Published:Updated:

”சுடுகாடு இல்லை... எங்கள் நிலத்திலேயே புதைத்துக் கொள்கிறோம்!” - குட்டூர் கிராம அவலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
”சுடுகாடு இல்லை... எங்கள் நிலத்திலேயே புதைத்துக் கொள்கிறோம்!” - குட்டூர் கிராம அவலம்
”சுடுகாடு இல்லை... எங்கள் நிலத்திலேயே புதைத்துக் கொள்கிறோம்!” - குட்டூர் கிராம அவலம்

”சுடுகாடு இல்லை... எங்கள் நிலத்திலேயே புதைத்துக் கொள்கிறோம்!” - குட்டூர் கிராம அவலம்

கிராமங்களை வலுப்படுத்துவதற்காகக் கிராமசபைகளில் அதிக கவனம் செலுத்துவதை அண்மைக்காலமாக அரசியல் கட்சிகள் முக்கியத்துவப்படுத்தி வருகின்றன. கிராம முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டுதான் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்  தொடங்கப்பட்டது. தேர்தல் பிரசார உத்தியாக தற்போது கிராமசபைக் கூட்டங்களை தி.மு.க. நடத்திவருகிறது. இதுநாள்வரை கிராமசபைகள் ஒழுங்காகச் செயல்படாதது குறித்தான புகார்களும் ஆங்காங்கே தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டூர் ஒன்றியத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் அதிகாரிகளால் மக்கள், மிரட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. குட்டூர் ஊராட்சி மக்கள் சிலரைச் சந்தித்தோம். 

நடந்தது என்ன? 

கிருஷ்ணகிரிக்கு உட்பட்ட பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட குட்டூர்  ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டடத்திற்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. அதனால் கிராமசபையைத் தள்ளிவைப்பது பற்றி மக்கள் ஆலோசித்தனர். இதையறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, அங்கு விரைந்து சென்றார். இதையடுத்துத் தாமதமாகத் தொடங்கிய சபையில், ஊராட்சியின் வரவு-செலவுக் கணக்குகளை கிராம மக்கள் கேட்க, இரு தரப்புக்கும் இடையே விவாதம் தொடங்கியது. அதனால் அதிகாரிகள் எந்த ஒரு தீர்மானமும் எடுக்காமல் எழுந்து சென்றுள்ளனர். இதையடுத்து இந்தச் சம்பவம் நாளிதழில் வெளிவந்திருக்கிறது. 

அதுபற்றிச் செய்தி வெளியானதை அறிந்த அலுவலர், பகுதி மக்களிடம் `நாளிதழில் வந்த செய்தி பொய்' என எழுதித் தரும்படிக் கேட்டுள்ளார். அதற்கு கிராம மக்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். பின்னர், `` `நாங்கள் சொன்னதைத் தவறாகப் புரிந்துகொண்டு செய்தி  பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றாவது எழுதிக் கொடுங்கள்" என்று கேட்டிருக்கிறார். அதற்கும் மக்கள் மறுப்புத் தெரிவித்திருக்கின்றனர். அதோடு நிறுத்திக் கொள்ளாமல், `மீண்டும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படவேண்டும், கிராமத்தின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்' எனத் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்குக் கடிதமும் எழுதியிருக்கின்றனர். அதன் பிறகு, அதிகாரிகள் அவர்களை `ஒழித்துக்கட்டிவிடுவேன்‘ என்று மிரட்டியதாக குட்டூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படியென்ன தேவைகள் இந்த கிராமத்திற்கு இருக்கிறது?

மக்கள் கூறுகையில், ``எங்கள் கிராமத்துக்கு அடிப்படைவசதியான குடிநீர் கூட கிடையாது” என்கிறனர். மேலும், ``எங்கள் கிராமத்துக்கு அருகிலேயே அணை ஒன்று இருக்கிறது. அணையிலிருந்து வருகிற நீரையாவது பயன்படுத்தலாம் என்றால், தடுப்பணை உடைந்து கிடக்கிறது. எங்க ஊருக்கென்று ஒரு மயானமோ, சுடுகாடோ கிடையாது. சடலங்களை எங்களுடைய நிலங்களிலேயே புதைத்துக் கொள்கிறோம். ஊராட்சி அலுவலகம் கிடையாது. ஏதாவது தேவையென்றால்கூட அதிகாரிகளை அணுக முடிவதில்லை. ஆரம்ப சுகாதார நிலையமோ வேறு எந்த ஒரு மருத்துவ வசதியோ கிடையாது. எவ்வளவு அவசரமென்றாலும் 20 கிலோமீட்டர் கடந்துதான் மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். எங்களின் நிலைமை பற்றி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடிவு செய்தோம். இதை  அறிந்த அ.தி.மு.க. ஊராட்சி ஒன்றியச் செயலாளர், மனு கொடுத்தால் `10 வருடமானாலும் எங்கள் ஊருக்கு எதுவும் செய்ய மாட்டேன்' என்று மிரட்டினார். சாதிப் பிரச்னையைத் தூண்டும் விதமாகவும் அவர் பேசினார். அதைப் பொருட்படுத்தாமல் ஆட்சியரிடம் மனுவைக் கொடுத்தோம். அ.தி.மு.க. பிரமுகர் எங்களை மிரட்டிய உரையாடலையும் போட்டுக் காண்பித்தோம். அதையடுத்து காவல்துறையிடம் புகார் அளிக்க எங்களை அனுப்பினார். ஆனால் போலீஸாரும் அதிகாரிகளுக்குச்

சாதகமாகவே பேசியதுடன்,  நாங்கள்தான் செயல்பட விடாமல் அதிகாரிகளைத் தடுப்பதாகப் பொய்க் குற்றச்சாட்டை கூறினர். பிறகு உண்மையை எடுத்துச் சொன்னதும்

சமாதானம் பேசி அனுப்பி வைத்தார்கள். போலீஸாரும் எங்கள் குரலைக் கேட்காமல் அவர்களுக்குச் சாதகமாகத்தான் நடந்து கொள்கிறார்கள்" என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள் வேதனையுடன். 

மக்கள் குற்றம் சாட்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதாவைத் தொடர்புகொண்டு பேசினோம். ``கிராம மக்கள் மனு கொடுத்துள்ளார்கள். அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும்" என்று மட்டும் சொல்லிவிட்டு மேலதிகமாக எதுவும் பேசாமல் இணைப்பைத் துண்டித்துக் கொண்டார். 

மாவட்ட ஆட்சியர் பிரபாகரனிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர், ``இந்தப் பிரச்னையைத் தீர்க்க தனியாகக் குழு ஒன்றை அமைத்துள்ளோம். குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஊராட்சி அதிகாரிகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளை, நிதி வசதியின் அடிப்படையில் விரைவில் செய்து முடிக்க ஆணை பிறப்பிக்கப்படும்" என்றார். 

இனிமேல் செய்வது இருக்கட்டும்.  ஆனால், சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு இதுநாள்வரை ஏன் அடிப்படை வசதிகளைச் செய்து தரவில்லை என்பதற்கான எவ்விதப் பதிலும் அதிகாரிகள் தரப்பிலிருந்து கிடைக்கவில்லை. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு