Published:Updated:

``3 ஆயிரம் ரூபாய் ஜெராக்ஸ் மிஷின் போதும் சார்!” - காவல் துறையிடம் சிக்கிய கள்ளநோட்டு கும்பல்

``3 ஆயிரம் ரூபாய் ஜெராக்ஸ் மிஷின் போதும் சார்!” - காவல் துறையிடம் சிக்கிய கள்ளநோட்டு கும்பல்
``3 ஆயிரம் ரூபாய் ஜெராக்ஸ் மிஷின் போதும் சார்!” - காவல் துறையிடம் சிக்கிய கள்ளநோட்டு கும்பல்

திருச்சியில், அவ்வப்போது கள்ளநோட்டு கும்பல் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. அச்சடிக்கும் கள்ளநோட்டுகளைக் கடைகளில் கொடுத்து  மாற்றுவதற்கு பெண்கள், சிறுவர்கள் அடங்கிய கும்பல் திருச்சியில் சுற்றுவதாக அடிக்கடி தகவல் பரவிவருகிறது. 

அதையடுத்து, திருச்சி மாநகரில் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட முயற்சிக்கும் குற்றவாளிகளைப் பிடிக்க திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் தனிப்படை அமைத்து கண்காணிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று திருச்சி கே.கே.நகரை அடுத்த தென்றல் நகர் பகுதியில், தனிப்படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் வாகனத் தணிக்கை செய்தபோது, அவ்வழியே பைக்கில் வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், அவர்கள்  திருச்சி  எல்.ஐ.சி காலனி பகுதியைச் சேர்ந்த சுப்பன் மகன் பாட்ஷா, திருச்சி காஜாமலை, காளியம்மன் கோயில்தெருவில் வசிக்கும் வெங்கடாசலம் மகன் கனகராஜ் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தேவா தியேட்டர் பகுதியைச் சேர்ந்த சூர்யமூர்த்தி மகன் ராஜா சபரேஸ் எனத் தெரியவந்தது.

அவர்களின் பதில்களில் சந்தேகமடைந்த போலீஸார், அவர்கள் வைத்திருந்த துணிப்பையை சோதனைசெய்தபோது, பையில் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்தது.  அந்த ரூபாய் நோட்டுகளைச் சோதனை செய்ததில், அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. அந்த கள்ளநோட்டுகளை  ஏஜெண்டுகளிடம் கொடுத்து கடைகளில், பொதுமக்களிடம்  புழக்கத்தில்விட இருந்தது தெரியவந்தது.

``சீக்கிரம் பணக்காரர்கள் ஆகவேண்டும், பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் தீவிரமாக முயற்சிசெய்து கள்ள நோட்டு அடிக்கும் முடிவுக்குவந்தோம். கலர் ஜெராக்ஸ் இயந்திரம் வாங்கி, பாட்ஷா வீட்டில் வைத்து அங்கிருந்து சந்தேகம் வராதபடி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, அவற்றைப் பொதுமக்களிடம் புழக்கத்தில் விட்டுவந்தோம். இந்நிலையில், போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் சிக்கிக்கொண்டோம்” என போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதையடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று பேர் மீதும் திருச்சி கே.கே. நகர் காவல் நிலையத்தில்  ரூபாய் நோட்டுகள் அச்சடித்தல், கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூபாய் 11 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள 586  இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், இரண்டு லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள 478 ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 14 லட்சத்து 11ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளும் மூன்றாயிரம் மதிப்புள்ள கலர் ஜெராக்ஸ் இயந்திரம், கட்டிங் மெஷின்  மற்றும் பைக் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றிய போலீஸார், மூவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் நடக்கும் வாரச் சந்தையில், திருச்சி டோல்கேட் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா என்பவர், 2 ஆயிரம் கள்ள நோட்டுகளைக் கொடுத்து காய்கறி வாங்கும்போது கையும் களவுமாகச் சிக்கினார்.

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் கடைகளில் பழங்கள், பொருள்கள்  வாங்கிக்கொண்டு 500 ரூபாய் கொடுத்து சில்லறை பெற்ற  திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த அப்துல்சுக்குர், அவரது மனைவி ஹசீனா பானு உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களால் ரூபாய் நோட்டுகளின் மீதான பதற்றம் திருச்சியில் கூடிக்கொண்டேபோகிறது.