அரசியல்
அலசல்
Published:Updated:

இன்னொரு லாக்கப் டெத்? - அருப்புக்கோட்டை சர்ச்சை!

மக்கள் கண்காணிப்பகம் விசாரணையின்போது...
பிரீமியம் ஸ்டோரி
News
மக்கள் கண்காணிப்பகம் விசாரணையின்போது...

தங்கப்பாண்டியனின் உடற்கூறாய்வு அறிக்கையின்படி, அவரது உடலில் 11 இடங்களில் காயம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு மணிகண்டன், விக்னேஷ் எனத் தொட்டுத் தொடரும் ‘லாக்கப் டெத்’ குற்றச்சாட்டு வரிசையில், அருப்புக்கோட்டை தங்கப்பாண்டியன் மரணமும் இணைந்திருக்கிறது!

சந்தேகத்தின்பேரில் கடந்த 13-9-2022 அன்று கைதுசெய்யப்பட்ட அருப்புக்கோட்டை செம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன், மறுநாள் காலையிலேயே இறந்தார். ‘உடலை வாங்க மாட்டோம்’ என்று குடும்பத்தினர் போராட்டத்தில் இறங்க... விவகாரம் பெரிதானது.

தங்கப்பாண்டியனின் தந்தை தங்கமாரி நம்மிடம், “13-ம் தேதி விடிகாலையில தங்கப் பாண்டியை ஊர்க்காரங்க யாரோ கம்பத்துல கட்டிவெச்சு அடிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டுப் போனோம். ஆனா, அதுக்குள்ள போலீஸ் அவனைப் புடிச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. மதியம் 12 மணிக்கு, ‘அவனுக்கு மனசு சரியில்லை... ஆசிரமத்துல சேருங்க’ன்னு சொன்னாங்க போலீஸ்காரங்க. அங்கே கூட்டிட்டுப் போய் சேர்த்தோம். மறுநாள், அருப்புக்கோட்டை ஆஸ்பத்திரில எம்மகன் பிணத்தைத்தான் காட்டினாங்க” என்றார் அழுதபடியே.

தங்கப்பாண்டியன்
தங்கப்பாண்டியன்

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகரிடம் பேசினோம். “எம்.டி.ஆர் நகரைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்பவர் வீட்டில் சுவர் ஏறிக் குதித்திருக்கிறார் தங்கப்பாண்டியன். ஏற்கெனவே, அப்பகுதியில் பணம், நகைக்காக இரட்டைக் கொலை நடந்திருக்கிறது. இதனால், பொதுமக்கள் தங்கப்பாண்டியனைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையின்போது, அவரின் நடவடிக்கைகள் விசித்திரமாக இருக்கவே, அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்து, மறுவாழ்வு மையத்தில் சேர்க்கவைத்தோம். ஆனால், ‘இரட்டைக் கொலைக் குற்றவாளி தங்கப்பாண்டியன்தான், அவரை விடுவிக்கக் கூடாது’ என எம்.டி.ஆர் நகர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை மீண்டும் அழைத்துவந்து விசாரித்தோம். அப்போது ‘நான்தான் அந்த இரட்டைக் கொலையைச் செய்தேன்’ என்று அவர் சொன்னார். நிதானம் இல்லாமல் அவர் பேசுவதைவைத்து எந்த முடிவுக்கும் வர முடியாதென்பதால் வழக்கு பதிவுசெய்த பிறகு, மீண்டும் அவரை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பிவைத்தோம்” என்றார்.

மக்கள் கண்காணிப்பகம் விசாரணையின்போது...
மக்கள் கண்காணிப்பகம் விசாரணையின்போது...

மக்கள் கண்காணிப்பக வழக்கறிஞர்களிடம் பேசியபோது, “தங்கப்பாண்டியனின் உடற்கூறாய்வு அறிக்கையின்படி, அவரது உடலில் 11 இடங்களில் காயம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் மரணத்துக்கான காரணத்தை அறிய, ‘திசு’ மாதிரி வேதியியல் பகுப்பாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. நியாயம் கிடைக்கும் வரை சட்டப் போராட்டம் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றனர்.

வழக்கு சி.பி.சி.ஐ.டி-யிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தங்கப் பாண்டியன் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவரா... அவர் சுவர் ஏறிக் குதித்ததன் காரணம் என்ன... உடலிலுள்ள காயங்கள் எங்கு எப்போது ஏற்பட்டவை என்று பல குழப்பங்கள் இந்த வழக்கில் இருக்கின்றன. உண்மையை வெளிக்கொண்டு வருமா சி.பி.சி.ஐ.டி?