Published:Updated:

4 உள்நோயாளிகள் மரணம்... விளக்க அறிக்கை வெளியிட்ட கீழ்ப்பாக்கம் மருத்துவமனை!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் உள்ள 5-வது எண் வார்டில், கடந்த இரு வாரங்களில் மாற்றுத்திறனுடைய 4 மன நோயாளிகள் மரணமடைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அரசு மனநல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்
அரசு மனநல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் ( Photo: Vikatan )

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் ஒரே வார்டில் இருந்த 4 உள்நோயாளிகள் மரணமடைந்துள்ள அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாகப் பேசிய மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நம்பிராஜன், ``சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் 5-வது எண் வார்டில், கடந்த இரு வாரங்களில் மாற்றுத்திறனுடைய 4 மன நோயாளிகள் மரணமடைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

நம்பிராஜன்
நம்பிராஜன்

நோய்த்தொற்று ஏற்பட்டதன் விளைவே அவர்களுடைய இந்த மரணத்துக்கு காரணம் என்று அங்குள்ள பணியாற்றும் ஒருவர் எங்களுக்குத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அந்த வார்டில் இருந்த 80-க்கும் மேற்பட்ட மனநோயாளிகளில் 15-க்கும் மேற்பட்டோருக்கு தொற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

மேலும், பலர் இந்நோய் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகத் தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளில் இருவர், இரு வாரங்களுக்கு முன்பே இறந்துவிட்டனர். அந்த இருவருடைய இறப்புக்கான காரணங்களை அறியாமல் மருத்துவமனை நிர்வாகம் மூடி மறைத்துவிட்டதாக எங்களுடைய சங்கத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனிடையே, கடந்த 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு, அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு இரு நோயாளிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் மாற்றுத்திறனுடைய ஆண் மனநோயாளி கடந்த 18-ம் தேதி (திங்கள்கிழமை) உயிரிழந்துள்ளார். அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனுடைய பெண் மன நோயாளி 20-ம் தேதி உயிரிழந்துள்ளார். தற்போது ஒரு ஆண் மனநோயாளி மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் சொல்கின்றனர்.

முதலமைச்சருக்கு புகார் கடிதம்
முதலமைச்சருக்கு புகார் கடிதம்

உயிரிழந்த இந்த நான்கு பேரும் நீர்ச்சத்து குறைந்து, சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு இறந்துபோனதாகக் கூறுகின்றனர். இது ஒரு தீவிரத் தொற்றுநோயாக இருக்கலாம் என எங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்தவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரிடம் புகார் கொடுத்துள்ளோம். மேலும், மாநில மனித உரிமை ஆணையம், மாற்றுத்திறன் நல ஆணையகத்திலும் புகார் கொடுத்துள்ளோம்'' என்றார்.

இதுதொடர்பாக விளக்கம் பெற கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையைப் பலமுறை தொடர்புகொண்டோம். அவர்கள் நமது அழைப்பை ஏற்கவில்லை. இதனிடையே, கீழ்ப்பாக்கம் மன நலமருத்துவமனை அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் ``அரசு மன நலக் காப்பகத்திலிருந்து நோயாளிகளை உடல்நல பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்புவது வழக்கமான நடைமுறையாகும். அவ்வாறு அனுப்பப்பட்ட நோயாளிகளில் ஒருவர் மூளைத்தொற்றினாலும், மற்றொருவர் வலிப்பு பாதிப்பினாலும் உயிரிழந்தார். இருப்பினும், நோயாளிகள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகள் கிண்டியில் உள்ள கிங் பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், பரிசோதனையின் முடிவில் கிருமித்தொற்று எதுவும் இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Vikatan

இந்த அறிக்கை வந்த பின்பும் மீண்டும் நம்மைத் தொடர்பு கொண்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த நம்பிராஜன், வலிப்பு நோய் மற்றும் மூளைத் தொற்று என்றால், உணவுத் தண்ணீரை ஏன் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் போன்ற பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இந்த மரணங்களில் உள்ள சந்தேகங்கள் தீர்வு பெற வேண்டும் என்றால் சடலங்களை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். தனியான விசாரணைக்குழுவை உருவாக்க வேண்டும்" என்றார்.