Published:Updated:

கூடங்குளம்: மத்திய - மாநிலக் குழு பேச்சு தோல்வி

Vikatan Correspondent
கூடங்குளம்: மத்திய - மாநிலக் குழு பேச்சு தோல்வி
கூடங்குளம்: மத்திய - மாநிலக் குழு பேச்சு தோல்வி
கூடங்குளம்: மத்திய - மாநிலக் குழு பேச்சு தோல்வி

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுக்கள் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால், கூடங்குளம் விவகாரம் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இடிந்தகரையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர். இந்தப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

கடந்த 3 நாட்களாக முத்து நாயகம் தலைமையிலான மத்திய அரசு நியமித்த 15 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஆய்வு செய்தது.

அணு உலைப் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் பற்றி மூன்று குழுக்களாகப் பிரிந்து அவர்கள் ஆய்வு செய்தனர். இந்தக் குழுவின் ஆய்வுப் பணி நேற்றுடன் நிறைவடைந்தன. பின்னர், அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, அவர்கள் தங்களுடைய அறிக்கையை, நெல்லை மாவட்ட ஆட்சி தலைவரிடம் இன்று அளித்தனர்.

இந்த நிலையில், மாநிலக் குழுவுடன் மத்தியக் குழு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக நிலை ஏற்படவில்லை. மத்தியக் குழு தெரிவித்த கருத்துகளை மாநிலக் குழுவைச் சேர்ந்தவர்கள் முழுமையாக ஏற்கவில்லை.

குறிப்பாக, மாநிலக் குழுவில் இடம்பெற்றிருந்த போராட்ட ஒருங்கிணைப்பு அமைப்பைச் சேர்ந்த புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர் கடும் அதிருப்திக்குள்ளாகினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தங்களது முக்கிய சந்தேகங்களுக்கு மத்தியக் குழு உரிய பதில்களை அளிக்கவில்லை என்று அவர்கள் குறைகூறினார்.

மேலும், மக்களின் பிரச்னைகளை ஆராய்வதற்காக மத்தியக் குழு வரவில்லை என்றும், இனி தமிழக அரசு கேட்டுக்கொண்டால் மட்டுமே அவர்களுடன் மீண்டும் நடத்துவோம் என்றும் மாநிலக் குழுவைச் சேர்ந்தவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

கூடங்குளம் போராட்டக்குழுவால் எழுப்பப்பட்ட அணு உலைப் பாதுகாப்பு தொடர்பான 50 கேள்விகளுக்கு ஏற்கத்தக்க பதில்கள் கிடைக்கவில்லை என்பது அவர்கள் குற்றசாட்டு.

மாநிலக் குழுவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் செல்வராஜ், எஸ்பி விஜயேந்திர பிதாரி உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர்.

கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதே: மத்தியக் குழு

கூடங்குளம் அணு மின் நிலையம் முழுமையான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதாக மத்தியக் குழு தெரிவித்தது.

மேலும், பொதுமக்களின் அச்சத்தைத் தீர்க்கும் வகையில், அனைத்து கேள்விகளுக்கான பதில்களும் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளதாகவும் அக்குழு கூறியது.

அத்துடன், மாநிலக் குழு உடனான பேச்சுவார்த்தையை தோல்வி என்று கூற முடியாது என்றும் மத்தியக் குழு தரப்பு தெரிவிக்கிறது.

முன்னதாக, தங்கள் ஆய்வு குறித்து மத்திய குழுவின் தலைவர் முத்து நாயகம் கூறுகையில், "கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக ஆய்வு செய்தோம். அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பா இருக்கிறது. இந்த அணு மின் நிலையத்தைப் பொருத்தவரையில், மக்கள் நலனும் முக்கியம்; அரசின் நலனும் முக்கியம்.

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளோம்," என்றார்.

மத்திய அரசின் குழுவில் இடம்பெற்றுள்ள சென்னை - அடையாறு புற்றுநோய் மைய இயக்குநர் டாக்டர் சாந்தா கூறுகையில், "கூடங்குளம் அணு மின் நிலையம் நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையத்தால் கதிரியக்க பாதிப்புகள் ஏற்படாது," என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.