Election bannerElection banner
Published:Updated:

டெல்லி: பிபிஇ கிட், தண்ணீர் வசதி கேட்ட செவிலியர்கள்’ - பணி நீக்கம் செய்த மருத்துவமனை!

செவிலியர்கள்
செவிலியர்கள் ( மாதிரி புகைப்படம் )

டெல்லியில் தங்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறிய செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள ஹாம்டார்ட் மருத்துவமனையில் பணிப்புரிந்து வந்த சுமார் 84 செவிலியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அவர்கள் தங்களுக்கான முழு பாதுகாப்பு கவச உடை (PPE) முகமூடிகள் மற்றும் குடிநீர் ஆகியவை கேட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பெரும்பாலான செவிலியர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கக் கடிதம் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

செவிலியர்கள்
செவிலியர்கள்
மாதிரி புகைப்படம்

``எனக்கு கொரோனா பாசிட்டிவ் அதனால் தற்போது வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறேன். ஹாம்டார்ட் மருத்துவமனையில் பணி செய்த எனக்கும் பணி நீக்கக் கடிதம் வந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக நாள் ஒன்றுக்கு 12 முதல் 14 மணி நேரம் வரை வேலை செய்த எங்களுக்குக் கிடைத்த பெரும் துன்புறுத்தல் இது. மருத்துவமனை நிர்வாகம் விரும்பினால் எங்களின் ஒப்பந்தம் முடியும்போதே எங்களைப் பணி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள்தான் எங்களை மேலும் தொடருமாறு கேட்டார்கள். இப்போது எங்களுக்கான அடிப்படை வசதிகளைக் கேட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளோம்” எனப் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு செவிலியர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசியுள்ள மற்றொரு செவிலியர், ``நாங்கள் பணி நேரத்தில் கிழிந்த சீருடைகளைத்தான் அணிவோம். ஒரு செவிலியருக்கு 25 நாளுக்கு தலா ஐந்து அறுவைசிகிச்சை முகமூடிகள் மட்டுமே வழங்கப்படுகிறது. அதிலும் என் 95 மாஸ்க் கூட இல்லை. கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்பத்தில் சில நாள்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக எங்களுக்குப் போக்குவரத்து வசதிகள் செய்துதரப்பட்டது. பின்னர், அது திரும்பப் பெறப்பட்டது. போக்குவரத்து காரணமாக வேலைக்கு வரமுடியாத பல செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

செவிலியர்கள்
செவிலியர்கள்
மாதிரி புகைப்படம்

டெல்லி என்.சி.ஆர் ஐக்கிய செவிலியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரான்சிஸ், ஹாம்டார்ட் மருத்துவமனையில் செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், ``செவிலியர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை. அவர்களின் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது. நாங்கள் மறு மதிப்பீட்டு வாரியத்தை அமைத்துள்ளோம். அனைவரையும் நேர்காணலுக்கு வரவேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளது.

News Credits : Times of India

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு