Published:Updated:

`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்

`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்
`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்

யோலா கல்லூரியின் 6-ம் ஆண்டு வீதி விருது விழாவில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள்,  பெண்களையும் பாரத மாதாவையும் இழிவுப்படுத்தும் விதமாக இருப்பதாகச் சொல்லி, தமிழ்நாடு சுதேசிப் பெண்கள் பாதுகாப்புச் சங்கத்தின் கலைச்செல்வி, காவல்துறையில் புகார் மனு அளித்திருந்தார். கதுவாவிலும், கேரளாவிலும் நடந்த உண்மைகளைத்தானே அவர்கள் ஓவியங்களாக வரைந்திருக்கிறார்கள் என்றோம். 

``கதுவா சிறுமிக்கு கோயிலில் இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையையும் கேரள கன்னியாஸ்திரீக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், ஏன் இந்தியா முழுக்க குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நடைபெறுகிற பாலியல் கொடுமைகளையும் தான் அந்த ஓவியங்கள் சுட்டிக் காட்டுகின்றன என்கிற தெளிவு எங்கள் அமைப்புக்கும் இருக்கிறது. ஆனால், ஏற்கெனவே சதைப் பிண்டமாக சமுதாயத்தால் பார்க்கப்பட்டு வருகிற பெண்களின் உடலை ஓவியம் என்ற பெயரில் அவர்களும் நிர்வாணமாகத்தானே காட்டியிருக்கிறார்கள். சரி, இவர்கள் இப்படி வரைவதால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இனிமேல் நடக்காமல் இருந்துவிடப் போகிறதா? 

விந்தணுக்கள் பாய்கிற ஓவியத்தில் பாரத மாதாவுக்குப் பதில் இந்தியாவின் மேப்பை வரைந்திருக்கலாமே... ஒரு பெண்ணாக அதைப் பார்க்கும்போது மனம் பதறுகிறது. 

சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் முழுதாக முடிந்த பின்னும் தன் நாட்டுப் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற முடியாத அரசாங்கங்களை ஏன் குறியீடாகக் காட்டுகிறீர்கள். பிஜேபி கட்சியை குற்றம்சாட்ட வேண்டுமென்றால், அதை நேரடியாக சுட்டிக் காட்டுங்களேன். அதைவிடுத்து, திரிசூலம், அதில் ஆணுறை, ரத்தம் என்று உங்கள் கற்பனைத் திறனும் எங்களைப் பயமுறுத்துகிறது. இந்த ஓவியங்கள், இவற்றை வரைந்த உங்கள் மனதின் வக்கிரங்களையும் சேர்த்தே சொல்கிறது என்பதுதான் என் கருத்து. 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்தவர்களுக்கு வெளிநாடுகளில் இருப்பதுபோல, மரண தண்டனையைக் கொடுக்கும் சட்டங்களைக் கேட்டு ஓவியங்கள் வரைந்திருக்கலாமே. மற்றபடி, லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களால் பெண்களுக்கு ஒரு பலனும் கிடையாது.  ஓவியங்களாகவும் எங்கள் பெண்களை நிர்வாணப்படுத்தியதுதான் மிச்சம்'' என்று ஆவேசமாக முடித்தார் கலைச்செல்வி.