Published:Updated:

மொட்டை அடித்து, காவி உடுத்தி... இளம்பெண்களை சிறை வைக்கிறதா ஈஷா யோகா மையம்?

மொட்டை அடித்து, காவி உடுத்தி... இளம்பெண்களை சிறை வைக்கிறதா ஈஷா யோகா மையம்?
மொட்டை அடித்து, காவி உடுத்தி... இளம்பெண்களை சிறை வைக்கிறதா ஈஷா யோகா மையம்?

மொட்டை அடித்து, காவி உடுத்தி... இளம்பெண்களை சிறை வைக்கிறதா ஈஷா யோகா மையம்?

"பிரம்மன் என்றால் தெய்வீகம், சார்யா என்றால் பாதை. தெய்வீகப் பாதையில் நடப்பவர்கள்தான் பிரம்மச்சாரிகள். யோக மார்க்கமான துறவறத்தில், முழு உறுதியாக இருக்கும் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் சிஷ்யர்கள், பிரம்மச்சரிய தீட்சை பெற்றுக் கொள்ளலாம். இந்த பாதையில் செல்பவர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும்," என அறிவித்து சன்னியாசி முறையை நடத்தி வருகிறது கோவையில் உள்ள ஈஷா யோகா மையம்.

ஆனால், 'தங்களது மகள்களை மூளைச்சலவை செய்து, மொட்டை அடித்து சாமியார்களாக்கி விட்டதாக கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கதறியிருக்கின்றனர் கோவையைச் சேர்ந்த ஒரு தம்பதி.  கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் காமராஜ், அவரது மனைவியும். ஈஷா யோகா மையத்தை  மையம் கொண்டு கிளம்பிய இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது இப்போது.

யோகா வகுப்புக்கு வரும் தன்னார்வலர்களை ஆசிரமத்துக்கு அழைத்து, அவர்களை சூழ்நிலையால் ஆக்கிரமித்து, மூளைச்சலவை செய்து சன்னியாசி ஆக்கி,  அவர்களுக்கு மொட்டை போட்டு சாமியார் ஆக்கி விடுவதாக புகார்கள் எழுவது, ஈஷா யோகா மையத்தைப் பொறுத்தவரை புதிதல்ல. காவல்நிலையத்திற்கு செல்லும் புகார்கள் அங்குள்ள குப்பைக் கூடைக்கு சென்றுவிடுவது கடந்தகால நிலைமை. அரிதாவே ஓரிரு புகார்கள் அதிகாரிகள் வரை செல்லும்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் முனைவர் காமராஜ்.  தமிழ்நாடு  வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த இவர், தற்போது தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி சத்தியஜோதி, மகள்கள் கீதா, லதா ஆகியோருடன் யோகா கற்க ஈஷா மையத்துக்கு சென்றிருக்கிறார். 3 நாள் நடந்த யோகா வகுப்பில் கீதாவும், லதாவும் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.

மகள்களுக்கு ஈஷா விரித்ததா வலை?

பின்னர் ஒரு வார வகுப்பு, 10 நாட்கள் வகுப்பு, ஒரு மாத வகுப்பு என ஈஷாவுக்கு தொடர்ச்சியாக சென்ற அந்த பெண்களுக்கு ஒருகட்டத்தில் ஈஷா யோகா மையத்திலேயே பொறுப்புகள் வழங்கப்பட்டன. அங்கேயே தங்கி சேவை செய்து வந்தனர். மாதம் ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். பெற்றோருடன் அவ்வப்போது தொலைபேசியிலும், தேவைப்பட்டால் நேரிலும் தொடர்பில் இருந்தனர்.

ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கீதா, லதா இருவரும் வீட்டிற்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. தொலைபேசியிலும் பேசவில்லை என்பதால் நேரில் சந்திக்க சென்ற காமராஜ்  சத்தியஜோதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மகள்களை பார்க்க அவர்களை ஈஷா யோக மைய நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. பெரிய போராட்டத்திற்குப்பின் மகள்களை பார்த்த காமராஜூம், சத்திய ஜோதியும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றனர். காரணம் மகள்கள் இருவரும் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் சந்நியாசம் பெற்றிருந்தனர். மேலும், 'இனி உங்களை சந்திக்க விரும்பவில்லை' என்றும் கூறி அதிர்ச்சி தந்தனர்.

தங்களது மகள்களை மூளைச்சலவை செய்து, அடிமை போல் நடத்தி தங்களது சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக காமராஜ்- சத்தியஜோதி தம்பதி பரபரப்பு குற்றச்சாட்டை  ஈஷா மையத்திற்கு எதிராக வைத்துள்ளனர்.

மொட்டைப் போட்டு சாமியாராக்கிட்டாங்க...

இது தொடர்பாக காமராஜ், சத்தியஜோதி ஆகியோரிடம் பேசினோம். " வளர்ற பிள்ளைங்களுக்கு யோகா அவசியம்னு நாங்கதான் அவங்களை ஈஷா யோகா வகுப்புக்கு அழைச்சிட்டுப் போனோம். முதல்ல 3 நாள் வகுப்புல துவங்கி, அடுத்து ஒரு வாரம், 10 நாள்னு தொடர்ச்சியா ஈஷா வகுப்புக்கு போனாங்க. அதுல ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. எம்.டெக் படிச்சிட்டு லண்டனில பெரிய தனியார் நிறுவனம் ஒன்றில் அதிக சம்பளத்தில் வேலை பார்த்து வந்தவர் என் மகள் கீதா. இளைய மகள் லதா பி.டெக் முடிச்சிருந்தா. அந்த நேரத்துல என்னென்னமோ காரணம் சொல்லி, என் இரண்டு பெண்களுக்கும் ஈஷாவிலேயே முக்கிய பொறுப்பு கொடுத்தாங்க.

எங்களுக்கு யோகாவில் ஆர்வம் இருந்ததால ஆரம்பத்தில் அதை நாங்களும் அனுமதிச்சோம். நேரம் கிடைக்கறப்போதெல்லாம் இரண்டு பேரும் வீட்டுக்கு வருவாங்க. வராத சந்தரப்பங்கள்ல நாங்க போய் வருவோம். ஆனால் கடந்த 2 மாதங்களா போன் பண்ணலை; நேர்லயும் வரலை. நேரில் போனபோது மகள்கள் இருவரையும் பார்க்க அனுமதிக்கலை. அதை மீறி சந்திச்சோம். 'சந்நியாசம் வாங்கிட்டோம். இனி எங்களை பார்க்க வராதீங்க'னு எங்களுக்கு எதிராகவே பேச வெச்சிட்டாங்க. அவங்களை வசியம் செய்து இப்படி செய்துட்டாங்க. கல்யாணம் ஆகாம இருக்க ரெண்டு பேருக்கும் மொட்டைப் போட்டு சாமியாராக்கிட்டாங்க.

நான்தான் கடவுள்னு சொல்லியும், மோட்சம் தருவதாகச் சொல்லியும் அவர்களை மூளைச்சலவை செய்து இப்படி பண்ணிட்டார் ஜக்கி வாசுதேவ். இத்தனை வருஷம் எங்க பொண்ணுங்களை மூளைச்சலவை செஞ்சு, அங்கேயே வெச்சுக்கிட்டு, இப்போ எங்களை பாக்க முடியாதபடி பண்ணிட்டாங்க. இதை எங்களால தாங்கிக்க முடியலை. எங்க பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணி, பேரன் பேத்தி எடுத்து வாழணும்னு எங்களுக்கு ஆசை. ஆனால் இப்படி பண்ணிட்டாங்க பாவிங்க” என் கண்ணீர் விட்டனர் காமராஜ்- சத்திய ஜோதி தம்பதி.


“எங்க சொத்துக்களை அபகரிப்பதுதான் அவங்க நோக்கம். அதனாலதான் எங்க குழந்தைகளை அரை போதையில வைச்சு, அடிமை மாதிரி நடத்துறாங்க. அமாவாசை, பவுர்ணமி நாட்கள்ல ஒரு மாதிரி ஊக்க மருந்து கொடுக்கறாங்க. அதை சாப்பிட்ட உடன் 30 கி.மீ. தூரம் வரை நடக்க வைக்கிறாங்க.

எல்லாத்துக்கும் மேல ஈஷாவுக்கு வர்றவங்களை ஈர்க்க, எங்கள் பொண்ணுங்களை விற்பனையாளர் மாதிரி நடத்துறாங்க.
மகள்களை மீட்டுத்தரக்கோரி வடவள்ளி போலீஸ் ஸ்டேசன்ல புகார் தந்தேன். போலீஸ் ஸ்டேஷன்ல அவங்க ராஜாங்கம்தான். எங்க பொண்ணுங்க கிட்ட தனியா பேசக் கூட போலீசும், ஈஷா நிர்வாகமும் அனுமதிக்கலை. ஈஷாவில் உள்ள பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட போதை மருந்துதான். இதனால் பெற்றோர்களை பார்க்கும்போது குழந்தைகள் சிரிச்சுக் கிட்டே இருப்பாங்க. இதனால் கோமா நிலைக்கு கூட குழந்தைங்க போக வாய்ப்பிருக்கு. ஈஷாவில் சிறுநீரக திருட்டும் நடக்கிறது. எங்க பொண்ணுங்க மட்டுமில்லாம இன்னும் நிறைய பெண்கள், குழந்தைங்க அங்கே இருக்காங்க. அவங்களை மீட்கணும். ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுத்து எங்களது மகள்களை மீட்டுத்தரணும்" என்றனர் கண்ணீரைத் துடைத்தபடி.

ஈஷாவில் சந்நியாசம் என்றால்?

"ஈஷாவின் மீது இப்படி பல புகார்கள் வந்திருக்கு. சில புகார்கள் போலீஸ் ஸ்டேஷனோட போய்டும். புகார் கொடுத்த உடன் பொண்ணுங்களை வரச்சொல்வோம். ஈஷா ஆட்களோடதான் வருவாங்க. 'எனக்கு 18 வயசு ஆச்சு. என் விருப்பப்படி தான் சன்னியாசம் எடுத்துகிட்டேன். யாரும் என்னை கட்டாயப்படுத்தலை'னு சொல்வாங்க. சட்டப்படி அதுக்கு மேல நாங்க ஒண்ணும் பண்ண முடியாது. அதோட அந்த புகார் முடிஞ்சிடும்," என்றார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

'ஈஷாவில் சந்நியாசம் எடுத்தால் அவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்' என ஈஷா மையத்தை நன்கு அறிந்த சிலரிடம் விசாரித்தோம்.

" ஈஷாவுல சந்நியாசம் எடுக்கிறவங்க முதல்ல குடும்ப தொடர்பை முழுமையா நிறுத்திக்கணும். அவங்களோட கல்விச் சான்றிதழ்கள் முதற்கொண்டு அனைத்து ஆவணங்களும் ஈஷா மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் போயிடும். சம்பந்தப்பட்டவங்க பேர்ல இருக்கிற சொத்து, நகை, பணம் போன்றவை கூட ஈஷாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள்தான் என்னவென்பது தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அரை போதையில்தான் இவர்கள் இருப்பார்கள்," என்றனர் அவர்கள்.

'நாங்க யாரையும் கட்டாயப்படுத்தலை'

இது தொடர்பாக ஈஷா மைய நிர்வாகிகளை தொடர்புகொண்டு விளக்கம் கேட்க முயன்றோம். நேரில் சந்திக்க மறுத்தனர். மக்கள் தொடர்பு அலுவலகத்தின் முக்கிய அதிகாரி என்று சொல்லிக்கொண்ட ஒருவரிடம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து தொலைபேசியில் பேசினோம்.

" காமராஜின்  மகள்கள் இருவரும் விருப்பப்பட்டேதான் இங்கு வந்தார்கள். எப்போது விரும்பினாலும் அவர்கள் இங்கிருந்து செல்லலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவர்கள் மேஜர் என்பதால் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் 'பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை' என சொல்லிவிட்டார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும். இப்போது விரும்பினால் கூட அவர்கள் இங்கிருந்து செல்லலாம். அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை," என்று சொல்லி நமது அடுத்த கேள்விக்கு வழிகொடுக்காமல் தொடர்பை துண்டித்தார்.


கர்மாக்களை கழிப்பது... துறவறம்!

- ச.ஜெ.ரவி
 

அடுத்த கட்டுரைக்கு