Published:Updated:

`விவாகரத்து ஆண்களை குறிவைத்தார்; 15 பேரை திருமணம் செய்தார்!'- பெண்ணால் ஏமாந்த கணவர் கண்ணீர்

`விவாகரத்து ஆண்களை குறிவைத்தார்; 15 பேரை திருமணம் செய்தார்!'- பெண்ணால் ஏமாந்த கணவர் கண்ணீர்
`விவாகரத்து ஆண்களை குறிவைத்தார்; 15 பேரை திருமணம் செய்தார்!'- பெண்ணால் ஏமாந்த கணவர் கண்ணீர்

விவாகரத்தான ஆண்களை குறிவைத்து திருமணம் செய்து பணம் பறிப்பதாக தனது மனைவி மீது குற்றஞ்சாட்டுகிறார் பாதிக்கப்பட்ட கணவர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவருக்கு விவாகரத்து ஆன நிலையில், சிங்கப்பூரில் வேலை செய்து வந்த உதயக்குமார், தனக்குப் பெண் தேடி திருமண தகவல் இணையதளம் ஒன்றில் தனது தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ``கடந்த 2017-ம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த விவாகரத்தான மகாலட்சுமி என்கிற பெண்ணைப் பார்த்து, முறைப்படி திருமணம் செய்துகொண்டார். மகாலட்சுமிக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். சொந்த ஊர் சென்னை, குடும்பச் சூழல் காரணமாகத் திருச்சிக்கு இடம்பெயர்ந்தவர்கள், கருமண்டபம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து குடியிருந்தார். கருவுற்றிருந்த நிலையில், தனது வயிற்றில் முதல் கணவர் எட்டி உதைத்து குழந்தையை கலைத்துவிட்டார். அதனால் அவரிடம் இருந்து விவாகரத்து வாங்கிவிட்டதாக மகாலட்சுமி கூறினார்'' என தெரிவித்தார்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய உதயக்குமார், ``மகாலட்சுமியின் கதையைக் கேட்ட நான் மனமிறங்கியதுடன், பெற்றோர் முன்னிலையில் எங்கள் குலதெய்வம் கோயிலில் வைத்து முறைப்படி அவரை திருமணம் செய்துகொண்டேன். திருமணத்துக்குப் பிறகு, கொஞ்சநாள் சொந்த ஊரில் வாழ்ந்து வந்தோம். எங்களுடன் அவரின் அம்மாவும் தங்கியிருந்தார். இடையில் அவர்கள்,  உங்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது என விசாரித்தார். சொத்துகள் அனைத்தும் அப்பா பெயரில் உள்ளது. நான் மட்டும்தான் வாரிசு என்பதால், அவருக்குப் பிறகு எல்லாம் நமக்குத்தான் என்றேன். ஆனாலும் தொடர்ந்து நான் சம்பாதித்த பணம் குறித்து விசாரித்தார்கள்.  அனைத்து அப்பாவிடம் உள்ளது என்றேன். அதிலிருந்து அவரின் அம்மா நடவடிக்கை சரியில்லை.

இந்த நிலையில், பணியின் நிமித்தம் காரணமாக சிங்கப்பூர் சென்றேன். தொடர்ந்து அவர்களிடம் பேசியும் வந்தேன். சில வாரங்கள் கழித்து என்னை தொடர்புகொண்ட மனைவி  மகாலட்சுமி, தான் கருவுற்றிருப்பதாகப் போனில் சொன்னார். மிகுந்த மகிழ்ச்சியடைந்த நான், கருவுற்ற மனைவியை விட்டுவிட்டு சிங்கப்பூரில் வாழ்வது சரியல்ல என முடிவெடுத்து, ஊருக்குத் திரும்பி வந்தேன். ஊருக்கு வந்த என்னுடன் சில நாள்கள் தங்கியிருந்த மகாலட்சுமி, ஒருநாள் நான் வெளியில் சென்றிருந்த நேரம் பார்த்து, திடீரென வீட்டில் இருந்த பணம், நகைகள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டைக் காலி செய்துகொண்டு கிளம்பிவிட்டார்.

அவளைத் தேடி அலைந்தேன். கிடைக்கவில்லை. கடைசியாக என் மனைவியைக் கண்டுபிடித்து தரக்கோரி திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். பலனில்லை. போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை என போலீஸார் கூறினர்.  தொடர்ந்து தேடி அலைந்த நான் அவர் கிடைக்காத காரணத்தால், பணிக்காக மீண்டும் சிங்கப்பூர் சென்றேன்.

சில மாதங்கள் கழித்து, என்னை தொடர்புகொண்ட மகாலெட்சுமி, அம்மாவின் பேச்சைக் கேட்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாகவும், குழந்தையை வயிற்றில் வைத்துக்கொண்டு சிரமப்படுவதாக கூறியதுடன், குழந்தையை நல்ல முறையில் பெற்றுக்கொண்டு நேரில் வந்து பார்ப்பதாக கூறினார். அவரின் பேச்சை நம்பி கொஞ்சம் கொஞ்சமாக 85,000 பணம் அனுப்பினேன். இறுதியாகப் பிரசவத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வேண்டும் எனக் கேட்கும்போது சந்தேகமடைந்த நான், அவரின் மின்னஞ்சலை ஆய்வு செய்தேன். அப்போது மகாலெட்சுமி, என்னைப் போல பல ஆண்களுடன் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வாட்ஸ்அப் மற்றும்  உரையாடல்களைப் பார்த்தேன். அவற்றை எல்லாம் பதிவிறக்கம் செய்த நான், மகாலெட்சுமி என்னை திட்டமிட்டு ஏமாற்றியதை உணர்ந்தேன்.


மீண்டும் ஊருக்கு வந்து விசாரித்ததில் திருச்சியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவர் கருவை கலைத்திருப்பது தெரியவந்தது. அந்த ஆதாரங்களைச் சேகரித்தேன். நான் மகாலட்சுமி குறித்து தகவல் சேகரிப்பதை தெரிந்துகொண்ட அவர், நான் எட்டி உதைத்து கருவை கலைத்து விட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து,  மகாலட்சுமி தனியார் மருத்துவமனையில் கருவை கலைத்துள்ளதற்கான ஆதாரங்களை போலீஸாரிடம் ஒப்படைத்ததால் போலீஸார் விசாரணையை முடித்துக்கொண்டார்கள். இதையடுத்து, விவாகரத்து கோரி திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் சிங்கப்பூர் ஶ்ரீராம், மலேசியா சத்யா, கார்த்திக் என 15-க்கும் மேற்பட்டோருடன், நான் தேடியதுபோலவே இணையதளத்தில் பெண் தேடும் விவாகரத்து ஆன ஆண்களைக் குறிவைத்து, என்னிடம் பேசியதைப் போன்று, ``என் கணவர் என்னைக் கொடுமைப்படுத்தி, வயிற்றில் எட்டி உதைத்ததால் கருக்கலைந்துவிட்டது. அதனால் அவருடன் வாழ விருப்பமில்லாமல் விவாகரத்து செய்துவிட்டேன். இப்போது மீண்டும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக ஒரே டையலாக்கை பேசி அவர்களை உருக வைத்து, அவர்களை வலையில் விழவைத்து திருமணம் செய்துகொண்டு சிலமாதங்கள் அவருடன் வாழ்வதுடன், பிறகு கையில் கிடைக்கும் பணம் மற்றும் நகைகளை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகிவிட்டு, பிறகு அதே வேலையைத் தொடர்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததாகத் தெரியவில்லை. மகாலட்சுமியின் வலையில் முக்கியப்புள்ளி ஒருவர் விழுந்துள்ளார். அவர்தான் போலீஸாரிடம் சொல்லி மிரட்டுவது, ஆதாரங்களை அழிப்பது போன்ற செயல்களைச் செய்கிறார். இப்போது மகாலட்சுமியும் அவரது தாயும் ஆந்திராவில் இருப்பதாகப் தெரிகிறது. இனியும் தாமதிக்கக்கூடாது.  என் குழந்தை என்ன பாவம் பண்ணியது. அதுமட்டுமல்லாமல் கருவை அழித்துவிட்டு நான் உதைத்து கருவைக் கலைத்ததாக நாடகமாடும் அவர்களை வெளியுலகம் தெரிந்துகொள்ள வேண்டும். இனியும் யாரும் ஏமாறக் கூடாது” என்றார் வேதனையுடன்.
குற்றச்சாட்டுகள் குறித்து தெரிந்துகொள்ள மகாலட்சுமியை தொடர்புகொண்டோம். நீண்ட முயற்சிக்குப் பிறகு அவர் சார்பாக பேசியவர்கள். ``உதயக்குமார்  உண்மைக்குப் புறம்பாக பேசிவருகிறார். அவருடன்  ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்த விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தங்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறார். அதைச் சட்டப்படி சந்திப்போம்” என்றார்கள்.