Published:Updated:

``தந்தை உயிருடன் எழுவார்''- சடலத்துக்கு வீட்டில் ஒரு மாதமாகச் சிகிச்சை அளித்த ஐ.பி.எஸ் அதிகாரி

``தந்தை உயிருடன் எழுவார்''- சடலத்துக்கு வீட்டில் ஒரு மாதமாகச் சிகிச்சை அளித்த ஐ.பி.எஸ் அதிகாரி
``தந்தை உயிருடன் எழுவார்''- சடலத்துக்கு வீட்டில் ஒரு மாதமாகச் சிகிச்சை அளித்த ஐ.பி.எஸ் அதிகாரி

கோவையில் போட்டோகிராபராக பணியாற்றியபோது அதி பயங்கரமான அனுபவம் ஒரு முறை  கிடைத்தது. ``கிறிஸ்தவ குடும்பத்தில் வயதான பெண் ஒருவர் இறந்து விட்டார். குடும்பத்தினர், இந்தத் தகவலை வெளியே சொல்லவில்லை. மாறாகச் சிறிய அறைக்குள் இறந்து போனவரின் சடலத்தை வைத்தனர். தினமும் சடலத்தின் அருகே மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தி வந்துள்ளனர்.  சடலத்தின் மீது  வாசனைத் திரவியங்களையும் தொடர்ந்து அடித்து வந்துள்ளனர். 

30 நாள்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தால்  இறந்தவர் உயிருடன் வந்து விடுவார் என்பது அவர்களின் நம்பிக்கை. ஒரு கட்டத்தில் சுற்று வட்டாரத்தில் வீச்சம் பரவத் தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் ஆராய்ந்ததில்  இந்த வீட்டில் இருந்துதான் கெட்ட வாடை வந்ததைக் கண்டு  போலீஸுக்குத் தகவல் அளித்தனர். போலீஸ் கதவை திறக்கத் தட்டினால்  வீட்டினுள் இருந்தவர்கள் கதவை திறக்க மறுத்தனர். 'போலீஸுக்கு நல்லபுத்தியைக் கொடுக்கவும்' என்று உள்ளேயிருந்து பிரார்த்திக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் போலீஸ் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.  வீட்டினுள்  அப்படி ஒரு கெட்ட  வாடை. உள்ளே போனவர்கள்  எல்லோருமே மயக்க நிலைக்குச் செல்லும் நிலைமை. 

வீட்டினுள் ஒரு சிறிய அறையில் அழுகிய நிலையில் அந்தச் சடலம் கிடந்தது. அனைவருமே அதிர்ந்து போய் விட்டோம்.  இதற்கு முன், பல முறை பிணவறைக்குள் படம் எடுக்க உள்ளே சென்றிருக்கிறேன்.  20 சடலங்கள் மொத்தமாக சிதறிக்  கிடந்திருக்கின்றன. நானும் உள்ளே இருந்திருக்கிறேன். சடலங்கள் மீது தவறியெல்லாம் விழுந்திருக்கிறேன். அப்போதெல்லாம் வராத பயம் இந்தச் சடலத்தை பார்த்ததும்  வந்தது. சதைகள் அழுகி தொங்கிக் கொண்டிருந்தன. என்னால் இரு நாள்களுக்குச் சாப்பிடவே முடியவில்லை. அந்த அறையில் வீசிய வாடையை என்னால் மறக்கவும் முடியவில்லை. ஆனால்,  வீட்டில் இருந்தவர்கள் உள்ளேயே தினமும் சமைத்துச் சாப்பிட்டு வந்துள்ளனர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.'' 

இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதைப் போலவே ஒரு சம்பவம் போபாலில் நடந்துள்ளது. இந்த முறை ஐ.பி.எஸ் அதிகாரியே மூடநம்பிக்கையில் தந்தையின் உடலைப் பாதுகாத்து வந்ததைக் கண்டு போபால் நகரம் அதிர்ந்து போய் கிடக்கிறது. மத்தியப் பிரதேச மாநில கூடுதல் டி.ஜி.பியாக இருப்பவர் ராஜேந்திரக் குமார். இவரின் தந்தை 84 வயது கல்முனி மிஷ்ராவுக்கு கடந்த ஜனவரி 14-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பன்சாரா மருத்துவமனைக்குத் தந்தையை ராஜேந்திரக்குமார் கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் கல்முனி மிஷ்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதோடு, இறப்பு சான்றிதழையும் கொடுத்துள்ளனர். ஆனால், ராஜேந்திரக் குமாரால் தந்தை இறந்ததை நம்பவே முடியவில்லை.

தந்தையின் உடலை வீட்டுக்குக் கொண்டு வந்தார். போபாலில் டி-7 பகுதியில் அரசு அதிகாரிகள் வசிக்கும் பகுதியில்தான் ராஜேந்திரக்குமாருக்கும் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. தந்தையின் உடலைப் புதைக்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக தினமும் தந்தையின் சடலத்துக்கு ஆயுர்வேத மருந்துகளை தடவி வந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இந்தக் கூத்து நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று ராஜேந்திரக்குமார் பங்களாவில் வேலை பார்க்கும் ஆடர்லி, அழுகிப்போன  உடலுக்கு ஐ.பி.எஸ் அதிகாரி மருந்து தடவிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். உயர் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார். தொடர்ந்து, மீடியாக்களும் ராஜேந்திரக்குமார் பங்களாவில் குவிந்தனர். ஆனால், யாரையும் அவர் பங்களாவுக்குள் அனுமதிக்கவில்லை. 

இந்த நிலையில், ஐ.பி.எஸ் அதிகாரி ராஜேந்திரக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்., அதில், ``என் தந்தை உயிருடன் உள்ளார். இது எனது  தனிப்பட்ட பிரச்னை. இதில் யாரும் தலையிட வேண்டாம். மீடியாக்கள் மக்கள் நலனுக்கான பணிகளை மேற்கொள்ளுங்கள். என் தந்தைக்கு அந்த மருத்துவமனை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியவில்லை. தற்போது, இந்திய பாரம்பர்ய சிகிச்சை அளித்து என் தந்தையின் உடல் நலத்தை மீட்க முயலுகிறேன். தயவுசெய்து என்னைத் தொந்தரவு செய்யாமல், என் தந்தை நலம் பெற உதவுங்கள்'' என்று கூறியுள்ளார். மத்தியப்பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பாலா பச்சன், இந்த விவகாரம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

மெத்தப் படித்த ஐ.பி.எஸ் அதிகாரியே மூடநம்பிக்கையில் மூழ்கி கிடப்பதைக் கண்டு மத்தியப் பிரதேச மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.