Published:Updated:

கூடங்குளம் விவகாரம்: 4 என்.ஜி.ஓ.க்கள் மீது வழக்குப் பதிவு

Vikatan Correspondent
கூடங்குளம் விவகாரம்: 4 என்.ஜி.ஓ.க்கள் மீது வழக்குப் பதிவு
கூடங்குளம் விவகாரம்: 4 என்.ஜி.ஓ.க்கள் மீது வழக்குப் பதிவு
கூடங்குளம் விவகாரம்: 4 என்.ஜி.ஓ.க்கள் மீது வழக்குப் பதிவு

புதுடெல்லி: கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவுக்கு நிதியுதவி செய்ததாக சந்தேகிக்கப்படும் 4 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது சிபிஐ-யும்,  மற்ற இரு தொண்டு நிறுவனங்கள் மீது தமிழக குற்றப்பிரிவு காவல்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.  அந்த தன்னார்வ நிறுவனங்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

இதுகுறித்து மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் செவ்வாய்க்கிழமை மாலை நிருபர்களிடம் கூறுகையில், "வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்று வரும் 4 தன்னார்வ அமைப்புகள், அந்தப் பணத்தை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு கொடுத்துள்ளன. இதுபற்றி மத்திய உள்துறை தீவிர விசாரணை நடத்தியது.

இதைத்தொடர்ந்து அந்த 4 தன்னார்வ அமைப்புகள் மீதும் சிபிஐ வழக்குகள் பதிவு செய்து உள்ளன. வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக அந்தத் தொண்டு நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக குற்றபிரிவு காவல்துறையும் இதேபோல் வழக்குகள் பதிவு செய்துள்ளன.

இந்த முறைகேட்டை தொடர்ந்து, மேலும் அந்த நிறுவனங்கள் போராட்டக்காரர்களுக்கு நிதி உதவி அளிப்பதை தடுக்கும் வகையில், அந்த 4 தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன," என்றார் ஆர்.கே.சிங்.

முன்னதாக, அமெரிக்காவின் 'சயின்ஸ்' இதழுக்குப் பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங், தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு அமெரிக்கா மற்றும் சில வெளிநாடுகளைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி செய்து வருவதாகக் கூறியிருந்தார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மறுத்ததுடன், தன் மீது அவதூறு குற்றச்சாட்டு சுமத்திய பிரதமர் மன்மோகன்சிங், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.