Published:Updated:

“கல்யாணம் ஆகிடுச்சுல்ல... எதுக்காக படிக்க வர்றீங்க?”

“கல்யாணம் ஆகிடுச்சுல்ல... எதுக்காக படிக்க வர்றீங்க?”
பிரீமியம் ஸ்டோரி
News
“கல்யாணம் ஆகிடுச்சுல்ல... எதுக்காக படிக்க வர்றீங்க?”

“கல்யாணம் ஆகிடுச்சுல்ல... எதுக்காக படிக்க வர்றீங்க?”

பிரிக்கவே முடியாதவை பட்டியலில், பல்கலைக்கழகங்களும் சர்ச்சைகளும் இணைந்துவிட்டன. துணை வேந்தர் கணபதி லஞ்சம் வாங்கிக் கைதானதால் தலைப்புச் செய்தியான பாரதியார் பல்கலைக்கழகம், இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்தவர் ஹரிதா. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை உளவியல் அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், 2017 நவம்பர் ஹாஸ்டலில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மாணவிக்கு உதவியதற்காக, ஹரிதாவுக்கு வலுக்கட்டாய மாக டி.சி கொடுத்து பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி யுள்ளது. 2017 நவம்பரிலேயே இந்த சம்பவம் நடந்திருந்தாலும், யாரிடம் எப்படி புகார் செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த ஹரிதா, இப்போது தனது துறைத் தலைவர் முதல் அப்போதைய ஹாஸ்டல் சீஃப் வார்டன் வரை அனைவர்மீதும் அடுக்கடுக் கான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.

ஹரிதாவிடம் பேசினோம். ‘‘ஹாஸ்டலில் இருந்த சக மாணவிகள் இரண்டு பேருக்கு நவம்பர் 14-ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் போனது. சூப்பர்வைஸர் வெண்ணிலாவிடம் ‘மாணவிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வேண்டும்’ என்று கேட்டோம். ஆனால் அவர், ‘இரவு 7.30 மணிக்குமேல் ஆம்புலன்ஸ் தரமுடியாது’ என மறுத்துவிட்டார். எனவே, கால் டாக்ஸி புக் செய்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் திரும்ப அழைத்துவந்தபோது, உள்ளே வரமுடியாதபடி ஹாஸ்டலின் கதவுகளை மூடிவிட்டனர். ஒருகட்டத்தில் ஸ்டெஃபி என்ற மாணவிக்கு வலிப்பு வந்துவிட்டது. பின்னர் மற்ற மாணவிகளும் திரண்டு வந்ததால், கதவைத் திறந்து உள்ளே அனுமதித்தனர். 

“கல்யாணம் ஆகிடுச்சுல்ல... எதுக்காக படிக்க வர்றீங்க?”

அடுத்த நாள் வார்டன் பிரேமா மேடமை சந்தித்து, எங்களது புகாரைக் கடிதமாக எழுதிக் கொடுத்தோம். புகார்மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்த எங்கள்மீதுதான் பாய்ந்தார்கள். எங்களது துறைத் தலைவர் வேலாயுதம், நான் இருந்த வகுப்பறைக்கு வந்து அனைத்து மாணவர்கள் முன்பாகவும் மிரட்டும்விதமாகப் பேசினார். ‘நீங்கள் என்ன சமூக சேவை செய்வதற்காகவா, இங்கே வந்துள்ளீர்கள்? இந்த க்ரூப் சேர்க்கிற வேலை எல்லாம் இங்கு வேண்டாம். அதையெல்லாம் பாலக்காடுக்கு அந்தப் பக்கம் வைத்துக்கொள்ளுங்கள். இங்கு நீங்கள் அமைதியாகத்தான் இருக்க வேண்டும். மருத்துவமனைக்குச் செல்கிறோம் என்று சொல்லிவிட்டு யாருடனாவது மாணவிகள் ஓடிப்போனால் யார் பொறுப்பு?’ என்று கேட்டவர், என்னை ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்று அசிங்கப்படுத்தினார். பின்னர், அவர் என்னைத் தனது அறைக்கு அழைத்து, ‘உனக்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சுல்ல... வீட்ல இருந்து மத்த வேலைங்கள செய்ய வேண்டியது தானே? எதுக்காகப் படிக்க வர்றீங்க?’ என்று கேட்டார். அடுத்த நாள் என் பெற்றோரை அழைத்துவரச் சொன்னார்.

அடுத்த நாள் என் அப்பா வந்ததும், சீஃப் வார்டன் தர்மராஜ், ‘இவங்களை டி.சி வாங்கிட்டு கூட்டிட்டுப் போயிடுறது நல்லது. அதைமீறி உங்க பொண்ணு இங்க படிக்கணும்னா, அவங்களுக்கு என்ன ஆனாலும் நீங்கள்தான் பொறுப்பு என எழுதிக்கொடுங்கள்’ என்று என் தந்தையிடம் சொன்னார். இதனால் என் அப்பா பயந்து விட்டார். மேலும் வேலாயுதம் என்னையும் என் கணவரையும் தனியாக அழைத்து, ‘‘இந்தப் பிரச்னையை இதோட விட்ருங்க. கோர்ட், கேஸ்னு போக நினைக்காதீங்க’ என்றார். பின்னர் என் கணவரைப் பார்த்து, ‘‘நீங்க ஏன் மனைவியை காலேஜுக்கு அனுப்பறீங்க. வீட்லயே வெச்சுக்க வேண்டியதுதான. வீட்ல வெச்சு என்ன பண்ணணும்னு வேணா நான் சொல்லித் தர்றேன்’ என்றெல்லாம் மோசமாகப் பேசினார்.

இங்கு கட்டணம் குறைவு என்ற காரணத்தால் தான், கேரளாவிலிருந்து இங்கு படிக்க வருகிறோம். சக மாணவிகளுக்கு உதவி செய்யப்போய் எனக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டு விட்டது. இது குறித்து தமிழக, கேரள மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையங்களில் புகார் அளித்துள்ளோம். தேசிய மகளிர் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, பல்கலைக் கழகத்தில் உள்ள பேராசிரியர்களை வைத்தே ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளனர். அந்தக் குழுவினர், ‘கேஸை வாபஸ் வாங்கிக்கோமா... வேலாயுதம் சார் பாவம்’ என வற்புறுத்துகின்றனர். என்னுடைய படிப்பு பாதியில் நின்றதற்குக் காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் நடவடிக்கை எடுக்கா விட்டால், நீதிமன்றத்துக்குச் செல்வேன்’’ என்றார் உறுதியாக.

“கல்யாணம் ஆகிடுச்சுல்ல... எதுக்காக படிக்க வர்றீங்க?”

இந்தச் சம்பவம் நடந்த நவம்பர் 14-ம் தேதி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தார். அதற்காக பல டிரைவர்களுக்கு மாற்றுப் பணி கொடுக்கப் பட்டிருந்ததாகவும், அதனால்தான் மாணவிகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்யவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து உளவியல் அறிவியல் துறைத் தலைவர் வேலாயுதத்திடம் கேட்டோம். “விசாரணை நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இதுகுறித்து நான் பேசக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறார்கள். நான் அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுக்கிறேன்” என்றார். மாணவி ஹரிதா குற்றச்சாட்டு வைத்துள்ள சீஃப் வார்டன் தர்மராஜ், துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெற்ற வழக்கில், உடந்தையாக இருந்ததற்காகக் கைது செய்யப்பட்டவர். தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள அவரிடம் இந்தக் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டோம், ‘‘நான் அவ்வாறு பேசவில்லை. நான் அந்த மாணவியின் தந்தையிடம்தான் பேசினேன். அந்த மாணவியிடம் நான் பேசியதே இல்லை’’ என்றார்.

- இரா.குருபிரசாத்