Published:Updated:

கூடங்குளம் மக்களுடன் விரைவில் பேச்சு: ஸ்ரீகுமார்

கூடங்குளம் மக்களுடன் விரைவில் பேச்சு: ஸ்ரீகுமார்
கூடங்குளம் மக்களுடன் விரைவில் பேச்சு: ஸ்ரீகுமார்

சென்னை, நவ.5,2011

கூடங்குளம் மக்களுடன் விரைவில் பேச்சு: ஸ்ரீகுமார்

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, அப்பகுதி மக்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு உயர்மட்டக் குழு  ஓரிரு வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தும் என்று இந்திய அணுசக்தி ஆணையத் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி தெரிவித்தார்.

தமிழகத் தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியுடன் இந்திய அணு அணுசக்தி ஆணையத் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி தலைமை செயலகத்தில் வெள்ளிக்கிழமம ஆலோசனை நடத்தினார்.

ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் ஸ்ரீகுமார் பானர்ஜி கூறுகையில், "கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் 4 பேர், நெல்லை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகிய 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவும், மத்திய அரசு குழுவும் எப்போது சந்தித்துப்பேசுவது, மக்களின் அச்சத்தை எப்படி போக்குவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம்.

கூடங்குளம் பகுதி மக்களால் எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு எப்படி விளக்கம் அளிப்பது, மக்களின் அச்சத்தை விஞ்ஞானரீதியாக எப்படி போக்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்.

இந்தப் பிரச்னை, மக்களின் மனரீதியான பிரச்சினையாக இருப்பதால் அவசரம், அவசரமாக எதையும் செய்ய முடியாது. பொறுமையாகத்தான் அணுக வேண்டியுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலம் எழுப்பப்பட்டுள்ள அனைத்து சந்தேகங்களுக்கும், மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் விஞ்ஞானரீதியாக எளிய முறையில் பதில் அளிக்க முடியும்.

கூடங்குளம் பகுதியில் பூகம்பமோ, சுனாமியோ வந்தால் பாதிப்பு ஏற்படும் என்றும், கதிர்வீச்சு, சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் இருக்கிறது எனவும், மீன்வளம், மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், கூடங்குளம் அணு மின்நிலைய பாதுகாப்பு குறித்தும் சந்தேகம் எழுப்பப்படுகிறது. இந்த அனைத்து சந்தேகங்களுக்கும், சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர்கள் விஞ்ஞான ரீதியாக பதில் அளிப்பார்கள்.

மக்கள் பிரதிநிதிகளின் குழுவுடன் மத்திய அரசு குழு எப்படி கலந்துரையாட வேண்டும் என்று தலைமை செயலாளருடன் நடத்திய ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். கூடங்குளம் அணு மின்நிலைய பிரச்சினை தொடர்பாக மாநில அரசு சார்பில் எந்த கோரிக்கையும், நிபந்தனையும் தெரிவிக்கவில்லை. பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மிகவிரிவாக ஆராய்ந்த பிறகுதான் எந்தவொரு புதிய அணு மின்நிலைய திட்டமும் தொடங்கப்படும்.

அதன்படிதான், கூடங்குளம் அணு மின்நிலையமும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு 7 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. விரிவாக ஆராய்ந்து உரிய ஒப்புதல் பெறப்பட்ட பிறகே கூடங்குளம் அணு மின்நிலையத் திட்டம் இந்த அளவுக்கு வந்திருக்கிறது.

இதுவரை நிபுணர்கள் மட்டத்திலே பேசப்பட்டு வந்த இந்த விஷயம், தற்போது மக்களிடம் விவாதிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக, அணு மின்நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கேட்கவில்லை. கூடங்குளம் பிரச்சினை தொடர்பாக தலைமை செயலாளரை சந்தித்து தற்போது விவாதித்துள்ளோம். அதனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை உடனடியாக சந்திக்க வேண்டிய தேவை எழவில்லை.

இந்த பிரச்னை குறித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கித்தரும்படி முதல்வரிடம் கேட்டுள்ளேன். கூடங்குளம் அணு மின்நிலைய பிரச்சினை தொடர்பான அனைத்து விஷயங்களும் அவருக்கு நன்றாக தெரியும். நேரம் ஒதுக்கிக்கொடுத்ததும் முதல்வரை நிச்சயம் சந்திப்பேன்.

கூடங்குளத்தில் அணு மின்நிலைய பணிகளை நிறுத்துங்கள் என்று சொல்கிறார்கள். இந்த கூற்றில் அர்த்தமில்லை. இது ஒன்றும் 'ஸ்விட்ச்' 'ஆஃப்' செய்து, 'ஆன்' செய்வது போன்ற பணியில்லை. அணு மின் உற்பத்திக்கு முந்தைய பணிகள் அனைத்தும் 99.5 சதவீதம் முடிவடைந்துவிட்டன. இன்னமும் அரை சதவீதம் மட்டும்தான் பாக்கியுள்ளது. அணுவைப் பிளந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

கூடங்குளம் அணு மின்நிலையத்தில் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அங்குள்ள எந்திரங்கள் துருப்பிடிக்க ஆரம்பித்துவிடும். பராமரிப்பு பணிகளை செய்வதைத்தான் மக்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கூடங்குளம் பகுதியில், காற்றிலுள்ள ஈரப்பதத்தை ஓரளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். பராமரிப்பு என்பது வெறுமனே சுத்தம் செய்வது மட்டுமல்ல. மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என்று கூற முடியாது. மக்களை சந்தித்து அவர்களிடம் உள்ள சந்தேகம், அச்சம், கவலை போன்றவற்றை எவ்வளவு சீக்கிரம் போக்குகிறோமோ அவ்வளவு சீக்கிரம் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்," என்றார் ஸ்ரீகுமார் பானர்ஜி.