Published:Updated:

`அரசின் உத்தரவு பாமரனுக்கு மட்டும்தானா?!'- சிமென்ட் ஆலை திறப்பால் கொந்தளிக்கும் அரியலூர் மக்கள்

சிமென்ட் ஆலை!
சிமென்ட் ஆலை!

அங்கிருந்து கொரோனா வைரஸைத் தொற்றிக்கொண்டு வந்து இங்கு பரப்பிவிட்டால் என்னசெய்வது. ஊரடங்கு உத்தரவு காரணமாக எந்த ஆலைகளும் இயங்கக்கூடாது என்று அரசு சொல்கிறது.

கொரோனா வைரஸ் விவகாரத்தால் நாடே நிலைகுலைந்து நிற்கும் நிலையில் அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி சிமென்ட் ஆலைகளிலிருந்து லாரிகள் மூலம் சிமென்ட் எடுத்துச் செல்வதைக் கண்டித்து பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் உத்தரவு பாமரனுக்கு மட்டும் தானா? இவர்களுக்குப் பொருந்தாதா என்று ஆவேசப்படுகிறார்கள் மக்கள்.

அம்மா சிமெண்ட்
அம்மா சிமெண்ட்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் அதைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இதுவரையில் நான்கு பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் விதிமுறைகளை மீறி தனியார் சிமெண்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட சிமென்ட் இரவு நேரத்தில் 200க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு வருகிறது.

சிமென்ட் ஆலை முற்றுகை
சிமென்ட் ஆலை முற்றுகை

இந்த லாரிகளில் எடுத்துச்செல்லப்படும் சிமென்டுகள் வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் லாரி டிரைவர்கள் மற்றவர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி அவர்கள் மீண்டும் வி.கைகாட்டிக்கு வரும்போது அவர்கள் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதனால் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அப்பகுதி மக்கள் நேற்று ஆலையை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையைச் சுமுகமாக முடித்தார்கள். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலரிடம் பேசினோம். ``இம்மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகளும் 166க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சுரங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் சிமென்ட் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த லாரிகளில் எடுத்துச்செல்லப்படும் சிமென்ட்கள் வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படும் போது, அங்கிருந்து கொரோனா வைரஸைத் தொற்றிக்கொண்டு வந்து இங்கு பரப்பிவிட்டால் என்னசெய்வது?

சிமென்ட் ஆலை
சிமென்ட் ஆலை

ஊரடங்கு உத்தரவு காரணமாக எந்த ஆலைகளும் இயங்கக்கூடாது என்று அரசு சொல்கிறது. ஆனால் இங்கு மட்டும் செயல்படுவது எந்த விதத்தில் நியாயம். அரசின் உத்தரவு பாமரனுக்கு மட்டும் தானா? இவர்களுக்குப் பொருந்தாதா என்ற ஆவேசத்தில்தான் நாங்கள் முற்றுகைக் போராட்டம் நடத்தினோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். இல்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்" என ஆவேசமாகப் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு