Published:Updated:

ம.பி அதிர்ச்சி: `பயிர்களை அழிக்க வந்த அதிகாரிகள்!’ - தீ வைத்துக்கொண்ட பெண்

தீ வைத்துக்கொண்ட பெண்
தீ வைத்துக்கொண்ட பெண்

``ஷப்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்ததாகப் புகார் வந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் கிராமத்துக்குச் சென்றனர். அப்போது அவர்கள் அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்கினர்.”

கொரோனா காலத்தில் விவசாயிகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் அவர்களை மேலும் துன்புறுத்துவதாக வரும் செய்திகள் சக விவசாயிகள் மற்றும் மக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால் மாவட்டத்தில் இருந்து சுமார் 153 கி.மீ தொலைவில் உள்ள தேவாஸ் எனும் மாவட்டத்தில் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ன் ஒருவர் தீ வைத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அட்வாஸ் என்ற கிராமத்தில் அதிகாரிகளின் முன்பு தீ வைத்துக்கொண்ட பெண்ணின் கணவர் ரம்ஜான் கான் சம்பவம் தொடர்பாகப் பேசுகையில், ``மாவட்ட வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து ஜே.சி.பி இயந்திரத்துடன் எங்கள் பகுதிக்கு வந்து எங்களது பயிர்களை அழிக்க முற்பட்டனர். பயிற்களை அழிக்க வேண்டாம் எனக் கெஞ்சியும் அவர்கள் அதைக் கேட்க மறுத்துவிட்டனர். நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலத்தில் வளர்ந்து வந்த பயிரை நம்பியே எங்களது வாழ்க்கை இருக்கிறது. ஆனால், அதிகாரிகள் என் மனைவி ஷப்ரா மற்றும் என்னை அடித்துத் தள்ளினர். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன்பு மண்ணெண்ணெயை தன்மீது ஊற்றி என் மனைவி தீயும் வைத்துக்கொண்டாள்” என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

`ஆட்கள் கிடைக்கலை; பழைய மோட்டார் பாகங்களில் புதிய கருவி!’ - மயிலாடுதுறை விவசாயி அசத்தல்

தீக்காயங்களால் பாதிப்படைந்த ஷப்ரா இந்தூரில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. வீடியோவில் ஜே.சி.பி பயிர்களை அழிப்பது மற்றும் அதிகாரிகள் முன்பு அந்தப் பெண் தீ வைத்துக்கொள்ளும் காட்சிகள் ஆகியவை பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது கண்டனத்தைப் பதிவு செய்ததோடு இதுதொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரிகள்
அதிகாரிகள்

காவல்துறை கண்காணிப்பாளர் ஷிவ்தயால் சிங் இதுதொடர்பாகப் பேசுகையில், ``ஷப்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்ததாகப் புகார் வந்தது. இந்த வழக்கு தொடர்பான பிரச்னைகள் கடந்த வாரம் வருவாய் நீதிமன்றத்தில் முடித்தும் வைக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் கிராமத்துக்குச் சென்றனர். அப்போது ஷப்ரா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால், அதிகாரிகள் காயமடைந்தனர். பின்னர், அவர் தனது துப்பட்டாவில் தீ வைத்துக்கொண்டார்” என்று தெரிவித்தார். ஷப்ரா மற்றும் குடும்பத்தினர் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குகளையும் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

கரூர்: `ஆடிப்பட்டம் தேடி விதை!’ - மாணவர்களை இயற்கை விவசாயி ஆக்கிய ஆசிரியர்
அடுத்த கட்டுரைக்கு