Published:Updated:

5 மதிப்பெண் 50 ஆனது எப்படி..?! ஆசிரியர் பட்டயத் தேர்வில் குளறுபடி

``விடைத்தாள் திருத்துவதில் குளறுபடிகள் அண்மைக்காலமாக இருந்துவருகின்றன. இதற்குக் காரணம், தனியார் சுயநிதிக் கல்லூரியில் பணியாற்றுபவர்களைத் தேர்வுத்தாளைத் திருத்த அனுமதித்ததுதான்.’’

5 மதிப்பெண் 50 ஆனது எப்படி..?! ஆசிரியர் பட்டயத் தேர்வில் குளறுபடி
5 மதிப்பெண் 50 ஆனது எப்படி..?! ஆசிரியர் பட்டயத் தேர்வில் குளறுபடி

சிரியர் பயிற்சிப் பட்டய விடைத்தாளைத் திருத்தியதில் மிகப்பெரிய குளறுபடி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 2,500 பேரின் மதிப்பெண் ஒற்றை இலக்கத்திலிருந்து 50 மதிப்பெண்ணாக மாறியது கண்டு அதிர்ச்சியடைந்த அரசுத் தேர்வுகள் இயக்ககம், ஆசிரியர் பயிற்சிப் பட்டயத் தேர்வு முடிவுகளை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் 403 ஆசிரியர் பயிற்சி மையங்கள் இயங்குகின்றன. இவற்றில் 15,000-க்கும் மேற்பட்டவர்கள் படித்துவருகின்றனர். இவர்களுக்கு ஜூலை மாதம் தேர்வு நடைபெற்றது. சேலம், திருச்சி, திருநெல்வேலியில் மையங்கள் அமைக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தப்பட்டன.

இந்த மையங்களிலிருந்து மதிப்பெண் மட்டும் பெறப்பட்டு தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது தேர்வுகள் இயக்ககம். இதில் 3,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விடைத்தாள் திருத்துவதற்கு அமைக்கப்பட்ட மையங்களிலிருந்து திருத்தப்பட்ட விடைத்தாள்கள் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்குக் கொண்டுவரப்பட்டு, குறிப்பிட்ட காலம் வரை பாதுகாப்பது வழக்கம். இவ்வாறு கொண்டுவரப்பட்ட விடைத்தாள்களை மேற்பார்வை செய்ததில், பெரும்பாலானவர்கள் ஒற்றை இலக்கத்திலேயே மதிப்பெண் பெற்றிருப்பதும், இவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கித் தேர்ச்சிபெற வைத்திருப்பதும் அம்பலமாகியுள்ளது. அனைத்து விடைத்தாள்களையும் பார்வையிட்டதில் 2,500-க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண் ஒற்றை இலக்கத்திலிருந்து 50 மதிப்பெண்ணாக மாறியிருப்பது தெரியவந்திருக்கிறது.  தற்போது, இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் விசாரித்துவருகிறது. 

இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககத்தில் பணியாற்றுபவர்களிடம் விசாரித்தபோது, ``விடைத்தாள் திருத்துவதில் குளறுபடிகள் அண்மைக்காலமாக இருந்துவருகிறது. இதற்குக் காரணம், தனியார் சுயநிதிக் கல்லூரியில் பணியாற்றுபவர்களைத் தேர்வுத்தாளைத் திருத்த அனுமதித்ததுதான். இவர்கள் விடைத்தாளைத் திருத்திய பிறகு போதிய ஊதியத்தை வழங்குவதிலும் கால தாமதம் இருந்துவந்தது. இதனால், இவர்கள் ஏனோதானோ என்று விடைத்தாளைத் திருத்தியிருக்கலாம். இதுகுறித்து விசாரித்துவருகிறோம்" என்றனர். 

கல்வியாளர் பிரபாகரனிடம் பேசியபோது, ``பொதுவாக 45 மதிப்பெண் பெற்றவர்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 5 மதிப்பெண் வழங்கப்பட்டு தேர்ச்சி பெறவைப்பது வழக்கம். ஆனால், தேர்வு விடைத்தாளை ஒழுங்காகத் திருத்தாமல், 5 மதிப்பெண் பெற்றிருப்பவர்களுக்கு 45 மதிப்பெண் கூடுதலாகப் போட்டிருப்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. அதுவும் 2,500-க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த ஒரு சம்பவத்திலிருந்தே ஆசிரியர் பயிற்சிப் பட்டயக் கல்லூரிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்களின்  தரமும், அங்குப் படிக்கும் மாணவர்களின் தரமும் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நீங்கள் முடிவுசெய்துகொள்ளலாம்.

ஆசிரியர் பட்டயப் பயிற்சி மையங்களில் உள்ள ஆசிரியர்கள் சரியான முறையில் தமிழ்மொழியில் வாசிக்கவும் எழுதவும் தெரியாதவர்களாகவும், முறையான ஆங்கிலப் பயிற்சி, கணிதம் போன்ற பாடங்களில் போதிய அறிவும் அனுபவமும் இல்லாதவர்களாகவும்தான் இருக்கின்றனர். பயிற்சிப் பட்டயப் படிப்பு முடித்தவர்கள், பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்பெடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. தேர்ச்சி பெறவே தட்டுத்தடுமாறுபவர்கள் குழந்தைகளுக்கு எப்படி உலகத்தரம் வாய்ந்த கல்வி வழங்க முடியும்?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-A பிரிவில், `6 முதல் 14 வயதுள்ளவர்கள் அடிப்படைக் கல்வி வழங்க வேண்டும்' என்கிறது. அதாவது, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தடையில்லாக் கல்வி வழங்க வேண்டும். ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் சரியான அடிப்படைக் கல்வி கிடைப்பதில்லை. பெற்றோர்கள், தனியார் பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதாகப் படையெடுக்கிறார்கள். ஆனால், இரண்டு சதவிகிதத் தனியார் பள்ளிகளில் மட்டுமே ஆசிரியர்களுக்குத் தேர்வு வைத்து தரமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மற்ற பள்ளிகளில் சம்பளம் எவ்வளவு குறைவாகக் கொடுக்க முடியும் என்பதிலேயே குறியாக இருந்து, தகுதியில்லாதவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கின்றனர்.

தனியார் பள்ளிகளில் தகுந்த தகுதிகளோடு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்களா என்பதை பள்ளிக்கல்வித் துறையும் கண்காணிப்பதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள், குழந்தைகளின் உளவியல் தெரியாமலேயே பாடம் நடத்துகின்றனர். இதனாலேயே குழந்தைகளின் கற்கும் ஆர்வம் குறைந்து, வெறுப்புடனே கல்வியை அணுகும் போக்கு காணப்படுகிறது. சரியான கல்வி கிடைக்காததால் அவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகிறது. இனியாவது, ஆசிரியர் பயிற்சிப் பட்டயத் தேர்விலும், இதர தேர்விலும் உள்ள முரண்களைக் கட்டுப்படுத்தி ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்திட வேண்டும்” என்றார்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு, அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு, தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியானது, தேர்வில் பழைய வினாத்தாளை மீண்டும் வழங்குவது, ஆசிரியர் பயிற்சிப் பட்டயத் தேர்வு விடைத்தாள் திருத்தியதில் 5 மதிப்பெண்ணுக்கு 50 மதிப்பெண் வழங்கியது எனக்  கல்வித் துறையில் முறைகேடுகள் வரிசைகட்டுகின்றன. இவற்றைத் தடுக்க, அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்வு முறைகேடுகளில் தமிழ்நாடு, பீகாரைப் பின்னுக்குத் தள்ளிவிடுவதுபோல் இருக்கிறது.