Published:Updated:

`மனிதாபிமானமற்ற செயல்; போலீஸார் அத்துமீறல்’ - ஆந்திர அரசு மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை!

மருத்துவர் சுதாகர்
மருத்துவர் சுதாகர்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அரசு மருத்துவர் ஒருவரை போலீஸார் சாலையில் வைத்து அடித்து உதைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

விசாகப்பட்டினத்தின் அக்கயாபாலம் பகுதி சாலையில் போலீஸார் ஒருவரை அடித்து உதைத்து இழுத்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. போலீஸாரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டவர் அரசு மருத்துவர் என்பது தெரியவந்தது. சட்டை அணியாத அவரின் கைகளை போலீஸார், பின்னால் கட்டியபடி இழுத்து வருகிறார்கள். பின்னர், அவரை ஒரு அடித்து உதைத்துடன், ஆட்டோ ஒன்றில் ஏற்றி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பொதுமக்கள் பலர் பார்த்துக் கொண்டிருக்க, நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

மருத்துவர் சுதாகர்
மருத்துவர் சுதாகர்

போலீஸாரால் தாக்கப்பட்ட அந்த மருத்துவர் பெயர் சுதாகர் என்பதும், அவர் நர்சிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராகப் பணிபுரிந்து வந்தார் என்பதும் தெரியவந்தது. அதேபோல், கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அரசு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என்று கடந்த மாதம் குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார். இதையடுத்து துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், மருத்துவரை போலீஸார் தாக்கிய சம்பவத்துக்கு எதிர்க்கட்சியான் தெலுங்குதேசம் கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி எப்படி நடக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி என்று தெலுங்கு தேசம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து பேசிய அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் வர்லா ராமையா, ``போலீஸாரின் இந்த செயல் மனிதாபிமானமற்றது. அரசை நோக்கி கேள்வி எழுப்பிய பட்டியலின மருத்துவர் மீது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அவர்களது நடவடிக்கையை நியாயப்படுத்த போலீஸாரும் ஆளும்கட்சியினரும் அவரை மனநலன் குன்றியவராக சித்திரிக்க முயலுகின்றனர். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்று கொதித்தார்.

மருத்துவர் சுதாகர்
மருத்துவர் சுதாகர்

இந்தநிலையில், இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஆர்.கே.மீனா, ``அக்கயாபாலம் பகுதியில் ஒருவர் பொதுஇடத்தில் தகராறு செய்வதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதிக்குக் காவலர்கள் சென்றனர். அங்கு அவர் அநாகரிகமாக நடந்துகொண்டிருக்கிறார். போலீஸாரிடமும் அவர் அத்துமீற முயன்றதோடு காவலர் ஒருவரின் போனையும் பிடுங்கியிருக்கிறார். அவர் குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.

`தமிழகம் இரண்டாம் கட்டத்தில் இல்லை, நான்காம் கட்டத்துக்கு நகர்ந்துவிட்டது!'- அதிரவைக்கும் மருத்துவர்

விசாரணையில் அவர் நர்சிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் சுதாகர் என்பதும் தற்போது அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த விவகாரத்தை சரியாகக் கையாளாத காவலர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு