம் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கல்லூரி நிர்வாகமும் இதில் பொறுப்பில்லாமல் செயல்பட்டுள்ளது. எனவே, ஆறுமுகத்துடன் இணைந்து கல்லூரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக, கலைமகள் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் நம்மிடம் பேசவில்லை. ஆறுமுகம் யார் என்பது போலவே, அவரை எதற்காக கல்லூரி அனுமதித்தது என்ற கேள்வியும் எழுகிறது. ஆறுமுகத்தின் பணத்தாசையும், கல்லூரி நிர்வாகத்தின் பொறுப்பற்றத் தன்மையும் சேர்ந்து மாணவி லோகேஸ்வரியின் உயிரைப் பறித்து விட்டது. 

அடுத்த கட்டுரைக்கு