Published:Updated:

`மோசடிக் கும்பல்... அப்பாவி பெண்கள்... ஆளுங்கட்சி புள்ளி..!’ - பொள்ளாச்சி போல பெரம்பலூரிலும் பகீர்

`மோசடிக் கும்பல்... அப்பாவி பெண்கள்... ஆளுங்கட்சி புள்ளி..!’  - பொள்ளாச்சி போல பெரம்பலூரிலும் பகீர்
`மோசடிக் கும்பல்... அப்பாவி பெண்கள்... ஆளுங்கட்சி புள்ளி..!’ - பொள்ளாச்சி போல பெரம்பலூரிலும் பகீர்

அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி, பல பெண்களை வசியப்படுத்தியுள்ளது ஒரு கும்பல். இச்சம்பவத்தில், `அ.தி.மு.க-வில் உள்ள முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பு இருப்பதால், போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. `இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், ஆதாரங்களை வெளியில் விடுவேன்' என்று போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார், வழக்கறிஞர் ஒருவர்.

இதைப் பற்றி விசாரிக்கும்போது, ``பெரம்பலூரில் உள்ள  லோக்கல் சேனலைச் சேர்ந்த ஒரு நபர், அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய நபர்கள் என்னிடம் தொடர்பில் இருக்கிறார்கள்; அவர்களிடம் சென்றால் அரசு வேலை எளிதாக வாங்கிவிடலாம் என ஆசைவார்த்தை கூறி, இளம் பெண்களை பெரம்பலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், பெண்களுடன் இருப்பதை, தெரியாமல் வீடியோவும் எடுத்துள்ளனர்.

இதை அப்பெண்களிடம் காட்டி, தனது நண்பர்களையும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட வைத்துள்ளனர். மேலும், மறுக்கும் பெண்களிடம் அந்த வீடியோவை இணையதளத்தில் விட்டுவிடுவதாகவும் மிரட்டி பணியவைத்துள்ளது அந்தக் கும்பல். இதில், அ.தி.மு.க முக்கியப் புள்ளிகளும் அடங்குவர் என்பதுதான் ஹாட் டாப்பிக்.

எஸ்.பி யிடம் புகார் கொடுத்த வழக்கறிஞர் அருளிடம் பேசினோம். ``இச்சம்பவம் பொள்ளாச்சி விவகாரத்தையே மிஞ்சும் அளவிற்கு நடந்துள்ளது. சத்துணவு அமைப்பாளர் மற்றும் அங்கன்வாடிகளில் வேலை வாங்கித் தருவதாக விண்ணப்பித்திருந்த திருமணம் ஆன

பெண்களை வளைத்துப் பிடித்து அவர்களை தன் கைக்குள் போட்டுக்கொண்டு அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது ஒரு கும்பல். இதன் பிறகு அ.தி.மு.க-வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபரிடம் அழைத்துச் செல்வதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலையில் திருச்சியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர், பெண்கள் மற்றும் இளம் பெண் எனப் பல பெண்களைப் பெரம்பலூரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்துள்ளார். அவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதுதான் இந்தக் கும்பலின் வேலை.

இதை அப்பெண்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்த அந்தக் கும்பல், அவர்கள் கூப்பிடும்போதெல்லாம் போகவில்லையென்றால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியும் உள்ளது. இந்தக் கும்பலின் தொந்தரவு தாங்க முடியாத பெண் ஒருவர் தனது குடும்ப வாழ்க்கை பாதிப்பு ஏற்படும் என்பதால் போலீஸாரிடம் ஒரு வாரத்திற்கு முன்பே புகார் கொடுத்திருக்கிறார். காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் என்னிடம் வந்தார். இப்போது எஸ்.பி யிடம் புகார் கொடுத்திருக்கிறேன். அவர் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்னும் இரண்டு நாள்களில் மொத்த ஆதாரங்களையும் வெளியிட இருக்கிறேன். இதில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளும் சிக்குவார்கள்" எனப் பரபரப்பு குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளார்.

இது குறித்து பெரம்பலூர் ஏடிஎஸ்பி ரெங்கராஜன் பேசியபோது, ``பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்திருக்கிறார். வழக்கறிஞர் அருள் என்பவரும் புகார் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். இதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து இன்ஸ்பெக்டர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பிறகு யார் குற்றவாளி என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முடித்துக்கொண்டார்.