Published:Updated:

‘கொள்ளிடம் ஆற்றில் அந்தரத்தில் பாலங்கள்!’ - மணல் கொள்ளையை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

‘கொள்ளிடம் ஆற்றில் அந்தரத்தில் பாலங்கள்!’ - மணல் கொள்ளையை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
‘கொள்ளிடம் ஆற்றில் அந்தரத்தில் பாலங்கள்!’ - மணல் கொள்ளையை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருச்சியில் கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் பாலங்கள் அந்தரத்தில் தொங்குவதால் அடுத்த ஆபத்து  உள்ளதாக கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் ஏற்பட்ட உடைப்பை, தமிழக அரசு அதிகாரிகளால் சரி செய்வதற்குள் அவர்களின் தாவு தீர்ந்துவிட்டது. எத்தனைப் போராட்டம், பரிதவிப்புகள் அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அப்படியான பரிதவிப்பு இனி நடந்துவிடக்கூடாது எனப் பதறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். முக்கொம்பு மேலணை உடைந்ததும், தமிழகத்தின் பல்வேறு அணைகள், பாலங்களின்  ஸ்திரத்தன்மை குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதில் பல பாலங்கள் பாதிக்கப்பட்டதற்கு காரணம் மணல் கொள்ளை என அடித்துச் சொல்வதுடன், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பாதிக்கப்பட்டுள்ள பாலங்கள், கட்டடங்களைப் பாதுகாத்திட வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாகக் கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்தன. அதையடுத்து, காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. இதனால் காவிரி ஆற்றில் அளவுக்கதிகமான தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பொதுப்பணித் துறை மூலம், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர், முறையே பிரித்து விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடர்ச்சியாக விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வரை திறந்துவிடப்பட்டதால், ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக திருச்சி திருவளர்ச்சோலை, உத்தமர்சீலி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மிதந்தன. சிதம்பரம், அரியலூர் திருமானூர்  பகுதிகளில் உள்ள பல கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், வெள்ளப்பெருக்கில் கடந்த ஆகஸ்ட் 18-ம்தேதி திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இருந்த 90 வருட பழைமையான இரும்பு பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதுநடந்த சில தினங்களிலேயே கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி இரவு முக்கொம்பு கொள்ளிடம்  மேலணையில் மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

தகவலறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடுத்த இரண்டாம் நாளே நேரடியாக முக்கொம்புக்கே வந்து ஆய்வு நடத்தினார். மேலும் சீரமைப்புப் பணிகளை தீவிரப்படுத்திய அவர், முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பகுதியில் 410 கோடி செலவில்  புதிய  அணைக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கொள்ளிடம்  பழைய பாலத்தின் அருகில்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், கடந்த 2016-ம் ஆண்டு சுமார் ரூ.80 கோடி மதிப்பில், கட்டி முடிக்கப்பட்ட  சென்னை நேப்பியர் பாலம்  வடிவமைப்பைப் போன்று புதிய பாலம் மட்டுமே தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்தப் புதிய பாலத்தில் உள்ள 24 தூண்களில், 17 முதல் 23 வரையிலான 7 தூண்கள் வெள்ளத்தில் மண்ணரிப்பு காரணமாக, அஸ்திவாரம் வெளியே தெரியும் அளவுக்குப் பிடிமானம் இல்லாமல் காட்சியளிக்கிறது. தரைப்பகுதியிலிருந்து சுமார் 15 அடி உயரம் வரை மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது, பருவ மழை இன்னும் சில நாள்களில்  தமிழகத்தில் தொடங்க  உள்ளதால், பருவமழை தீவிரம் அடைந்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மண் அரிப்பின் காரணமாக புதிய பாலத்துக்கும் ஆபத்து ஏற்படலாம்  எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இதேபோல் கொள்ளிடம் ஆற்றில்  அமைக்கப்பட்டிருக்கும் உயரழுத்த மின்கோபுரங்களின் பில்லர்கள், காவிரி கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்காக நவீன ஆழ்குழாய் குடிநீர் பை பில்லர்கள் உள்ளிட்டவையும் தளத்தில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, அதன் அடிப்பகுதியில்  மண்ணில் இருந்து வெளியே காட்சியளிக்கின்றன.

இது குறித்து  தண்ணீர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வினோத்சேஷன்,

``முக்கொம்பு தடுப்பணை மற்றும் இரும்புப் பாலம் ஆகியவை இடிந்து விழுந்துள்ளன. திருவெறும்பூர் கூட்டுக்குடிநீர் திட்டம் பாலம் விரிசல் விட்டு கீழே இறங்கியுள்ளது. இவையெல்லாம் கொள்ளிடம் ஆற்றில் இருப்பவை. இவை இடிந்து விழுந்ததற்கும், கடுமையாகப் பாதிக்கப்பட்டதற்கும் இப்பகுதியில் நடந்த மணல் கொள்ளைதான் காரணம். புதிய பாலத்தின் அஸ்திவார தூண்களின் கீழ்ப்பகுதி  வெளியே தெரிகிறது. இதனால் புதிய பாலமும் வலுவிழந்துள்ளதைக் காட்டுகிறது.

இதற்குக் காரணம் மணல் கொள்ளைதான். முக்கொம்பில் இருந்து கல்லணை வரை சுமார் 14 மைல் தூரம் உள்ளது. இதில் கொண்டையம்பேட்டை, திருவளர்சோலை, கிளிக்கூடு, உத்தமர்சீலி போன்ற பகுதிகளில் பல மணல் குவாரிகள் அமைத்து மணல் அள்ளப்பட்டது. இந்தக் குவாரிகளில் 30 அடிக்கும் அதிகமான ஆழத்தில் மணல் எடுத்ததாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மணல் எடுத்த இடங்களில் இருந்த பெரும் பள்ளங்களில், இருக்கும் பள்ளத்தை நிரப்ப மேடு பகுதிகளில் உள்ள மணல் அடித்து வரப்பட்டது. அதன்காரணமாக முக்கொம்பு தடுப்பணை மற்றும் இரும்புப் பாலம் பகுதிகளில் இருந்த மணல் அடித்துச் செல்லப்பட்டது. இதனால்தான் பாதிப்பு உண்டானது.

மணல் அரிப்பால் தடுப்பணை மற்றும் இரும்புப் பாலம், கூட்டுக் குடிநீர் திட்டப் பாலம், மின்சார கம்பங்கள் என அனைத்துமே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இனியும் மணல் கொள்ளையை வேடிக்கை பார்த்தால் பாதிப்பு இன்னும் கடுமையாக இருக்கும்” என எச்சரித்தார்.

அடுத்த கட்டுரைக்கு