Published:Updated:

இரட்டை நுழைவாயில், தனித்தனி கவுன்ட்டர்... சமூகத்துக்கு என்ன சொல்கிறது சென்னை ஐ.ஐ.டி?!

ஒற்றை கூரைக்குள் பல வகைப் பிரிவினைகளை அனுமதித்து, இதுவரை இல்லாத அளவுக்கு அருவருக்கத்தக்க பாகுபாட்டுச் செயல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது நிர்வாகம் என்னும் புகார்கள் வரத்தொடங்கியிருக்கின்றன.

இரட்டை நுழைவாயில், தனித்தனி கவுன்ட்டர்... சமூகத்துக்கு என்ன சொல்கிறது சென்னை ஐ.ஐ.டி?!
இரட்டை நுழைவாயில், தனித்தனி கவுன்ட்டர்... சமூகத்துக்கு என்ன சொல்கிறது சென்னை ஐ.ஐ.டி?!

”சென்னை ஐ.ஐ.டி-யில் தீண்டாமை தொடர்கிறது!” - ஐ.ஐ.டி-யின் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்தி இது. பதிவுடன் இணைக்கப்பட்டிருக்கும் படங்கள், `ஐ.ஐ.டி என்பது எதற்கான நிறுவனம் ’என்னும் சந்தேகத்தைக் கொடுக்கிறது. சைவம் சாப்பிடுபவர்களுக்கும், அசைவம் சாப்பிடுபவர்களுக்கும் தனித்தனியாக கவுன்ட்டர்கள், நுழைவாயில்கள், தனித்தனியான கை கழுவும் இடங்கள்.

இது மட்டுமல்ல சைவத்திலும் வெங்காயம், பூண்டு சேர்க்கப்பட்ட உணவுக்கு ஒரு கவுன்ட்டர், வெங்காயம், பூண்டு சேர்க்கப்படாத உணவு வகைகளுக்கு தனியான கவுன்ட்டர், சைவ, அசைவ உணவுகளைச் சமைப்பதற்கான தனித்தனி பாத்திரங்கள் என ஒரு பழக்கம் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒற்றை கூரைக்குள் பல வகைப் பிரிவினைகளை அனுமதித்து, இதுவரை இல்லாத அளவுக்கு அருவருக்கத்தக்க பாகுபாட்டுச் செயல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது நிர்வாகம் என்னும் புகார்கள் வரத்தொடங்கியிருக்கின்றன.

”இங்க இந்த வழக்கத்தைத்தான் ஃபாலோ பண்றாங்க. தனித்தனி எண்ட்ரென்ஸ், வாஷ் பேசின்ஸ், தனித்தனி சமையல் பாத்திரங்கள்னு எல்லாமும் இப்படிதான். சாப்பிடும் இடத்துல ஒரு ஊரும், சேரியும் இருக்கு. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் பெரிய ஆராய்ச்சிகளுக்கும் மேற்படிப்புக்கும் சென்னைதான் தலைநகரம். சென்னையில இருக்குற இத்தனை பெரிய நிறுவனத்துலயே இதுதான் நிலைமையா இருக்குன்னா, நாமெல்லாம் யாரு? சமத்துவம் இருக்குன்னு இன்னும் யாரை ஏமாத்தணும்னு இருக்காங்க. நிர்வாகம் என்ன சொல்லுதுன்னு கேட்டுப்பாருங்க. ஏதாவது நகைச்சுவையான காரணம் சொல்வாங்க” என்று ஆதாங்கத்துடன் பதிலளித்தார் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவர்.

வாசகர் வட்டத்தில் இல்லாத ஆராய்ச்சி மாணவர் ஒருவரிடம் பேசியபோது, “ஐ.ஐ.டி சென்னையில் மொத்தம் 21 மாணவர் விடுதிகள் இருக்கின்றன. ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்பு வெங்காயம் அல்லது பூண்டு சேர்க்காத உணவு வேண்டும் என்ற சில மாணவர்களின் கோரிக்கைக்காக அவர்களுக்கு மட்டும் அத்தகைய உணவு வழங்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு 'Pure Vegetarian Counter' என்னும் பெயரில் வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவு கவுன்ட்டரைத் தொடங்கிவிட்டார்கள்.

ஹிமாலயா மெஸ்ஸில் இருக்கும் ஆர்.ஆர். வட இந்திய மாணவர்களுக்காகத்தான் இந்த ஏற்பாடு. அசைவ உணவுக்கு சகிப்பின்மையை காரணமாக சொல்வதைக் கூட என்னால் உணர முடிகிறது. தனித்தனி எக்ஸிட் எண்ட்ரி வைப்பதும், கை கழுவும் இடங்களைத் தனித்தனியாக வைப்பதும் என்ன விதமான நடைமுறைன்னு தெரியல. ஹாஸ்டல் நிர்வாகம், உணவக் குழு, நிர்வாகம் எல்லாம் சேர்ந்துதான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறாங்க. அவங்களுக்கு தெரியாம எதுவும் சாத்தியமில்ல” என்கிறார்.

”மெஸ் கண்காணிப்புக் குழுவுக்கும், இந்த போஸ்டர்களுக்கும் தொடர்பில்லை. இது கேட்டரிங் செய்பவர்களால் செய்யப்பட்ட தவறாக இருக்கலாம். ஒவ்வொரு கவுன்ட்டருக்கு பக்கத்திலும் மாணவர்களின் வசதிக்காக வைக்கப்பட்ட கை கழுவும் இடங்களில் இப்படியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இது நிர்வாகத்துக்கு தெரிந்து நடக்கவில்லை. மாணவர்கள் மனதைப் புண்படுத்தியதால் அந்த நோட்டீஸ் அகற்றப்பட்டுவிட்டது” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது ஐ.ஐ.டி-யின் ஹாஸ்டல் அஃபேர்ஸ் துறை. மாணவர்களின் வசதிக்காக வைக்கப்பட்ட கை கழுவும் இடங்களுக்கு சைவ, அசைவ லேபில்கள் கொடுக்கப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதைக் குறித்து எந்த விளக்கமும் இல்லை. 

2017 மே மாதம் மாட்டுக்கறித் திருவிழா நடத்தப்பட்ட நேரத்தில், சூரஜ் என்னும் மாணவர் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம். தனித்தனி நுழைவாயில்கள், கை கழுவும் இடங்கள் குறித்த ஐ.ஐ.டி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தியின் விளக்கத்தைக் கேட்க பல முறை முயற்சித்தோம். பதில் கிடைக்கவில்லை. பதில் அளிக்கப்பட்டால் அதையும் இணைப்பதற்கு தயாராக இருக்கிறோம். 

அடுத்த சிஸ்டம் என்ன என்பதைப் பற்றி நினைத்தால் பயமாக இருக்கிறது!