Published:Updated:

தேர்வுத்தாளை மறுமதிப்பீடு செய்ய பேராசியர்களுக்குக் கோடிக்கணக்கில் செலவு!

தேர்வுத்தாளை மறுமதிப்பீடு செய்ய பேராசியர்களுக்குக் கோடிக்கணக்கில் செலவு!
தேர்வுத்தாளை மறுமதிப்பீடு செய்ய பேராசியர்களுக்குக் கோடிக்கணக்கில் செலவு!

ண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் ஏகப்பட்ட குளறுபடி நடந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால், மறுமதிப்பீட்டில் குளறுபடி என்பது இந்திய அளவில் உள்ள பிரச்னை என்பது தகவல் உரிமைபெறும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 

`செமஸ்டர் தேர்வில் ஃபெயிலானாலும் பரவாயில்லை, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தாலே போதும், அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறலாம்’ என்ற சூழல் நிலவி வருகிறது. மும்பை பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீட்டில் விண்ணப்பித்தவர்களில் 99 சதவிகிதத்தினர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். ஒரு சதவிகிதம் பேரின் மதிப்பெண் மட்டும் குறைந்திருக்கிறது.

`மும்பை பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீடு செய்யும் பேராசிரியர்களுக்கு எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டிருக்கிறது’ என்ற விவரத்தை, அங்கு படிக்கும் மாணவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரி இருந்தார். இதற்கு மும்பை பல்கலைக்கழகம், `2016-17-ம் கல்வியாண்டில் 6.19 கோடி ரூபாய், 2017-18-ம் கல்வியாண்டில் 6.58 கோடி ரூபாய் மறுமதீப்பிடு செய்த பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. 2018-19-ம் கல்வியாண்டில் இதுவரை 2.72 கோடி ரூபாய் மறுமதிப்பீட்டுக்கான ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது’ என பதிலளித்துள்ளது. 

ஒவ்வோர் ஆண்டும் மறுமதிப்பீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதிலிருந்தே, பல்கலைக்கழகங்கள் மறுமதிப்பீட்டில் மதிப்பெண்ணை வாரி வழங்குகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். மும்பை பல்கலைக்கழகத்தில் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மறுமதிப்பீடு செய்ய 60,712 பேர், 2018-ம் ஆண்டு 76,828 பேர் விண்ணப்பித்துள்ளனர். மறுமதிப்பீடு செய்ய வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மூலம், 2017-ம் ஆண்டு 5.29 கோடி ரூபாயும், 2018-ம் ஆண்டு 3.96 கோடி ரூபாயும் பல்கலைக்கழகத்துக்கு வருமானம் கிடைத்துள்ளது.

மும்பை பல்கலைக்கழகத்தில், முதல் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களிடம் ஒரு தேர்வுத்தாளுக்கு 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பேராசிரியர்களுக்கு மறுமதிப்பீடு செய்ய 25 ரூபாய் வழங்கப்படுகிறது. மும்பை பல்கலைக்கழகம், 2017-18-ம் ஆண்டில் 116 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. இதில் 6.5 கோடி ரூபாய் மறுமதிப்பீட்டுக்காக பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதிப்பீடு செய்யப்பட்ட தேர்வுத்தாளை மீண்டும் மறுமதிப்பீடு செய்யவே ஏழு முதல் எட்டு சதவிகிதத் தொகையை செலவு செய்திருக்கிறது  அந்தப் பல்கலைக்கழகம்.

பல்கலைக்கழகங்கள் தங்கள் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே, செமஸ்டர் தேர்வில் குறைவான மதிப்பெண் வழங்குவதாகவும், மறுமதிப்பீட்டின் மூலம் பல்கலைக்கழகத்தின் வருமானம் அதிகரிப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், விண்ணப்பங்கள் மூலம் பெறப்படும் தொகையைவிட,  பேராசிரியர்களுக்குக் கூடுதல் தொகை வழங்கி பல்கலைக்கழகத்துக்கு இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

பேராசிரியர்கள் முதன்முறையாக தேர்வுத்தாளைத் திருத்தும்போது அலட்சியப்போக்குடன் செயல்படுவதாகவும், எப்படியும் மறுமதிப்பீடு செய்வார்கள் என்ற மனநிலையிலேயே தேர்வுத்தாளைத் திருத்துவதாகவும், குறைவான ஆசிரியர்களைக் கொண்டு அதிகளவில் ஏனோ தானோவென தேர்வுத்தாள்களைத் திருத்துவதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.

மறுமதிப்பீடு பிரச்னை ஒருபுறம் இருக்க, முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை மாற்றாமல் அதே வினாத்தாள்களை வழங்குவது, என்ற குற்றச்சாட்டும் பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறை மீது வைக்கப்படுகிறது. மறுமதிப்பீடு செய்யும்போது அதிக மதிப்பெண் வழங்கக் கோடிக்கணக்கில் பணம் புழங்குவது தெரிந்திருக்கலாம். ஆனால், மறைமுகமாக, தேர்வுத்தாள்களை அச்சிட்டுத் தருவதற்காக நிறுவனங்களிடம் பேரம்பேசி பல்கலைக்கழக நிர்வாகிகள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்ற புதிய குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. 

ஒவ்வோர் ஆண்டும் மறுமதிப்பீடு செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேர்மையானவர்களை உருவாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் பல்கலைக்கழகங்களே, ஊழல்களின் கூடாரங்களாக மாறி இருப்பதை என்னவென்று சொல்வது?!