Published:Updated:

`வரிசை எண் இல்லை; ஒவ்வொரு கட்டிலும் சீட்டிங்!' - பக்தர்களுக்கு அதிர்ச்சிகொடுத்த ராமேஸ்வரம் கோயில்

தீர்த்த டிக்கட்
தீர்த்த டிக்கட் ( உ.பாண்டி )

கோயில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் கோயிலின் தற்கால ஊழியர் ரூ.78 லட்சம் கையாடல் செய்தது, தரிசனம் செய்வதற்கான டிக்கெட் வழங்கும் எலெக்ட்ரானிக் கையடக்கக் கருவியைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது என அடுத்தடுத்த முறைகேடுகள் நடந்துள்ளன.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தீர்த்தமாடச் செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சீட்டுகளில் முறைகேடு செய்து, பல லட்ச ரூபாய் சுருட்டப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்

இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கிவருவது ராமேஸ்வரம். இங்குள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை பக்தர்கள் தங்கள் வாழ்நாள் கடமையாகக் கருதுகின்றனர். இவ்வாறு தீர்த்த நீராடச் செல்லும் பக்தர்களிடம், திருக்கோயில் நிர்வாகம் கட்டணமாக ரூ.13, இறவைக் கூலியாக ரூ.12 என தலா 25ரூபாய், திருக்கோயில் நிர்வாகத்தினால் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

கோயிலில் தீர்த்த நீராட செல்லும் பக்தர்கள், இதற்கென கோயில் பிராகாரத்தில் உள்ள கவுன்டரில் பணம் செலுத்தினால், கையில் அணிந்து செல்லக்கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்படும். வரிசை எண்களுடன்கூடிய இந்தச் சீட்டை பக்தர்களின் கைகளில் கட்டி விடுவதற்கென ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், பக்தர்களுக்கு வழங்கப்பட்ட தீர்த்தக் கட்டண அனுமதி டிக்கெட்டுகளில் வரிசை எண்கள் இல்லாமல் இருந்த சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் கையில் தீர்த்த டிக்கட்
பக்தர்கள் கையில் தீர்த்த டிக்கட்

கோயிலில், பாதுகாப்பு மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள், தீர்த்தக் கட்டணச்சீட்டு அணிந்துவந்த பக்தர்களை ஆய்வு செய்தபோது, சுமார் 38 பேரிடம் வரிசை எண் இல்லாத கட்டணச் சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவல், கோயில் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. இணை ஆணையர் கல்யாணி, இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், வரிசை எண் அச்சிடப்படாத மேலும் 180 சீட்டுகள் கவுன்டரில் இருந்து கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, டிக்கெட் கொடுக்கும் கடைநிலைப் பணியாளர்கள் சந்தோஷ், பிரதாப் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

`போலி பில் மூலம் சுருட்டப்பட்ட ரூ.74 லட்சம்!'‍- சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட ராமேஸ்வரம் கோயில் ஊழல்

இதைத் தொடர்ந்து, அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தீர்த்த டிக்கெட் கட்டுகளை அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். தலா 100 டிக்கெட்டுகள் கொண்ட ஒவ்வொரு கட்டிலும் மேலும் சில டிக்கெட்டுகள் வரிசை எண் அச்சிடப்படாமல் இருந்தது தெரியவந்தது. தீர்த்த டிக்கட்டுகள் அச்சடிக்கும் அச்சகத்தின் துணையுடன் கோயில் ஊழியர்கள் சிலர் இதுபோன்ற வரிசை எண் இல்லாத சீட்டுகளை வரவழைத்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தினசரி நூற்றுக்கணக்கான டிக்கெட்டுகள் கணக்கில் காட்டப்படாமல் விநியோகம் செய்து, அதன்மூலம் கிடைத்த தொகையை அவர்கள் பங்கிட்டுக் கொள்வதை வழக்கமாகக் கொண்ருந்ததாகக் கூறப்படுகிறது.

எண்கள் இல்லா டிக்கட்
எண்கள் இல்லா டிக்கட்
உ.பாண்டி

இந்நிலையில், பல லட்ச ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருக்கக் கூடும் என சந்தேகத்தை எழுப்புகின்றனர். இந்தப் புகார் தொடர்பாக, டிக்கெட் அச்சடித்தல், பாதுகாத்தல், விநியோகித்தல் போன்ற பொறுப்புகளில் உள்ள கோயிலின் முக்கிய ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், டிக்கெட்டை விற்பனை செய்த கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும் அபராதம் விதித்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கெனவே கோயில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் கோயிலின் தற்கால ஊழியர் ரூ.78 லட்சம் கையாடல் செய்தது, தரிசனம் செய்வதற்கான டிக்கெட் வழங்கும் எலெக்ட்ரானிக் கையடக்க கருவியைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது, கோயிலின் மூலவரான ராமநாத சுவாமியை செல்போனில் படம் பிடித்து பக்தருக்கு விற்பனை செய்தது என அடுத்தடுத்த முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், தற்போது வரிசை எண் அச்சிடப்படாத தீர்த்தக் கட்டணச் சீட்டில் நடந்துள்ள முறைகேடு, கோயிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு