Published:Updated:

பிரேசில்:`பெண்ணின் கழுத்தில் ஏறி நின்ற காவலர்!’ - பணியிடை நீக்கம் செய்த ஆளுநர்

பெண்ணின் கழுத்தில் ஏறி நிற்கும் காவலர்
பெண்ணின் கழுத்தில் ஏறி நிற்கும் காவலர்

``நான் அந்தத் தருணத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். அவ்வளவு அதிகமாக எனது கழுத்தை அவர் இறுக்கினார்.”

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட், காவலர்களால் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆப்பிரிக்க - அமெரிக்க மக்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து கேள்விகளை எழுப்பி போராட்டங்களை நடத்தி வந்தனர். உலகின் பல நாடுகளிலும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றது. காவலர்களின் கொடூரமான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கேள்விகள் எழுந்தன. சில நாடுகளில் காவலர்கள் கழுத்தைப் பிடித்து அழுத்தி கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை அரசு தடை செய்வதாகவும் அறிவித்தது. இந்தச் சம்பவம் தொடர்பான பதற்றங்களே இன்னும் முடியாத நிலையில் பிரேசிலில் காவலர் ஒருவர் ஆப்பிரிக்க - பிரேசிலியர் ஒருவரின் கழுத்தின் மீது ஏறி நின்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் உள்ள சவோ பவுலோ பகுதியில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆப்பிரிக்க பிரேசிலிய பெண் ஒருவர் சண்டையிட்டதைத் தொடர்ந்து அந்த அதிகாரி பெண்ணின் கழுத்தின் மீது ஏறி நின்றுள்ளார். இதுதொடர்பாக வெளியான வீடியோவில், காவல்துறை அதிகாரி தனது துப்பாக்கியை வைத்து ஒரு நபரை குறி வைக்கிறார். அந்த நபரை தரையில் கிடத்தி கைவிலங்கையும் அங்கிருந்த காவலர்கள் அணிந்துள்ளனர். பின்னர், அவருடன் இருந்த 51 வயதான பெண் ஒருவரிடம் சென்று அவரையும் தரையில் தள்ளி அவருடைய கழுத்துப் பகுதியின் மீது தனது பூட்ஸ் காலுடன் ஏறி அந்த அதிகாரி நின்றுள்ளார். பின்னர், அவருடன் இருந்த நபர்களை காவலர்கள் கைது செய்து இழுத்துச் செல்கின்றனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் வீடியோ மற்றும் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

`நோ ஜஸ்டிஸ்.. நோ பீஸ்..’ - காவலரால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்; பற்றியெரியும் அமெரிக்கா

ஐந்து குழந்தைகளின் தாயான இந்தப் பெண் தன் நண்பருக்கும் காவலருக்கும் இடையே சமாதானத்தை உருவாக்க முயற்சி செய்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையினருக்கு கிடைத்த புகாரை அடுத்த அந்த நபரை விசாரிக்க அதிகாரிகள் வந்ததாகவும் கைது செய்யப்படுவதற்கு முன்பு அந்த நபருக்கும் காவலர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. காவலர் தனது கழுத்தின் மீது ஏறி நின்றது தொடர்பாக அந்தப் பெண் பேசும்போது, ``நான் அந்தத் தருணத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். அவ்வளவு அதிகமாக எனது கழுத்தை அவர் இறுக்கினார்” என்று தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் காயமும் அடைந்தார். மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையும் பெற்றுள்ளார். அவரது காலிலும் சில காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

சாவோ பவுலோ பகுதியின் ஆளுநர் டோரியா இந்தச் சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறை வீரர்கள் அல்லது மாநிலத்தில் பணிபுரியும் எந்த அதிகாரிகளும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்பதைத் தெளிவுபடுத்த விடும்புகிறேன். ஒரு சில அதிகாரிகளின் கண்டிக்கத்தக்க நடவடிக்கைகள் தங்களது பணியை சிறப்பாகச் செய்யும் அதிகாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன” என்று தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் இருவரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகளின் மனிதத்தன்மையற்ற செயலை பலரும் கண்டித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். மக்களின் மீது காவல்துறையினர் தொடர்ந்து நடத்தும் வன்முறைகள் தொடர்பாகவும் விவாதங்கள் எழுந்துள்ளன.

`நோ போலீஸ்.. நோ பீஸ்!’ -`chokeholds' தடைக்கு எதிராகக் கொந்தளித்த பிரான்ஸ் காவலர்கள்
அடுத்த கட்டுரைக்கு