ஆசிரியர்களின் கண்டிப்பும், வழிநடத்துதலும் மாணவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். குழந்தைக்கு ஒரு பாடம் பிடிக்காமல் போவதற்கு, ஆசிரியரும் சில நேரம் முக்கிய காரணமாக இருப்பார். ஆனால், சில நேரங்களில் ஆசிரியர்களின் கண்டிப்பால், மாணவர்கள் அவதியுறும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

போபால், ஹபீப்கஞ்சியில் உள்ள பெற்றோர், தங்களின் 5 வயதுக் குழந்தை, பள்ளி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, 22 வயதுடைய பிரயாக் விஸ்வகர்மா என்ற தனியார் ஆசிரியரைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்க நியமித்துள்ளனர். இவரின் வீட்டில் குழந்தைக்குப் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அக்குழந்தை `parrot’ என்ற வார்த்தையைத் தவறாக உச்சரித்து இருக்கிறது.
எழுத்துகளை சரியாகக் கூறவில்லையெனக் குழந்தையை அடித்து, கையை முறுக்கியுள்ளார். இதனால் குழந்தையின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பதவுரியா கூறுகையில், ``குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது சிறார் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் செவ்வாய்க்கிழமையன்று புகார் அளித்ததைத் தொடர்ந்து, அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.