Published:Updated:

வகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன்! - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்

வகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன்! - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்
வகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன்! - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்

ஒருதலைக்காதலால் வகுப்பறையிலேயே மாணவன் ஒருவன் சக மாணவிக்குத் தாலி கட்டிய சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டில் இயங்கி வரும் அரசுப் பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவன் சக மாணவிக்குத் தாலி கட்டியதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது. அதுகுறித்து நாம் விசாரித்ததில், இந்தப் பள்ளியில் 650 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அங்கு 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன் கிஷோர் (பெயர் மாற்றம்), சக மாணவியான நிவேதாவை (பெயர் மாற்றம்) ஒருதலையாகக் காதலித்து வந்திருக்கிறான். பள்ளி விட்டு வீட்டுக்குப் போகும்போதும், வகுப்பறையிலும் அவ்வப்போது நிவேதாவுக்குத் தொல்லை கொடுத்த கிஷோர், தான் உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகவும் தன் காதலை ஏற்றுக்கொண்டால் உடனே திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறி வந்திருக்கிறான்.

ஆனால், அதை மறுத்து வந்த சிறுமி நிவேதா பள்ளியிலேயே தனிமையில் அழத் தொடங்கியிருக்கிறாள். பெற்றோர்களிடம் கூறினால் பள்ளியை விட்டு நிறுத்திவிடுவார்கள் என்ற பயத்தால் சொல்லாமல் இருந்திருக்கிறாள். இந்நிலையில்தான் நேற்று முன்தினம் நிவேதாவை சந்தித்த கிஷோர் மீண்டும் தன் காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதோடு, இன்றேகூட திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறான்.

ஆனால், வழக்கம்போல அதை மறுத்ததுடன் கிஷோரைக் கண்டித்த நிவேதா வகுப்பறைக்குள் சென்று அழத் தொடங்கியிருக்கிறாள். அப்போது, பள்ளியைவிட்டு வெளியேறிய கிஷோர் சிறிது நேரத்தில் திரும்ப வந்து, வகுப்பறையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த நிவேதாவின் கழுத்தில் பின்புறம் இருந்து தாலி கட்டியிருக்கிறான். இதனால் அதிர்ச்சியடைந்த நிவேதா அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்று பெற்றோர்களிடம் நடந்தவற்றைத் தெரிவித்திருக்கிறாள். அதன் பிறகு அந்தத் தாலியைக் கழற்றி வீசிய பெற்றோர்கள் தங்கள் உறவினர்களுடன் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் இதுகுறித்து முறையிட்டிருக்கின்றனர். அப்போது இரு தரப்பினரையும் அழைத்து ஆசிரியர்கள் சமாதானம் செய்ததோடு, பொதுத்தேர்வு நெருங்குவதால் சம்பந்தப்பட்ட மாணவனை எச்சரித்து அனுப்பியது தெரிய வந்திருக்கிறது. மேலும், அந்த மாணவனை பள்ளிக்கு வராமல் நேரடியாகத் தேர்வு மையத்துக்கு வரும்படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து விளக்கம் கேட்க அந்தப் பள்ளி தலைமையாசிரியரைத் தொடர்பு கொண்டோம், “எங்களுக்கு அப்படி ஒரு தகவல் வந்தது. ஆனால், நாங்கள் விசாரித்தவரையில் எங்கள் பள்ளிக்குள் அப்படி எதுவும் நடக்கவில்லை. வெளியே நடந்ததா என்பது குறித்து என்னால் எதுவும் கருத்துக் கூற முடியாது. சம்பந்தப்பட்ட அந்த மாணவியும் இல்லை என்று மறுத்தார். அவர்கள் இருவருமே பொதுத்தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். அது பாதித்துவிடக் கூடாது என்று இருவரையும் எச்சரித்து அனுப்பினேன்” என்றார்.