Published:Updated:

`கோயிலுக்கு அழைத்துச்சென்று விபூதி வைத்தார்கள்!' - சர்ச்சையில் சிக்கிய அரியலூர் பா.ஜ.க

`கோயிலுக்கு அழைத்துச்சென்று விபூதி வைத்தார்கள்!' - சர்ச்சையில் சிக்கிய அரியலூர் பா.ஜ.க
`கோயிலுக்கு அழைத்துச்சென்று விபூதி வைத்தார்கள்!' - சர்ச்சையில் சிக்கிய அரியலூர் பா.ஜ.க

கிறிஸ்தவ மதப் போதகர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று, விபூதி வைத்தது தொடர்பாக பா.ஜ.க நிர்வாகிகள் மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

அரியலூர் மாவட்டம் காணிக்கைபுரத்தில் உள்ள போதகர் அரோன்குமார், அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரிடம் பேசினோம். ”அரியலூர் நகரில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே, மத பிரசாரம் தொடர்பாகத் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய போதகர் அரோன்குமார், அந்தோணிசாமி ஆகியோரை அங்கிருந்து மர்ம நபர்கள் சிலர் ,மேலத்தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு இழுத்துக் கொண்டுபோய், அவர்கள் விருப்பம் இல்லாமலே அவர்கள் நெற்றியில் குங்குமம் மற்றும் விபூதி பூசச் செய்து, அங்கிருந்த பூசாரியை அழைத்து மணி அடித்து, இந்து மதத்தின் மந்திரத்தைச் சொல்லச் சொல்லியும், வணங்கச் சொல்லியும் அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்தச் சம்பவத்தை போன் மூலம் பதிவுசெய்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பினர். இந்த நிகழ்வு எங்கள் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. எனவே, இக்குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இந்நிலையில், இரு மதங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பா.ஜ.க ஒன்றியச் செயலாளர் முத்துவேல், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகச் செயலாளர் வைரவேல், மாவட்டப் பொறுப்பாளர் பொன் சேகர் ஆகிய 3 பேரை போலீஸார் கைதுசெய்தனர். இதையடுத்து, 3 பேரும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, 3 பேரையும் வரும் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, "இதுபோன்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஷீனிவாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பி.ஜே.பி மாவட்ட தலைவர் நடராஜனிடம் பேசினோம். ``அவர்களை அழைத்துவந்து விபூதி, குங்குமம் பூசியது தவறுதான். சிவன் மற்றும் அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதைக் கேட்கச் சென்றபோது, அவர்கள் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார்கள். அந்தக் கடுப்பில்தான், எங்கள் கட்சிக்காரர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள். இவர்களை நான்கு ஐந்து முறை கண்டித்தும் அனுப்பியிருக்கிறோம். ஆனால், கேட்காமல் தொடர்ந்து மதம் மாற்றம் செய்யும் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள். நாங்கள், கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் சென்று தேவாரம், திருவாசகத்தைப் பாடினால், இவர்கள் சும்மா இருப்பார்களா? இவர்கள் மதம் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், வீடு வீடாகச் செல்லட்டும். ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் ஆசைவார்த்தை கூறுவது எந்த விதத்தில் நியாயம்'' என்றார்.