Published:Updated:

ஸ்டெர்லைட் 2.0: தமிழக அரசு... வில்லனா, ஹீரோவா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்டெர்லைட் 2.0: தமிழக அரசு... வில்லனா, ஹீரோவா?
ஸ்டெர்லைட் 2.0: தமிழக அரசு... வில்லனா, ஹீரோவா?

ஸ்டெர்லைட் 2.0: தமிழக அரசு... வில்லனா, ஹீரோவா?

பிரீமியம் ஸ்டோரி

தூத்துக்குடி மக்களின் கறுப்பு நாள் 2018, மே-22. அன்று, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிப் போராடிய மக்கள்மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ‘ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நியாயமற்றது’ என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, அறிக்கை அளித்திருக்கிறது.

ஸ்டெர்லைட் 2.0: தமிழக அரசு... வில்லனா, ஹீரோவா?

அந்த அறிக்கையைப் பெற்றுக் கொண்ட தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், அறிக்கையின் நகலை, ‘தமிழக அரசு, வேதாந்தா குழுமம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியோருக்கு மட்டும் கொடுத்தால் போதும்; பொது நலன்சார் தலையீட்டாளர்களுக்கு அனுப்ப அவசியம் இல்லை’ எனக் குறிப்பிட்டிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, “இப்படி ஓர் அறிக்கை வருவதற்குக் காரணமே தமிழக அரசின் அலட்சியம்தான். முன்னரே சிறப்புச் சட்டம் இயற்றியிருந்தால் இப்படி ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்காது” என்று கொந்தளிக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்!

இதுகுறித்துப் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன், ‘‘ஸ்டெர்லைட் ஆலை மூடப் பட்டதும் சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்கவில்லை. அதுவே, வேதாந்தா நிறுவனம் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர முதல் வாய்ப்பாக அமைந்தது. ‘ஆய்வுக்குழு அமைக்கப் படும்’ என்று தீர்ப்பாயம் கூறியபோது, ‘அந்த ஆய்வுக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் இடம்பெறக் கூடாது’ என்ற வேதாந்தாவின் கோரிக்கையை ஏற்றுதான், தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப் பட்டது. இதுவே இப்படி ஓர் அறிக்கை வர முக்கியக் காரணமாகிவிட்டது” என்றார் வேதனையுடன்.

ஸ்டெர்லைட் 2.0: தமிழக அரசு... வில்லனா, ஹீரோவா?

சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன், ‘‘ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை, தமிழக அரசு ஆய்வுசெய்து அறிக்கையாகத் தாக்கல் செய்திருக்க வேண்டும். தூத்துக்குடி நகரில் மக்கள் குடியிருப்பு உள்ள பகுதியிலிருந்து 50 கி.மீ சுற்றளவில் காப்பர் தொழிற்சாலை அமைக்க அனுமதி கிடையாது எனக் கொள்கை முடிவெடுத்து அரசாணையைப் பிறப்பித்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யத் தவறியது தமிழக அரசு. எனவே, இப்போதைய பின்னடைவுக்கும் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்றார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைதாகி சிறை சென்ற ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு, ‘‘தனக்கு உரிமையே இல்லாத பரிந்துரையை தருண் அகர்வால் குழு செய்திருக்கிறது. காற்று, நீர், நிலம், இயற்கை வளம், கடல் வளம் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழு, தேவையற்ற விவகாரங்களில் தலையிட்டு, வரம்புமீறிய அறிக்கையைக் கொடுத்திருக்கிறது. இந்த ஆலையை மூடுவதற்கான ஆணை வெளியிடப்பட்டபோதே முன்னாள் நீதிபதிகள் சந்துரு, அரிபரந்தாமன் போன்றோர் இந்த ஆணையால் எந்தப் பலனும் இல்லை; சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், அரசு கேட்க வில்லை. சொல்லப்போனால், இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மக்களைக் காப்பாற்றியிருக்க வேண்டிய தமிழக அரசே அந்த மக்களுக்கு வில்லனாகச் செயல்பட்டிருக்கிறது. இப்போ தாவது தமிழக அரசு, தன்னைத்  திருத்திக்கொண்டு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். ஆலையைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் கொல்லைப்புறமாக முயற்சி செய்யுமானால், கடுமையான விளைவு களைச் சந்திக்க நேரிடும்’’ என்றார் காட்டமாக.

ஸ்டெர்லைட் 2.0: தமிழக அரசு... வில்லனா, ஹீரோவா?

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், “ஆலையை மூடக்கோரிய அரசின் உத்தரவை மீறி, இந்த வழக்கை விசாரணை செய்ய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அதிகாரமே கிடையாது. உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தான் விசாரணைசெய்ய முடியும்’’ என்றார்.

- பி.ஆண்டனிராஜ், இ.கார்த்திகேயன்
அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி
படங்கள்: எல்.ராஜேந்திரன்

டிசம்பர் 7-ல் இறுதி முடிவு

மிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி-யுடன் ஒப்பந்தம் கையெழுத்திட இரண்டு மாதங்களுக்கு முன் லண்டனிலிருந்து டெல்லி வந்திருந்தார் வேதாந்தா உரிமையாளர் அனில் அகர்வால். அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்தவர், ‘நீதிமன்ற உத்தரவு எங்களுக்குச் சாதகமாக வரும். விரைவில் ஆலையைத் திறப்போம்’ என்றார். அவர் சொன்னதுபோலவே நீதிபதி தருண் அகர்வால் குழு ஆலையைத் திறக்க பரிந்துரைத்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் ஆலையை மீண்டும் திறக்க சில கட்டுப்பாடுகளுடன், 25 பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன. ‘காப்பர் திடக்கழிவு மாசைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர், தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும். உப்பாற்றில் கொட்டப்பட்ட காப்பர் கழிவுகளை அகற்ற வேண்டும். அந்தப் பகுதியில் நோய்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஆலையைச் சுற்றி 25 கி.ம தூரத்துக்கு மரம் நட வேண்டும்’ என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட உடனேயே, இறுதி உத்தரவைப் பிறப்பிக்க பசுமை தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு தயாரானது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “ஆலையில் மாசு இல்லை என்று எந்த அடிப்படையில் ஸ்டெர்லைட் வழக்கறிஞர் வாதாடுகிறார்? அவருக்கு அறிக்கை முன் கூட்டியே கிடைத்ததா? அரசின் வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவும் போடக்கூடாது” என்று கடுமை காட்டினார். அதையும் பசுமைத் தீர்ப்பாயம் ஏற்க முடியாது என்று சொன்னபோது, “அப்படியானால் எனது வாதங்கள் அனைத்தையும் உத்தரவில் குறிப்பிட வேண்டும். நான் உச்ச நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்...” என்று கோபத்தைக் காட்டினார். அதன் பின்னரே, தருண் அகர்வால் அறிக்கையின் நகல் இரு தரப்புக்கும் வழங்க உத்தரவிடப்பட்டது. அறிக்கையின் மீது வரும் டிசம்பர் 7-ம் தேதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அன்று தமிழக அரசு முன்வைக்கும் வாதங்களைப் பொறுத்தே தூத்துக்குடி மக்களின் தூய்மையான எதிர்காலம் முடிவு செய்யப்படும்.

- டெல்லி பாலா

ஸ்டெர்லைட் தண்ணீர் எடுக்கத் தடை!

ஸ்
ரீவைகுண்டம் அணையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் தினமும் 9,20,00,000 லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. ‘விவசாயம் பாதிக்கப்படுவதால், ஆலைகளுக்குத் தண்ணீர் வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று பசுமைத் தீர்ப்பாயத்தில் தி.மு.க மாநில இளைஞர் அணி துணைச்செயலாளரான ஜோயல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. நவம்பர் 29-ம் தேதி நடந்த வழக்கின் இறுதி விசாரணையில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘ஸ்ரீவைகுண்டம் அணை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. அதனால், தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் எடுக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதிபெற வேண்டும். அந்த விதிமுறைகள் பின்பற்றப்படாததால், தாமிரபரணியில் இருந்து ஸ்டெர்லைட் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் எடுக்கத் தடை விதிக்கப்படுகிறது’ என்று தீர்ப்பளித்தனர்.

விரிவாகப் படித்து நடவடிக்கையை மேற்கொள்வோம்!

ந்த விவகாரம் குறித்து ஸ்டெர்லைட் காப்பர் தலைமை செயல் அதிகாரி பி.ராம்நாத், “நாங்கள் சுற்றுச்சூழல் வரைமுறைக்கு உட்பட்டு செயல்பட்டுவருகிறோம். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுகிறோம். தேசியப் பசுமைத் தீர்ப்பாயக் குழு சுதந்திரமாக விசாரணை நடத்தி இரு தரப்பினரின் வாதங்களைக்  கேட்ட பின்பே தனது அறிக்கையைத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திடம் வழங்கியது. அந்தக் குழு வழங்கிய அறிக்கையில் இருந்து முக்கியமான பகுதி ஒன்று நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. அதில், ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இயற்கை நீதிக் கொள்கைகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. மேலும் சில பரிந்துரைகளை எங்களுக்கும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கும் முன்வைத்துள்ளது. அந்த அறிக்கையை இன்னும் நாங்கள் பெறவில்லை. பெற்ற பிறகு விரிவாகப் படித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம். அந்த அறிக்கைக்கு பதில் அளிக்க இரு தரப்பினருக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த விசாரணை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிறுவனம் என்ற முறையில் நாங்கள், எங்களின் ஊழியர்கள், எங்கள் ஆலையைச் சுற்றி உள்ள கிராமங்கள் மற்றும் தூத்துக்குடியில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு